144 – விமர்சனம்

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே எரிமலைக்குண்டு, பூமலைக்குண்டு என்ற கற்பனைப் பெயர்கள் கொண்ட இரண்டு ஊர்கள் இருக்கின்றன. இந்த இரண்டு ஊர்களுக்கு இடையே ஒரு கண்மாய் இருக்கிறது. அந்த கண்மாயில் மீன் பிடிக்கும் உரிமை தொடர்பாக இந்த இரண்டு ஊர்க்காரர்களுக்கும் இடையில் காலங்காலமாக பிரச்சனை இருந்துவருகிறது.

பெரிய நகைக்கடை வைத்திருப்பவர் மதுசூதனன். இவர் தற்செயலாக தன்னிடம் வந்துசேர்ந்த தங்கக்கட்டிகளை அபேஸ் செய்து, மெகா சைஸ் பிள்ளையார் சிலையை கண்ணாடியில் உருவாக்கி, அதற்குள் பதுக்கி வைத்து, பொது இடத்தில் வைத்துவிடுகிறார்.

இது தெரியாத எரிமலைக்குண்டு ஊரார், பிள்ளையார் சிலையை கண்மாயில் கரைக்க வேண்டும் என்று சொல்ல, கண்ணாடியாலான பிள்ளையார் சிலையை கண்மாயில் கரைக்கக் கூடாது என்று பூமலைக்குண்டு ஊரார் எதிர்ப்புத் தெரிவிக்க, இரண்டு ஊர்க்காரர்களுக்கும் இடையில் மோதல் வெடிக்கிறது. இதனால் மதுரை மாவட்ட ஆட்சியர் அப்பகுதியில் 144 தடையுத்தரவு பிறப்பிக்கிறார்.

மிர்ச்சி சிவா திருட்டுத் தொழில் செய்பவர். எத்தகைய பூட்டையும் கம்பியால் திறந்துவிடும் திறமை இவருக்கு இருந்தாலும், போலீசிடம் சிக்காமல் தப்பித்துக்கொள்ளும் சாமர்த்தியம் கிடையாது. அடிக்கடி சிக்கிக்கொள்வதால், போலீஸ்காரர்களே இவரை திருட்டுக்கு தகுதி இல்லாத ஆள் என்று கேலி செய்கிறார்கள். இதனால் ரோஷமடையும் சிவா தன் திருட்டுத் திறமையை நிரூபிக்க மதுசூதனனின் நகைக்கடையில் கொள்ளையடிக்க முடிவு செய்கிறார்.

லாட்ஜில் தங்கி கலவியல் தொழில் செய்து வரும் ஓவியா மூலம் மதுசூதனின் கடையில் கொள்ளையடித்து, நகைகளுடன் ஓவியாவை ஒரு பங்களாவில் தங்க வைக்கிறார் சிவா.

மதுசூதனின் மகள் ஸ்ருதி ராமகிருஷ்ணனும், மதுசூதனின் கார் டிரைவர் அசோக் செல்வனும் ரகசியமாக காதலித்து வருகிறார்கள். மதுசூதனன் பதுக்கி வைத்துள்ள தங்கக்கட்டிகள் இருக்கும் இடத்தை திறக்கும் சாவி ஸ்ருதி ராமகிருஷ்ணனிடம் இருக்கிறது. இதனால், மற்றொரு திருடனான வாய் பேச இயலாத முனிஸ்காந்த், ஸ்ருதி ராமகிருஷ்ணனை கடத்திச்சென்று அதே பங்களாவில் கட்டி வைக்கிறார். காதலியைத் தேடி அசோக் செல்வன் அங்கு வருகிறார்.

இப்படியாக சிவா, ஓவியா, அசோக் செல்வன், ஸ்ருதி ராமகிருஷ்ணன், முனிஸ்காந்த் ஆகிய அனைவரும் ஒரே பங்களாவில் சந்திக்கிறார்கள். அப்போது முனிஸ்காந்த், பல கோடி மதிப்புள்ள தங்கக்கட்டிகளைத் திருடவே ஸ்ருதி ராமகிருஷ்ணனை கடத்தினேன் என்று கூறுகிறார். இதை கேட்ட மற்றவர்கள் அந்த தங்கக்கட்டிகளை எடுத்து பகிர்ந்துகொண்டு வாழ்க்கையில் செட்டிலாக நினைக்கிறார்கள்..

ஊருக்குள் 144 தடையுத்தரவு இருப்பதால் தங்கக்கட்டிகளை அவர்கள் எடுத்தார்களா? அசோக் செல்வனும், ஸ்ருதி ராமகிருஷ்ணனும் காதலில் ஒன்று சேர்ந்தார்களா? என்பது மீதிக்கதை.

மிர்ச்சி சிவா, அசோக் செல்வன், ஓவியா, ஸ்ருதி ராமகிருஷ்ணன், மதுசூதனன் என அனைவரும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட காமெடி பண்ணும் வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள். முனிஸ்காந்த் திறமையான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். காமெடி வில்லனாக நடித்திருக்கும் உதய் மகேஷை வைத்தும் காமெடி பண்ண முயற்சி செய்திருக்கிறார்கள்.

144 தடை உத்தரவை மையமாக வைத்து இயக்கியிருக்கிறார் அறிமுக இயக்குனர் மணிகண்டன். திரைக்கதையை இன்னும் கொஞ்சம் தெளிவாகவும், விறுவிறுப்பாகவும் அமைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

‘144’ – பொழுது போகும்!