கூட்டணிக்கு எதிர்ப்பு: பாமக.வில் இருந்து விலகினார் நடிகர் ரஞ்சித்

அதிமுக – பாஜக கூட்டணியில் பாமக இணைந்த்தற்கு எதிர்ப்பு தெரிவித்து, பாமகவின் மாநில துணைத் தலைவரும் பிரபல நடிகருமான ரஞ்சித் அக்கட்சியில் இருந்து விலகியுள்ளார்.

மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைத்துள்ள நிலையில், அக்கூட்டணியில் பாமக இணைந்தது. மாநில அரசை தொடர்ந்து விமர்சித்துவந்த பாமக, அக்கட்சியின் கூட்டணியில் இணைந்ததற்கு அக்கட்சியிலேயே எதிர்ப்பு எழுந்தது.

அதிமுகவுடனான கூட்டணி முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாமக இளைஞரணி செயலாளர் ராஜேஸ்வரி பிரியா தனது பதவியை ராஜினாமா செய்ததுடன், அக்கட்சியில் இருந்து விலகினார். இதனைத் தொடர்ந்து பாமக மாநில துணைத் தலைவர் பதவி வகித்து வந்த நடிகர் ரஞ்சித்தும் இன்று பாமகவில் இருந்து விலகும் முடிவை அறிவித்துள்ளார்.

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த ரஞ்சித் தனது முடிவினை அறிவித்தார். பாமக தலைமையின் முடிவால் அதிருப்தி அடைந்துள்ளதாக கூறிய ரஞ்சித், பாமகவின் மக்கள் நலத் திட்ட அறிவிப்புகளால் ஈர்க்கப்பட்டு அக்கட்சியில் இணைந்ததற்கு வேதனைப்படுவதாக தெரிவித்தார்.

அதிமுக அமைச்சர்கள் அனைவர் மீதும் ஊழல் புகார் கூறிவிட்டு அவர்களுடனே கூட்டணி அமைப்பதா என்று கேள்வி எழுப்பிய ரஞ்சித், மதுக்கடைகளுக்கு எதிராக பிரச்சாரம் செய்துவிட்டு மது விற்பவர்களுடன் கூட்டணி சேரலாமா? என்றும் கேள்வி எழுப்பினார். யாரை எதிர்த்து போராடுகிறோமோ அவர்களுடனேயே விருந்து சாப்பிடுவது வேதனை அளிப்பதாகவும் ரஞ்சித் தெரிவித்தார்.

தொண்டர்களிடம் கருத்துக் கேட்காமல் கூட்டணி அமைத்ததன் மூலம், தன்னை நம்பி வந்த இளைஞர்கள் தலையில் பாமக மண்ணை அள்ளிப் போட்டுவிட்டதாகவும் ரஞ்சித் கடுமையாக குற்றம் சாட்டினார்.

பாமகவின் 10 அம்ச கோரிக்கை என்பது இந்த ஆண்டின் மிகச் சிறந்த நகைச்சுவை என்று கூறிய ரஞ்சித், இளைஞர்கள், பொதுமக்களை பாமக நொடிப்பொழுதில் ஏமாற்றிவிட்டதாகவும், விவசாயிகளை ஒரு நொடிப்பொழுதாவது பாமக நினைத்துப் பார்த்ததா? என்றும் கேள்வி எழுப்பினார்.

அதிமுகவை தரக்குறைவாக விமர்சித்துவிட்டு அவர்களோடே கூட்டணி அமைப்பதை தன்னால் ஏற்க இயலவில்லை என்றும், அதனால், தனது வீட்டிலுள்ள அனைவரிடமும் கலந்து பேசி  பாமகவில் இருந்து விலகும் முடிவை எடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.