தலையில் அடித்துக் கொண்டு அழுங்கள் தமிழர்களே!

பெண் குழந்தைகளைப் பெற்றவர்கள் எப்படி நிம்மதியாக இருக்கிறீர்களோ தெரியவில்லை. மதுரை சோனாலி, தூத்துக்குடி பிரான்சினா கொலைச் செய்திகளைப் படித்துவிட்டு மனது துடியாய் துடிக்கிறது. என்ன நடக்கிறது இந்த நாசமாய்ப் போன தமிழகத்தில்?

[1] முதல்வரோ, அமைச்சர்களோ, மூத்த அதிகாரிகளோ இப்படி ஒரு பிரச்சினை நடந்துகொண்டிருக்கிறது என்பதை ஏற்றுக் கொள்வதில்லை, ஏறெடுத்தும் பார்ப்பதில்லை, எதுவும் பேசுவதில்லை.

[2] சட்டமன்றத்தில் தங்கள் தலைவிக்குப் புகழாரம் சூட்டுவதும், வீணாகப் பேசுவதும், வெளிநடப்பு செய்வதும்தான் நடக்கிறது.

[3] சினிமாக்காரர்களும், தொலைக்காட்சி நிறுவனங்களும் யாரின் எதைக் காட்டினால் தனக்குப் பணம் வரும் என்றே சிந்திக்கின்றனர், செயல்படுகின்றனர்.

[4] கல்லூரிகளில், பள்ளிகளில் பிள்ளைகளை வெறும் இருக்கைகளாகப் பார்ப்பதும், பணம் பறிப்பதும், அவர்களின் தேவைகளை முழுக்கப் புறக்கணிப்பதும், அவர்கள் வாழ்க்கைக்கு உதவாத கல்வியைக் கொடுப்பதும், தங்கள் வர்த்தகத்துக்கு ஏதுவான மதிப்பெண் கலாச்சாரத்தை வளர்த்தெடுப்பதும்தான் நடக்கிறது.

[5] காவல்துறையில் தங்கள் எஜமானர்களுக்கு விருப்பமானவர்களை பாதுகாப்பதும், வேண்டாதவர்களுக்கு எதிராக கதை வசனம் எழுதுவதும், அவர்களை கஷ்டப்படுத்துவதும்தான் நடக்கிறது.

[6] பெரும் முதலாளிகளும், அரசு அதிகாரிகளும் எரிகிற வீட்டில் பிடுங்குவது லாபம் என்று சுரண்டிக் கொழுத்துக் கொண்டிருக்கின்றனர்.

பாவம், நமது மகன்களுக்கு வழிகாட்டுவாரில்லை. நமது மகள்களுக்கு பாதுகாப்பே இல்லை. என்ன செய்வது? தலையில் அடித்துக்கொண்டு அழுங்கள் தமிழர்களே!

– சுப. உதயகுமாரன்

‘பச்சை தமிழகம்’ ஒருங்கிணைப்பாளர்