விளிம்புநிலை மனிதர்களின் விசும்பல்களை பாடிய கலைஞனுக்கு நோபல் பரிசு: வைரமுத்து வாழ்த்து!

2016ஆம் ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசு வென்றுள்ள அமெரிக்க பாடலாசிரியர்-பாடகர்-இசை ஆளுமை பாப் டிலானுக்கு கவிஞர் வைரமுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

வைரமுத்து வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:

இந்த ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் பாப் டிலானுக்கு இசை – இலக்கியம் என்ற இரண்டு உலகங்களும் தங்கள் வாழ்த்துப் பூக்களைத் தூரத்திலிருந்தே தூவுகின்றன.

ஓர் இலக்கியப் படைப்பாளன் என்ற நிலையில் அல்லாமல், ஓர் இசைக்கவி ஆசிரியன் என்ற அடிப்படையில் பாப் டிலான் பரிசு வென்றிருக்கிறார். பாடலும் இலக்கியம்தான் என்று நோபல் பரிசுக்குழு தன் இலக்கணம் தாண்டிவந்து இலக்கியத்தைப் பெருமைப்படுத்தியிருக்கிறது. இதை முன்மாதிரி இல்லாத ஒரு முதல்மாதிரி என்று சொல்லலாம்.

ராத்திரி விடுதிகளில் நாட்டுப் பாடல்கள் பாடித் தன் இசைவாழ்வைத் தொடங்கிய ஒரு கலைஞன், இன்று நோபல் பரிசு பெற்றிருப்பது உலகப் படைப்பாளிகளுக்கு உற்சாகம் தருவதாகும்.

இன்று கவிதை என்பது புத்தகத்தில் மட்டுமல்ல – நுண்கலைகளோடு தன்னை இணைத்துக்கொண்டும் இயங்கக் கூடிய கலைவடிவம் என்பதற்கு இந்தப் பரிசே சாட்சி.

உலக சமாதானம் – போருக்கு எதிரான போர் – மனித உரிமைகள் என்ற உலகக் குரல்களோடு ஓங்கி ஒலிக்கின்றன பாப் டிலான் பாடல்கள்.

“என்ன ஒலி கேட்டாய்
என் நீலவிழி மகனே?
நான் எச்சரிக்கும் இடியின்
குமுறல் கேட்டேன்
ஒருவன் பட்டினியில் கிடக்க
பலர் சிரிக்கக் கேட்டேன்
சாக்கடையில் மரிக்கும் மனிதனின்
பாட்டைக் கேட்டேன்
குறுகிய சந்தில்
ஒரு கோமாளியின்
அழுகுரல் கேட்டேன்
ஒரு கனமழை கனமழை
பொழியத்தான் போகிறது”

என்று விளிம்புநிலை மனிதர்களின் விசும்பல்களைப் பாடித் திரியும் பாப் டிலானுக்குக் கிட்டும் உலக வாழ்த்துக்களோடு தமிழ் வாழ்த்தையும் இணைத்துக்கொள்கிறேன்.

இவ்வாறு வைரமுத்து கூறியுள்ளார்.