சிவகார்த்திகேயன் படத்தில் சினேகா ஏன்?: இயக்குனர் மோகன் ராஜா விளக்கம்!

சிவகார்த்திகேயன் – கீர்த்தி சுரேஷ் நடிப்பில், 24ஏஎம் ஸ்டூடியோஸ் சார்பில் ஆர்.டி.ராஜா தயாரித்திருக்கும் ‘ரெமோ’ திரைப்படம் ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. இதனைய்டுத்து ‘தனி ஒருவன்’ வெற்றிப்பட இயக்குனர் மோகன் ராஜா இயக்கும் புதிய படத்தில் நடிக்கிறார் சிவகார்த்திகேயன்.

24ஏஎம் ஸ்டூடியோஸ் சார்பில் ஆர்.டி.ராஜா தயாரிக்கும் பெயர் சூட்டப்படாத இப்படத்தில், சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இவர்களுடன் பாஹத் பாசில், ஆர்ஜே பாலாஜி, சதீஷ், தம்பி ராமையா ஆகியோர் நடிக்கிறார்கள். தற்போது இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க சினேகா ஒப்பந்தமாகி இருக்கிறார்.

நடிகர் பிரசன்னாவை திருமணம் செய்த பிறகு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்துவந்த சினேகா, கர்ப்பமான பிறகு எந்த படத்திலும் நடிக்காமல் ஒதுங்கி இருந்தார். அவருக்கு குழந்தை பிறந்து ஒரு வருடம் ஆன நிலையில், தற்போது மீண்டும் நடிக்கத் துவங்கியிருக்கிறார்.

சிவகார்த்திகேயனின் படத்தில் நடிக்க சினேகாவை தேர்ந்தெடுத்திருப்பது குறித்து இயக்குனர் மோகன் ராஜா கூறுகையில், “கவிதை எழுதுவது என்பது அவ்வளவு சாதாரணமான விஷயம் அல்ல. சிறந்த உருவகம், பொருத்தமான சொற்கள் என அனைத்தும் மனதில் இருந்து வர வேண்டும். அதுபோல தான் ஒரு கதாபாத்திரத்தில் நடிப்பது என்பதும். மனதில் அந்த வேடத்தை உள்வாங்கினால் மட்டுமே அந்த கதாபாத்திரத்தை கன கச்சிதமாக திரையில் பிரதிபலிக்க முடியும். அப்படி நடிக்கக் கூடிய ஒரு நடிகை தான் சினேகா.

“இந்த படத்தின் கதையை நாங்கள் எழுதும்போதே, இந்த கதாபாத்திரத்தில் சினேகா தான் நடிக்க வேண்டும் என்று முடிவு செய்துவிட்டோம். சினேகாவும் எங்கள் படத்தின் கதையை கேட்ட அடுத்த கணமே இந்த கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்புக்கொண்டு விட்டார். எங்களின் ஒட்டுமொத்த படக்குழுவினர் சார்பில் அவரை அன்போடு வரவேற்கிறோம். இந்த (செப்டம்பர்) மாதம் இப்படத்தின் படப்பிடிப்பை தொடங்க இருக்கிறோம்” என்றார் மோகன் ராஜா.

சினேகா கூறுகையில், “சினிமாவில் நான் மீண்டும் அடியெடுத்து வைக்கும் படம் ஒரு  மிகப் பெரிய திரைப்படமாக இருக்க வேண்டும் என ஆசைப்பட்டேன். ஆனால் இந்த திரைப்படமோ பிரமாண்டத்தின் உச்சமாக இருக்கிறது.

“தயாரிப்பாளர் ராஜா சாருடன் பணியாற்றுவதில் எனக்கு எல்லையற்ற மகிழ்ச்சி. இப்படிப்பட்ட ஒரு சவாலான கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு என்னை தேர்வு செய்த இயக்குனர் மோகன் ராஜா சாருக்கும் என்னுடைய நன்றி. நிச்சயமாக என்னுடைய இந்த கதாபாத்திரம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெறும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது” என்றார் சினேகா.