ஒருநாள் இரவில் – விமர்சனம்

ஒரு கௌரவமான குடும்பத் தலைவன் (சத்யராஜ்), ஒருநாள் இரவு இலேசாய் சபலத்துக்கு ஆட்பட்டு, ஒரு கலவியல் பெண் தொழிலாளியை (அனுமோள்) அழைத்துக்கொண்டு, காலியாகக் கிடக்கும் தன் கடைக்கு வ்ருகிறான். பசியோடு இருக்கும் அவள் முதலில் சாப்பிட வேண்டும் என்கிறாள். அவளுக்கு புரோட்டா வாங்கக் கிளம்பும் அவனது நண்பன் (வருண்), இந்த இருவரும் உள்ளே இருக்க, அவர்களுக்கு பாதுகாப்பாக இருக்கும் என்ற எண்ணத்தில் கடையின் ஷட்டரை இழுத்து மூடி பூட்டுப்போட்டு பூட்டிவிட்டுப் போகிறான். போனவன் திரும்பி வரவில்லை. குடும்பத் தலைவனை பயம் தொற்றிக்கொள்ளுகிறது. ஷட்டரைத் திறக்க வழி இல்லை. நேரம் செல்லச் செல்ல, தன் குடும்பத்தாரிடமும், அண்டை அயலாரிடமும் கையும் களவுமாக சிக்கிக் கொள்வோமோ என்று அவன் அஞ்சி நடுங்குகிறான். இந்த சிக்கல் எப்படியெல்லாம் வளர்ந்து, என்னவாய் முடிகிறது என்பது அற்புதமான இந்த படத்தின் கதைச் சுருக்கம்.

அமரர் ஜெயகாந்தனின் நல்லதொரு சிறுகதையைப் படித்தது போன்ற மனநிறைவைத் தருகிறது ‘ஒருநாள் இரவில்’ படத்தின் கிளைமாக்ஸ். குறிப்பாக, ‘அக்கினி பிரவேசம்’ சிறுகதையில் வரும் பொறுப்புணர்வு மிகுந்த தாய் கதாபாத்திரம், இந்த படத்தின் கிளைமாக்ஸில் சத்யராஜின் டீன்ஏஜ் மகள் (தீக்க்ஷிதா) பாத்திரமாக உருமாறி, வானளவு உயர்ந்தோங்கி நின்று கம்பீரம் காட்டியிருக்கிறது. செய்தியாளர்களுக்கான சிறப்புக் காட்சியின்போது, கிளைமாக்ஸ் முடிந்ததும் திரையரங்கில் எழுந்த கரவொலி இதற்கு சாட்சி.

மலையாளத்தில் ‘ஷட்டர்’ என்ற பெயரில் வெளியாகி வெற்றி பெற்ற படத்தை, தமிழில் மறு ஆக்கம் செய்து இயக்கியிருக்கிறார் பிரபல படத்தொகுப்பாளர் ஆண்டனி. மலையாளத்தில் இரண்டரை மணி நேரம் இருந்த படத்தை, தமிழுக்கு ஏற்ப சுருக்கியிருக்கிறார். அதுவும், தமிழ் ரசிகர்கள் ரசிக்கும்படியான உணர்வுப்பூர்வமான காட்சியமைப்புடன் சிறப்பாக கொடுத்திருக்கிறார்.

சபலம் என்பது ஒரு மனிதனின் வாழ்க்கையை எப்படி புரட்டிப் போடுகிறது என்பதை தத்ரூபமாக காட்டியிருக்கும் இயக்குனர் ஆண்டனி,  பெண்களுக்கு கல்வி முக்கியம் என்ற சமூகக் கருத்தையும் பதிவு செய்திருப்பதை பாராட்டலாம்.

த்ரில்லர் படத்தின் ஒட்டுமொத்த பலத்தையும் தன் தோள்களில் சுமந்து மீண்டும் தன் நடிப்பாற்றலை நிரூபித்திருக்கிறார் சத்யராஜ். கறாரான அப்பா, கண்டிப்பான கணவன், சின்னதாய் தோன்றும் சபல எண்ணத்திலும் மோகம் காட்டாத முகம், பதற்றம், பரிதவிப்பு, குழப்பம், பயம், அழுகை, சந்தேகம், யோசனை என அனைத்து உணர்வுகளையும் கண்முன் நிறுத்துகிறார். கதாபாத்திரத்தின் தேவையறிந்து அதை உணர்வுபூர்வமாக நடித்துக் கொடுத்திருக்கிறார்.

கலவியல் தொழிலாளியாக நடித்திருக்கும் அனுமோள், ஆடையில் எந்தவித கவர்ச்சியும் காட்டாமல், கண்களால் அனைவரையும் சுண்டி இழுக்கிறார். நடிப்பிலும் சபாஷ் பெறுகிறார்.

சினிமாத் துறையில் மீண்டும் தன்னை முன்னணி இயக்குனராக அடையாளம் காட்டுவதற்கான வாய்ப்பு தேடி அலையும் யூகிசேது, தனது யதார்த்தமான நடிப்பில் மனதில் பதிகிறார்.

முதல் படமாக இருந்தாலும் தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தை பொறுப்புடன ஏற்று சிறப்புடன் செய்திருக்கிறார் வருண். சத்யராஜின் மனைவியாக வரும் கல்யாணி நடராஜன், சிறப்புத் தோற்றத்தில் வரும் இயக்குனர்கள் ஆர்.சுந்தர்ராஜன், கவுதம் மேனன் ஆகியோரின் நடிப்பும் ரசிக்கும்படியாக உள்ளது.

எம்.எஸ்.பிரபு ஒளிப்பதிவும், நவீன் அய்யர் இசையும் படத்தை ரம்மியமாகக் கொண்டு செல்கின்றன.

’ஒருநாள் இரவில்’ – பலநாள் நினைவில் நிற்கும் படைப்பு!