‘மூன்றாம் உலகப்போர்’ விமர்சனம்

ஓர் இந்திய ராணுவ வீரனின் சாகசம் பற்றிய கதை இது. இந்திய ராணுவம் என்றவுடன் அது அமைதிப் படையாக ஈழத்துக்குச் சென்று என்ன செய்தது? காஷ்மீரிலும், மணிப்பூரிலும் இன்று என்ன செய்து கொண்டிருக்கிறது? என்பதெல்லாம் உங்கள் நினைவுக்கு வந்தால் உங்களால் 10 நிமிடம்கூட இந்த படத்தை பார்க்க முடியாது. அவற்றை எல்லாம் மறந்துவிட்டு, ஒரு மூன்றாம் வகுப்பு மாணவனுக்குரிய வெகுளித்தனமான நாட்டுப் பற்றுடன், ஜியோ பாலிடிக்ஸ் பற்றிய எந்த தெளிவும் இல்லாமல் போய் உட்கார்ந்தால் தான் இந்த படத்தை சகித்துக் கொள்ளவே முடியும்.

கதை எதிர்காலத்தில் – 2025ஆம் ஆண்டில் – நடக்கிறது. இந்திய ராணுவத்தில் மேஜர் பொறுப்பில் இருக்கும் நாயகன் சுனில் குமார், ஒரு மாதகால விடுமுறையில் சொந்த ஊருக்கு வருகிறார். அப்போது அவரது பெற்றோர்கள் நாயகி அகிலா கிஷோரை அவருக்கு திருமணம் செய்து வைக்கிறார்கள். 20 நாட்கள் தாம்பத்ய வாழ்க்கை வாழ்ந்தபின், மனைவியைப் பிரிந்து ராணுவப் பணிக்கு திரும்புகிறார் சுனில்குமார்.

சீன ராணுவத் தளபதியான வில்சன், இந்தியாவில் நாசவேலைகளை ஏற்படுத்தி அமைதியை குலைப்பதற்காக தனது மகன் உள்ளிட்ட 100 சீன வீரர்களை இந்தியாவுக்கு அனுப்புகிறார். அவர்கள் ஒவ்வொருவரையும் கண்காணிப்பதற்காக ஒவ்வொருவரது உடம்பிலும் கம்யூட்டர் சிப் வைக்கப்பட்டிருக்கிறது.

ஆனால், இந்தியாவுக்குள் நுழைந்த 100 சீன வீரர்களும் தொடர்புகொள்ள முடியாமல் திடீரென காணாமல் போகிறார்கள். அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்பது சீனா தளபதிக்கு மர்மமாக இருக்கிறது.

இந்திய – சீன எல்லையில் பாதுகாப்பு பணியில் இருக்கும் மேஜர் சுனில் குமார் மற்றும் அவரது கூட்டாளிகளுக்கு இது பற்றி தெரிந்திருக்கக் கூடும் என்று நினைத்து, அவர்களை சீன ராணுவத்தினர் கடத்திக் கொண்டு போகிறார்கள். சுனில் குமாரை மட்டும் உயிருடன் பிடித்து வைத்துக்கொண்டு, மற்றவர்களை கொன்றுவிடுகிறார்கள். சுனில் குமாரிடம் ‘100 சீன வீரர்கள் எங்கே?’ என்று கேட்டு, தினுசு தினுசாக சித்ரவதை செய்கிறார்கள்.

அந்த 100 சீன வீரர்கள் என்ன ஆனார்கள்? அது பற்றிய விவரம் சுனில் குமாருக்கு தெரிந்திருக்கிறதா? அவர் சீன ராணுவத்தின் பிடியில் இருந்து தப்பித்தாரா? என்பது மீதிக்கதை.

ராணுவ மேஜராக வரும் நாயகன் சுனில் குமார், உடம்பை வருத்தி கடினமாக உழைத்து நடித்திருக்கிறார். விக்ரம் போல் உடம்பைக் கெடுத்துக்கூட கதாபாத்திரத்துக்கு உயிரூட்டக் கூடியவர் என்பதை நிரூபித்திருக்கிறார்.

நாயகி அகிலா கிஷோர் விரல்விட்டு எண்ணுமளவுக்கு சில காட்சிகளில் மட்டுமே வந்து போகிறார். இளம் விதவை என்றான பிறகும் முழு மேக்கப்பில் இருக்கிறார். கிளிசரின் கண்ணீரை வைத்து தான் ‘இவர் சோகமாக இருக்கிறார்’ என தெரிந்துகொள்ள முடிகிறது.

சீன தளபதியாக வரும் வில்சன் வில்லத்தனத்தில் மிரட்டுகிறார். இவர் வில்லன் என்பதை ஒரு கட்டத்தில் மறந்துவிட்ட இயக்குனர், இவர் மூலமே இந்தியர்களுக்கு நீதிபோதனை செய்வது கொடுமை.

 2025-ல் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே மோதல் நடப்பதாக இயக்குனர் சுகன் கார்த்தி இப்படத்தின் கதையை அமைத்திருக்கிறார். ஆனால், 2025ஆம் ஆண்டின் வளர்ந்த தொழில்நுட்பம் எதுவும் நம் கண்ணுக்கு தெரியவில்லை. மேலும், கிராபிக்ஸில் வரும் போர் காட்சிகள் எல்லாம் வீடியோ கேமை பார்ப்பது போன்ற உணர்வை கொடுக்கிறது.

இந்திய ராணுவ சாகசம் பற்றிய இந்த படத்தில், நாயகிக்கு பிரபாகரனின் மனைவி மதிவதனியின் பெயரை வைத்து, தமிழர்களை ஏமாற்ற முயன்றிருக்கிறார் இயக்குனர். மேலும், படத்தில் வரும் ‘INDIA’ என்ற சொல்லின் ஆரம்பத்திலும், இடையிலும் உள்ள ‘I’ என்ற எழுத்தை கண்ணுக்குப் புலப்படாத வகையிலும், ‘NDA’ என்ற எழுத்துக்களை பளிச்சென தெரிகிற வகையிலும் எழுதி, தான் யார் என்பதை மோடி அரசுக்கு குறிப்பால் உணர்த்தியிருக்கிறார். இதற்காகவே மோடி அரசு இவருக்கு ஸ்ட்ரெய்ட்டாக ‘பாரத ரத்னா’ விருது வழங்கினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை!

‘மூன்றாம் உலகப்போர்’ – அபத்தமான கற்பனை!