திமுக – காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறாது: மு.க.அழகிரி கணிப்பு!

தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் மகன், 12 வயது பச்சிளம் பாலகன் பாலச்சந்திரன் சிங்கள ராணுவத்தினரால் கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட கொடுமை வெளிச்சத்துக்கு வந்தபோது, அப்போது இந்தியாவை ஆண்டுகொண்டிருந்த காங்கிரஸ் – திமுக கூட்டணி ஆட்சிக்கு எதிராக மாணவர்கள், இளைஞர்கள் உள்ளிட்ட தமிழகமே கொந்தளித்தது. இதை எதிர்கொள்ள இயலாத திமுக, தன்னை காப்பாற்றிக்கொள்ளும் முயற்சியாக காங்கிரசுடனான உறவை துண்டித்துக்கொண்டது.

“இனி காங்கிரசுடன் கூட்டணி இல்லை” என்று திமுக. தலைவர் கருணாநிதி முன்மொழிய, அதை திமுக. பொருளாளர் மு.க.ஸ்டாலின் வழிமொழிந்து இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. ஈழத்தமிழர் பிரச்சனையில் காங்கிரஸ் காட்டிய இனப் பகைமையையும், அதற்கு துணைபோன திமு.கவின் துரோகத்தையும் தமிழக மக்கள் மறந்திருப்பார்கள் என்ற நினைப்பில் திமுக, வருகிற சட்டமன்ற தேர்தலுக்காக மீண்டும் காங்கிரசுடன் கூட்டணி அமைத்துள்ளது. இது தமிழ் உணர்வாளர்கள் மற்றும் ஈழத்தமிழ் ஆதரவாளர்கள் மத்தியில் மீண்டும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், கருணாநிதியின் மூத்த மகனும், மு.க.ஸ்டாலினின் அண்ணனுமான மு.க.அழகிரி, “திமுகவுக்கும் காங்கிரசுக்கும் கொள்கை இல்லை. எனவே, வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக – காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறாது” என்று கூறியுள்ளார்.

இது குறித்து தந்தி தொலைக்காட்சிக்கு மு.க.அழகிரி தொலைபேசி மூலம் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:

திமுக – காங்கிரஸ் இரண்டு கட்சிகளுக்குமே கொள்கை இல்லை. காங்கிரசுடன் கூட்டணியில் இருந்தோம், அமைச்சரவையில் இருந்தோம், அதன்பிறகு காங்கிரஸை விட்டு விலகினோம். திமுக விலகியது. அதன்பிறகு காங்கிரஸ் கட்சியை திமுக “நன்றி கெட்டவர்கள்” என்றது.

நன்றி கெட்டவர்கள் என்று கூறிவிட்டு, பிறகு கனிமொழி எம்.பி. பதவிக்காகச் சென்று பிச்சை எடுத்தார்கள். மீண்டும் காங்கிரஸுடன் கூட்டணி என்கிறார்கள். அதனால்தான் இரண்டு கட்சிகளுக்குமே கொள்கையே இல்லை என்கிறேன்.

வரும் சட்டப்பேரவை தேர்தலில் திமுக – காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறாது என்பது என்னுடைய கருத்து, அவ்வளவுதான்.

இவ்வாறு மு.க.அழகிரி கூறியுள்ளார்.

1