சம பலத்தில் திமுக – அதிமுக: ராஜநாயகம் கருத்து கணிப்பு!

தற்போதைய சூழலில் சட்டப்பேரவை தேர்தல் நடந்தால் திமுக, அதிமுகவுக்கு சம பலம் கிடைக்கும் என்று முன்னாள் பேராசிரியர் எஸ்.ராஜநாயகத்தின் மக்கள் ஆய்வுக்குழுவின் கருத்துக்கணிப்பு கூறியுள்ளது.

2016 சட்டப்பேரவை தேர்தல் தொடர்பாக மக்கள் ஆய்வு மையம் நடத்திய கருத்துக்கணிப்பு பற்றி லயோலா கல்லூரி முன்னாள் பேராசிரியர் எஸ்.ராஜநாயகம் சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது:

சட்டப்பேரவை தேர்தல் தொடர்பாக கடந்தாண்டு ஆகஸ்ட்டில் ஒரு கருத்துக்கணிப்பை வெளியிட்டிருந்தோம். இப்போது, மழை வெள்ள பாதிப்புக்குப் பிறகு மக்களின் மனநிலை எப்படி உள்ளது என்பதை அறிய, தமிழகத்தின் 39 மக்களவை தொகுதிகளுக்கு உட்பட்ட 120 சட்டப்பேரவை தொகுதிகளில் கருத்துக்கணிப்பு நடத்தினோம். இந்தாண்டு ஜனவரி 7 முதல் 19 வரை நடந்த இக்கருத்துக்கணிப்பில் 5 ஆயிரத்து 464 பேர் பங்கேற்றனர்.

தமிழகத்தில் லஞ்சமும், ஊழலும் தலையாய பிரச்சினையாக உள்ளது என்று 36.1% பேர் கூறியுள்ளனர். இது தவிர, மதுப்பழக்கம் (23.4%), தண்ணீர் வசதியினமை (14.2%), மின் பிரச்சனை (12.5%) வேலைவாய்ப்பின்மை (5.4%) என்று கூறினர்.

இப்பிரச்சனைகளை எந்தக் கட்சிகளும் தீர்க்காது என்று 56.4% பேர் கூறினர். பிரச்சனைகளை திமுக தீர்க்குமென்று 16.2% பேரும், அதிமுக தீர்க்குமென்று 12.5% பேரும் கூறினர்.

தற்போது தேர்தல் வைத்தால் அதிமுகவுக்கு 33.3 சதவீதம் பேர் வாக்களிப்பதாக கூறியுள்ளனர். அதே நேரத்தில், திமுகவுக்கு 33.1 சதவீதம் பேர் வாக்களிப்போம் என்றனர். 0.2 சதவீதம் வித்தியாசம் என்பது புள்ளியியல் ரீதியாக கணக்கில் எடுத்துக்கொள்ளத் தேவையில்லாத ஒன்று. ஆகவே, 2 கட்சிகளும் சம பலத்தில் உள்ளன.

இன்றைக்கு தேர்தல் நடந்தால், தேமுதிகவுக்கு 6 %, பாமகவுக்கு 3.2%, பாஜகவுக்கு 2 %, காங்கிரஸுக்கு 1.8%, மதிமுகவுக்கு 1.5%, இடதுசாரிகளுக்கு 1.2%, விசிகவுக்கு 1.2%, தமாகாவுக்கு 0.4%, முஸ்லிம் லீக், புதிய தமிழகம், நாம் தமிழர், தமிழக வாழ்வுரிமைக் கட்சி ஆகியவற்றுக்கு முறையே 0.3%, சமக, இஜகவுக்கு முறையே 0.2 % என மக்கள் ஆதரவு உள்ளது.

யூகத்தின் அடிப்படையில், எந்த கட்சி தலைமையிலான ஆட்சி அமையும் என்று கேட்டதற்கு திமுகவுக்கு 33.7%, அதிமுகவுக்கு 35.7 %, மக்கள் நலக்கூட்டணிக்கு 5.4%, பாமகவுக்கு 2.2% என மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

மேலும், அதிமுகவுக்கான ஆதரவு கடந்த 2014 நவம்பரில் 43% ஆக இருந்தது. அது, கடந்தாண்டு ஆகஸ்ட்டில் 34.1% ஆகவும், தற்போது 33.3 சதவீதமாகவும் குறைந்துள்ளது. ஆனால், திமுகவுக்கான ஆதரவு கடந்த 2014 நவம்பரில் 26 % என்று இருந்தது. அது, கடந்தாண்டு ஆகஸ்ட்டில் 32.6% ஆகவும், தற்போது 33.1% ஆகவும் வளர்ச்சியடைந்துள்ளது.

சகாயம் ஐஏஎஸ் முதல்வராக வேண்டும் என்று சமூக வலைதளங்களில் கூறப்படுவது பற்றி எதுவும் தெரியாது என்று 62.5 % பேர் கூறியுள்ளனர்.

விஜயகாந்த் பொது இடங்களில் நடந்து கொள்ளும் விதம் தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்தாது என்று 56.4 % பேர் கூறியுள்ளனர். ஸ்டாலினின் நமக்கு நாமே பயணம் பெரும்பான்மை ஆதரவினை பெற்றுள்ளது என்று 38 % பேரும், வெறும் அரசியல் நாடகம் என்று 14.3% பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

பிடித்த நடிகர்கள் என்ற அடிப்படையில் அஜீத் 16%, ரஜினி 15.9%, விஜய் 9.2%, கமல் 5.9 %, சூர்யா 4.3% என ஆதரவு தெரிவிக்கப்பட்டது.

வெள்ள நிவாரணம் முறையாக கிடைக்கிறது என்று 24.1% பேரும், பலருக்கு கிடைக்கவில்லை என்று 20.4% பேரும், அதிமுகவினருக்கே கிடைக்கிறது என்று 14.1% பேரும் கூறியுள்ளனர். மதுவிலக்கு பிரச்சினை எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று 54.4 % பேர் கூறியுள்ளன்னர்.

இவ்வாறு ராஜநாயகம் கூறினார்.

Read previous post:
MUP---review1
‘மூன்றாம் உலகப்போர்’ விமர்சனம்

ஓர் இந்திய ராணுவ வீரனின் சாகசம் பற்றிய கதை இது. இந்திய ராணுவம் என்றவுடன் அது அமைதிப் படையாக ஈழத்துக்குச் சென்று என்ன செய்தது? காஷ்மீரிலும், மணிப்பூரிலும் இன்று

Close