“குலோத்துங்கு”வை விட்டுவிட்டான் என்பதா இப்போது பிரச்சனை?
சில நாட்களாகவே என் மனதில் ஒரு போராட்டம்.
அச்சு ஊடகங்கள் மட்டுமே வழக்கில் இருந்த அந்த காலகட்டத்தில் நமது சமூகத்தில் இருந்த அரசியல் விழிப்புணவு மற்றும் பொதுநல சிந்தனைகள் கூட இன்று காட்சி ஊடகங்களாலும் சமூக ஊடகங்களாலும் நிறைந்து வழியும் நவநாகரீக சமுகத்திடம் இல்லையே என்று ஒரு பட்டிமன்றமே நடத்திக்கொண்டிருக்கிறது என் மனம்.
அதற்கு உலகமயம், தனியார்மயம், தாராளமயம் போன்ற “பொருளாதார அரசியல்” காரணமாக இருந்தாலும் அதையெல்லாம் தாண்டி நம் கண்முன்னே நடக்கும் அரசியல் அத்துமீறல்களையும், ஜனநாயகப் படுகொலைகளையும் உணர முடியாத, சிந்திக்கும் திறன் மழுங்கடிக்கப்பட்ட அல்லது சிந்திக்கும் உரிமையிழந்த அடிமைகளாகவா ஆகிப்போனோம் நாம் என்ற கேள்வியும் சேர்ந்தே வருகிறது.
இன்றைய தேதிகளில் (2016 ஜூலை, ஆகஸ்ட்) இந்திய அளவில் பார்த்தாலும் தமிழக அளவில் பார்த்தாலும் பாராளுமன்ற சட்டமன்ற கூட்டத் தொடர்கள் நடந்து கொண்டிருப்பது எல்லோருக்கும் தெரியும், ஆனால் அங்கே என்ன நடந்து கொண்டிருக்கிறது?
தமிழக சட்டசபையை எடுத்துக்கொண்டால் கட்சித் தலைமைகளின் பெயரைக் குறிப்பிட்டு பேச்சு அமைவதை விவாத பொருளாக்குகிறார்கள். தனியாக ஆளும் கட்சி உறுப்பினர்கள் என்று பார்த்தால் முதல்வரை புகழ்ந்து பேசுவதற்காக மட்டுமே சட்டமன்றத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது போல நடந்து கொள்கிறார்கள். அமைச்சர் ஆசையில் இருக்கும் இன்னும் சில உறுப்பினர்களை எடுத்துக்கொண்டால் எதிர்கட்சி தலைவரை திட்டித் தீர்ப்பதையும் அவமரியாதை செய்வதையுமே தமக்கு அமைச்சர் பதவியை பெற்றுத் தரும் துருப்புச் சீட்டாக கருதி கத்தித் தீர்க்கிறார்கள், பாவம், அவர்களும் தான் என்ன செய்வார்கள்? அப்படிப்பட்ட செய்கைகள் அங்கீகரிக்கப்படும்போது, அதற்கான வெகுமானமாக அமைச்சர் உள்ளிட்ட பதவிகள் கிடைக்கும் முன்னுதாரணங்களை பார்த்து அரசியலுக்கு வந்தவர்கள் தானே.
இன்னும் சிலரோ சாதியாக புறக்கணிக்கப்படுவதாக கூறிக்கொண்டு கட்சி ஆரம்பித்த சிலரும் அவர்கள் கூறும் காரணத்திற்கு நியாயம் சேர்க்கும்படி செயல்படுகிறார்களா என்று பார்த்தால் அதுவுமில்லை, கூட்டணி வைத்து எம்.எல்.ஏ ஆகிவிட்டது போல புகழ்பாடி அமைச்சர் ஆகிவிட முடியுமா என்றுதான் காய் நகர்த்துகிறார்கள். எம்.எல்.ஏ விடுதி வாசலில் படுத்திருந்த என்னை எம் கட்சித்தலைவர் எம்.எல்.ஏ ஆக்கிவிட்டார் என்று புகழ் போதையில் போர்க்குரல் எழுப்புகிறார்கள். இப்படி பதவி போதையில் பிதற்றும் இவர்கள் எப்படி மக்களுக்கு பணியாற்றுவார்கள்? இத்தகைய நபர்களுக்கு ஓட்டுப் போட்ட மக்களை தான் சொல்லனும்.
இன்னும் ஒருத்தரோ ஹிலாரி க்ளிண்டன் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடக் காரணமே எங்கள் கட்சித் தலைவர் தான் என்று ஏகோபித்த கரகோஷத்திற்கு மத்தியில் பட்ஜெட் மானிய கோரிக்கை வைக்கிறார். ஏதாவது சம்பந்தம் இருக்கா? ஆனால் இவை எல்லாமே நமது சட்டசபை விவாதம் என்றால் உங்களால் ஏற்றுக்கொள்ள முடிகிறதா? ஆனால் இதுதான் நடந்துகொண்டு இருக்கிறது.
அட எதிர்க்கட்சியாவது பொறுப்பாக நடந்து கொள்கிறார்களா என பார்த்தால் “குலோத்துங்குவை விட்டுவிட்டான் மன்னா” என்கிற அளவில் தான் நடந்து கொள்கிறார்கள். அதுசரி, விவாதிக்க வேறு எதுவுமே இல்லையா என்றால் பாலாற்று நீர் பிரச்சினையிலிருந்து மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை வரைக்கும் எவ்வளவோ இருக்கிறது, வழிப்பறி, செயின்பறிப்பு, கூலிப்படை, கோவில்களில் வழிபாட்டு உரிமை மறுத்தல், சாதிய ஆணவப் படுகொலை, பெருகும் சாலை விபத்து, வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வு, கனிமக் கொள்ளை, கிரானைட் கொள்ளை, எரிபொருள் விலையேற்றம், கல்விகடன் வசூலில் குண்டர்களை ஈடுபடுத்துவது, தேனி வனத்துறையினரின் பழங்குடி பெண்கள் மீதான பாலியல் அத்துமீறல், செங்கம் ஆட்டோ ஓட்டுனர் குடும்பம் மீதான காவல்துறையின் அத்துமீறல், சுவாதி படுகொலை, ராம்குமார் கைது நடவடிக்கையிலும் அதன் பின்புமான முரண்பாடுகள், தென்மாவட்டத்தில் அதிகரிக்கும் சாதிய மோதல்கள், டாஸ்மாக் சமூகத்தில் ஏற்படுத்தியுள்ள தாக்கம் மற்றும் விளைவுகள், பராமரிப்பற்று கிடக்கும் அரசுப் பள்ளிகள், நிரப்பப்படாத அரசு காலிப்பணியிடங்கள், அரசு பணிக்கான தேர்வாணையத்தில் நடக்கும் முறைகேடுகள், அரசு நலத் திட்டங்கள், கடந்த தேர்தலில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் என விவாதிக்க எவ்வளவோ இருக்கையில் ஆளுங்கட்சியும் எப்போதுமில்லாது இம்முறை வலுவாக உள்ள எதிர்கட்சியும் தம் கட்சித் தலமைகளின் புகழ்பாடுவதொன்றே மக்கள் பணியென்று பதவியாசையில் நடந்து கொள்வதையும் அதை கட்சித் தலைமைகள் வேடிக்கை பார்ப்பதையும், சமயத்தில் ஊக்கப்படுத்துவதையும் பார்க்கையில் நமது ஜனநாயகம் எவ்வளவு தறிகெட்டுப் போயுள்ளது என்பதாக தான் பார்க்க தோன்றுகிறது.
இது இங்கு மட்டுமல்ல, மத்தியிலும் இன்று இதுதான் நடந்து கொண்டிருக்கிறது. முக்கியமான மசோதாக்கள் நிறைவேற்றப்படும் வேளைகளில் அதில் உள்ள மக்கள் விரோத அம்சங்களை மக்கள் விவாதிக்க ஆரம்பத்தால் போதும், திட்டமிட்டே ஏதேனும் மதவாத கருத்துக்களை பேசி மக்கள் கவனத்தை மசோதா மீதும் பாராளுமன்ற நடவடிக்கைகள் மீதும் குவியாவண்ணம் பார்த்துக் கொள்வதில் எத்தர்களாக இருக்கிறார்கள் மத்தியில் ஆளும் அரசியல் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் சில சமூக, பொருளாதார ஆர்வலர்கள். அது அந்நிய முதலீடு என்று நம் நாட்டு வளங்களை அந்நிய நிறுவனங்களுக்கு தாரை வார்ப்பதாக இருந்தாலும் சரி, பொதுத்துறை பங்குகளை தனியாருக்கு விற்பதாக இருந்தாலும் சரி.
ஹைடெக் என்கிற பெயரில் சில ஆன்ட்ராய்டு செயலிகளை அறிமுகப்படுத்தினால் போதும் நாடு வளர்கிறது என்று மக்களை நம்ப வைத்துவிட முடியும் என்று நினைத்துவிட்டார்கள் போலும். இன்று காஷ்மீரிலும் குஜராத்திலும் எழுந்துள்ள சமூக பதற்றத்தைப் பற்றி பிரதம அமைச்சர் மறந்தும் கூட வாய் திறப்பதில்லை, பாவம் அவருக்கு “டெலி ப்ராம்ட்டரை” பார்த்தால் தான் பேச்சு வரும் போல. நாட்டில் உள்ள விலைவாசி உயர்வு, வறுமை, பசி பட்டினி, விவாசாயிகள் தற்கொலை, தண்ணீர் பஞ்சம், மதவாத சர்ச்சைகள், இளைஞர்களுக்கான வேலையில்லாத் திண்டாட்டம், அரசு பணியாளர்களின் காலி பணியிடங்கள் நிரப்பப்படாமை, சமஸ்கிருதத்திற்கு கொடுக்கும் முக்கியத்துவம் பிற மொழிகளுக்கு இல்லாதது, நடத்தப்படும் மானங்கெட்ட மாட்டரசியல் இப்படி விவாதிக்க எவ்வளவோ இருக்கையில் அது பற்றியெல்லாம் பேசாது ஆளுங்கட்சியும் எதிர்கட்சியும் பரஸ்பரம் மாற்றி மாற்று கூச்சல் போடும் கூச்சல் கூடமாக பாராளுமன்றத்தை மாற்றியிருப்பதை பார்க்கையில் அவர்கள் ஓட்டுக் கேட்டு வரும்போது சொன்ன பாலாறு தேனாறும் வாக்குறுதிகள் தான் வந்து வந்து போகிறது, ஏதோ மத்தியில் கொஞ்சமேனும் இடதுசாரிகள் இருப்பதால் ஓரிரு மக்கள் பிரச்சினைகளும் அவ்வப்போது எழுப்பப்படுவதை காண முடிகிறது. ஆனால் தமிழக சட்டமன்றத்திலோ அதற்கும் நாம் வழியில்லாது செய்துவிட்டோம்.
ஜனநாயகத்தின் முதல் இரண்டு தூண்கள் தான் இப்படியென்றால் மூன்றாவது தூணான நீதித்துறையோ சுவாதிக்கு மட்டும்தான் பொங்குவேன் என தன் திடீர் பொங்கல் அவதாரத்தை வெளிப்படுத்துகிறது. மூன்றாவது தூணான நீதித்துறையே இப்படியென்றால் தனியார் முதலாளிகளின் வியாபார நிறுவனமாக மாறி நிற்கும் நான்காவது தூணான பத்திரிகை துறை பற்றி சொல்லவே வேண்டாம். அவர்களின் தர்மம் சாமானியர்களை தான் புரட்டி எடுக்கும், பணமுள்ளவன் பக்கம் எட்டிக்கூட பார்க்காது. நம் போன்ற சாமானியர்கள் சமூக ஊடகங்களில் அவர்களின் தர்மத்தை கேள்விக்குள்ளாக்கினால் வேறு வழியில்லாமல் எம்.பிக்கள் கைகலப்பு என்று கவர் ஸ்டோரி எழுதும், ஆனால் அதே எம்.பி பாராளுமன்றத்தின் மையத்தில் நின்று கட்சித் தலைமையால் தான் தாக்கப்பட்டதாகவும் தன் உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கிறதென்று கத்திக் கதறினாலும் அதுக்கு கேட்காது. ஏனென்றால் அதிகாரம் இருக்குமிடத்து ஆவண செய்வது அவர்கட்கு ஆதாயம். அது மக்கள் பணத்தில் கொடுக்கப்படும் அரசு விளம்பரமாக கூட இருக்கலாம். இல்லாவிட்டாலும் அவர்கள் அதிகாரமிக்கவர்களை கேள்வி கேட்க ஒருபோதும் முன்வர மாட்டார்கள்.
இது தவறென்று உணர்தல் அவசியம், அவ்வாறு உணர்ந்தால் அதை சரி செய்தல் இன்னும் அவசியம், உண்மையான மக்கள் பிரச்சினையை பேசும் ஜனநாயகத்தை மீட்டெடுத்தல் அதைவிட அவசியம். அதற்கு மனித சமூகத்தின் எதிரிகளான முதலாளித்துவ சித்தாந்தத்தின் உருவாக்கமான, மக்கள் மத்தியில் திட்டமிட்டே விதைக்கப்பட்ட போலியான பிரிவினைகளான சாதி, மத, இன விரோதங்கள் கடந்து வர்க்க உணர்வுடன் சிந்திக்க துவங்குவது மிக அவசியம். அதற்கு இன்றைய ஒட்டுமொத்த இளைஞர்களும் இளம் பெண்களும் முன்வர வேண்டும். சமூக அளவில் பார்த்தால் நாம் இன்று இழப்பதற்கு ஒன்றுமில்லை சாதி மத இன பாலின பேதங்களை தவிர. ஆனால் படைப்பதற்கோ ஒரு பொன்னுலகம் காத்திருக்கிறது
வாருங்கள் தோழர்களே… புதியதோர் உலகம் செய்வோம். அங்கே அரசியல் என்பது வாய்ப்பு தேடும் வாணிபமாக இல்லாது அரசியல் என்பது அரசியலாக நிலைபெறச் செய்வோம். ஒவ்வொருவரும் அரசியல் பேசுவது அவர்களின் கடமையெனச் சொல்வோம். அதில் அறிவியலும் ஆறாவது அறிவும் இருந்திடல் அவசியம் எனச் சொல்வோம். உழைத்தே உண்ணுதல் ஒழுக்கம் எனச் செய்வோம். உழைக்கா மனிதன் இல்லையென செய்வோம். உலகம் மொத்தமும் உழைப்பவர்க்கே சொந்தமென மாற்றுவோம். வர்க்க உணர்வு ஊட்டுவோம்.
– ஆதி
Courtesy: mattru.com