நடிகை சாட்னா டைடஸ் ரகசிய திருமணம் முடிந்தது; பகிரங்க திருமணம் வரும் ஜனவரியில்!

விஜய் ஆண்டனியின் ‘பிச்சைக்காரன்’ படத்தில் நாயகியாக அறிமுகமானவர் சாட்னா டைடஸ். இவரை கே.ஆர். பிலிம்ஸ் நிறுவனத்தின் பங்குதாரரும் பட வினியோகஸ்தருமான கார்த்திக் ரகசிய திருமணம் செய்து கொண்டதாக தமிழ் திரையுலகில் ஒரு தகவல் பரவியது. இது ஊடகங்களிலும் செய்தியாக உலா வந்தது.

இதனையடுத்து, “இரு வீட்டாரின் சம்மதத்துடன் நாங்கள் பதிவு திருமணம் செய்து கொண்டது உண்மை தான்” என்று கார்த்திக் விளக்கம் அளித்தார். அதை சாட்னாவின் தாயார் மாயா மறுத்தார்.

இது குறித்து மாயா கூறுகையில், “என் கணவர் டைடஸ் கேரளாவில் சொந்தமாக ஓட்டல் நடத்தி வருகிறார். என் மகள் சாட்னா பிளஸ்-2 படிக்கிறார். சினிமாவிலும் நடித்து வருகிறார்.

“படவினியோகஸ்தர் கார்த்திக் என் மகளிடம் ‘நீ நடிக்க வேண்டாம். உன்னை பெரிய தயாரிப்பாளராக மாற்றுகிறேன். வினியோகஸ்தர் ஆக்குகிறேன். நாம் லண்டனில் செட்டில் ஆகலாம்’என்று ஆசை வார்த்தை கூறி, மூளை சலவை செய்து, சாட்னாவை எங்களிடம் இருந்து பிரித்து விட்டார். ‘இனி நடிக்கக் கூடாது. திருமணத்துக்குப் பிறகு நடித்தால் சரியாக இருக்காது’ என்று கூறி சில படங்களில் நடிக்க வாங்கிய அட்வான்ஸ் பணத்தையும் திருப்பிக் கொடுக்க வைத்து விட்டார். நான் போனில் கூட மகளிடம் பேச முடியாமல் செய்து விட்டார்.

“கார்த்திக் பதிவு திருமணம் செய்ததாக சொல்வது பொய்.என் மகளை அவரிடம் இருந்து மீட்க திரை உலகினர் உதவி செய்ய வேண்டும். நடிகர் சங்கத்திடமும் இது பற்றி புகார் செய்து தீர்வு காண முயற்சி செய்வோம்” என்றார்.

இந்நிலையில் கார்த்திக் – சாட்னா இருவரும் இணைந்திருக்கும் புகைப்படத்துடன், இருவரும் கையெழுத்திட்ட செய்திக்குறிப்பு ஒன்றை ஊடகங்களுக்கு அனுப்பியுள்ளார்கள். அதில், “கார்த்திக், சாட்னா டைடஸ் ஆகிய நாங்கள் இருவரும் மனதார காதலித்து, இருவரின் பூரண சம்மதத்துடன் பதிவுத்திருமணம் செய்துகொண்டோம்.

“வரும் ஜனவரி 2017ல் எங்கள் இரு குடும்பங்களும், சுற்றமும், நட்புறவும் கூட, பெரும் மதிப்பிற்குரிய பத்திரிகையாளர்கள் உங்கள் ஆதரவுடன் பிரமாண்டமான முறையில் எங்கள் திருமணம் நடைபெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்” என்று கூறியுள்ளார்கள்.

0a1k