அம்மா கதையும், அப்பா கதையும், வதைபடும் மக்கள் கதையும்!

பெரியவர் ஒருவர் கடை ஒன்றைத் துவக்கினார். பகுத்தறிவு, சுயமரியாதையோடு துவக்கப்பட்ட கடை அது.

ஒரு நிலையில், அதிலிருந்து பிரிந்து அண்ணன் வர்த்தக நோக்கத்துடன் கடையை ஆரம்பித்தார். இருந்தாலும், பெரியவர்தான் இந்தக் கடைக்கும் உரிமையாளர் என்று பெருந்தன்மையாக கூறினார்.

அவரது மறைவுக்குப் பிறகு பாசகக்கார அப்பா, கடைக்கு பொறுப்பேற்று நடத்த ஆரம்பித்தார். அதன்பின்பு அது ஒரு குடும்பக் கடையாகவே மாறிவிட்டது.

ஒரு நிலையில் அந்தக் கடைக்கு போட்டிக் கடையை ஒருவர் அங்கிருந்து பிரிந்து ஆரம்பித்தார். அதன் பின்பு, அம்மா என்று கமிஷன் ஏஜெண்டுகளால் அழைக்கப்படுபவர் கைக்கு கடை கை மாறியது.

அதிலிருந்து அம்மா கடை, அப்பா கடை ஆகிய இரு கடைகள் மட்டுமே ஊரில் இருக்க வேண்டும் என்று அவர்களுக்குள் எழுதப்படாத ஒப்பந்தம்.

இருவரும் சரக்குகளை மொத்தமாக கொள்முதல் செய்வது தில்லியில் உள்ள இரண்டு கடைகளில்தான். அந்த சரக்கு எவ்வளவு மோசமாக இருந்தாலும், கூவிக் கூவி விற்று அதை மக்கள் தலையில் கட்டுவதில் இருவரும் சமத்தர்கள்.

இந்திய குளிர்பான சந்தையை பெப்சி, கோக் எனும் இரு அமெரிக்க பன்னாட்டு நிறுவனங்களே கையில் வைத்துக் கொண்டு மக்களை மொட்டையடிப்பது போல, தமிழக சந்தையை தாங்கள் இருவர் மட்டுமே தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்பதுதான் அவர்களது எண்ணம்.

இரண்டு கடைகளும் போட்டிக் கடைகள் போல காட்டிக் கொண்டாலும், ஒரே மாதிரி கலப்பட சரக்குதான் இரண்டு கடைகளிலும் விற்பனையாகின.

இந்தக் கடைகளின் பொருட்களை வாங்கிச் சாப்பிட்ட மக்கள் பல்வேறு உபாதைகளுக்கு ஆளானார்கள்.

போணியாகாத சரக்குகளை தள்ளிவிட ‘ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம்’ என்பது போன்ற கவர்ச்சி அறிவிப்புகளை வெளியிடுவதிலும் இருவரும் சமர்த்தர்கள்.

இதற்கு விடிவே இல்லையா? என்று மக்கள் ஏங்கித் தவித்த வேளையில் புதியதொரு அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டது. குடும்ப லாபத்தை கருத்தில் கொள்ளாமல், மக்கள் நலனை அடிப்படையாகக் கொண்ட கூட்டுறவு நியாயவிலைக்கடை துவக்கப்பட்டுள்ளதாக வெளிவந்த அறிவிப்பு மக்களிடம் ஒரு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியது.

பொருளை கொள்முதல் செய்தது எவ்வளவு, விற்கும் விலை என்ன என்பது பழைய கடைக்காரர்களால் மக்களுக்கு இதுவரை தெரிவிக்கப்பட்டதில்லை. கமிஷன், கட்டிங் முந்தைய இரு கடைகளிலும் மாறி மாறி ஏறிக் கொண்டே போனது. இந்த நிலையில், புதிய கடையில் பொருட்களின் நியாய விலை தெளிவாக மக்களுக்குத் தெரிவிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. பொருளின் தரம் குறித்து மக்களுக்கு நம்பிக்கை பிறந்தது.

இந்த கூட்டுறவு கடை, ஏற்கெனவே கொள்ளையடிப்பதையே தொழிலாக கடை நடத்தி வந்தவர்களிடம் கலக்கத்தை ஏற்படுத்தியது. “ஒருவரையொருவர் வசை பாடிக்கொண்டே இதுவரை தொழில் நடத்தி வந்தோம். கூட்டுறவுக் கடைக்காரர்கள் இருவரது வண்டவாளத்தையும் தண்டவாளத்தில் ஏற்றத் துவங்கிவிட்டார்களே” என ஜாடையாக பேசிக் கொண்டார்கள்.

இந்த கூட்டுறவு அமைப்பை எப்படியும் வரவிடக் கூடாது என்று கங்கணங்கட்டி இரு தரப்பிலிருந்தும் கல் வீசத் துவங்கினார்கள்.

ஆனாலும் கூட்டுறவு கடை அசந்து விடவில்லை. இதனால் வாடிக்கையாளர்களை இழந்து வரும் இரு துருவ கடைக்காரர்களின் ஆத்திரம் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

அப்பா கடை என்று அழைக்கப்பட்டாலும், மார்க்கெட்டிங் பிரிவை கவனித்துக் கொள்வது எனது மருமகன்தான் என்று சின்ன முதலாளி தெளிவாகச் சொல்லிவிட்டார்.

லாபம் எனக்கு ஒரு பொருட்டே அல்ல என்று அம்மா கடையினர் சொல்லிக் கொண்டாலும் கொள்ளை லாபம் குவிப்பதுதான் நோக்கம் என்பதும் தெளிவாகிவிட்டது.

அவர்கள் விட்ட இரண்டு கதைகளிலுமே ஏணியின் மேல் யார் ஏறிப் போவது என்பது தான் பிரச்சனை.

ஏணி எப்போதும் கீழே தான் நின்று கொண்டிருக்கிறது. ஏணிகள் யோசிக்க வேண்டிய நேரம் இது. இந்தக் கதைகளில் வருவது யாரோ என்று குழம்பத் தேவையில்லை. ஏணிகளும், தோணிகளும் தெளிவாக முடிவெடுக்க வேண்டிய நேரம் இது.

மதுரை சொக்கன்