மோடிக்கு ஒரு குடிமகன் கடிதம்: “ரூ.2லட்சம் உடனே அனுப்புக!”

மாண்புமிகு பிரதமர் அவர்கள்,

7, Race Course Road, 

Teen Murti Marg Area,

New Delhi, Delhi 110011

குறிப்பு: முன்பணம் வேண்டி விண்ணப்பம்.

மாண்புமிகு பிரதமர் அவர்களுக்கு,

இப்ப எனக்கு வேற வழியே இல்லை. நீங்கதான் ஒரு வழி சொல்லணும். உங்கள் நட்பு நாடான இலங்கை, எங்கள் நட்பு நாடான ஈழத்துக்கு செய்த துரோகம் பற்றிய புத்தகம் ஒன்றை எழுதி வைத்திருக்கிறேன். அச்சடிக்க பணம் கேட்டால் திரும்பி பார்க்காமல் ஓடிவிடுகிறார்கள்.

அப்போதுதான் தாங்கள் எனக்கு தரவேண்டிய 15 இலட்ச ரூபாய் நினைவுக்கு வந்தது. நீங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் வெளிநாட்டில் உள்ள வங்கிகளில் இருந்து கருப்புப் பணத்தை மீட்டு என் வங்கிக் கணக்கில் போடுவதாக வாக்குறுதி கொடுத்து 2 வருடங்களை நெருங்கி கொண்டிருக்கிறது. அந்த பணத்துக்கு வட்டி குட்டி போட்டிருக்கும். தாங்கள் பெரிய மனுஷன். அதனால் நான் வட்டியெல்லாம் கேட்கவில்லை.

தாங்கள் முன்பணமாக ஒரு 2 இலட்சத்தை கொடுத்தால் போதும். தயவுசெய்து, “என் வெளிநாட்டு சுற்றுப்பயணத்துக்கே போதவில்லை” என்று கூறிவிடாதீர்கள். உங்கள் நண்பர் ராஜபக்சேவிடமாவது முன்பணம் பெற்றுத் தர வேண்டும். மீதி 13 இலட்சத்தை வரும் 2019 நாடாளுமன்ற தேர்தலில் நாமக்கட்டிகளாக பெற்றுக் கொள்கிறேன்.

இந்த கடிதத்தை தாங்கள் முதலமைச்சர் கடித கணக்கில் வைத்துவிட வேண்டாம்.

இப்படிக்கு,

பா.ஏகலைவன்

(ஓட்டு போட்டே ஏமாந்த குடிமகன்களில் ஒருவன்)