நீண்டநாள் காதலரான தொழிலதிபரை மணந்தார் ஹன்சிகா: சிந்தி முறைப்படி திருமணம் நடந்தது

நடிகை ஹன்சிகா மோத்வானி தனது நீண்டநாள் காதலரான தொழிலதிபர் சோஹேல் கதுரியாவை கரம் பிடித்தார். நண்பர்களும், குடும்ப உறுப்பினர்களும் சூழ, தம்பதிகளின் திருமணம் சிந்தி முறைப்படி கோலாகலமாக நடைபெற்றது.

கடந்த 2003-ம் ஆண்டு வெளியான பாலிவுட் படமான ‘ஹவா’ படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் ஹன்சிகா. தனுஷ் நடிப்பில் வெளியான ‘மாப்பிள்ளை’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானார். தமிழில் முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ள ஹன்சிகாவின் 50-வது படமான ‘மஹா’ அண்மையில் வெளியானது.

சமீபத்தில் அவர் தன் காதலர் சோஹேல் கதுரியாவுடன் திருமண நிச்சயதார்த்தம் நடந்ததாக அறிவித்தார். அதோடு தன் காதலர் ஈபிள் டவர் முன்பு தனது காதலை தன்னிடம் வெளிப்படுத்தும் புகைப்படத்தையும் வெளியிட்டார்.

இந்நிலையில், இன்று (05-12-2022) நடிகை ஹன்சிகாவுக்கு ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள முந்தோடா கோட்டையில் திருமணம் நடைபெற்றது. கடந்த 2-ம் தேதியிலிருந்து முந்தோடா கோட்டையில் திருமணச் சடங்குகள் நடந்தன. முதல் நாளில் மருதாணி நிகழ்வு, இரண்டாவது நாளில் இசை நிகழ்ச்சி நடந்தது. அதனை தொடர்ந்து இன்று ஹன்சிகாவுக்கும் தொழிலதிபர் சோஹேல் கதுரியாவுக்கும் சிந்தி முறைப்படி திருமணம் நடைபெற்றது. இந்நிகழ்வில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே கலந்துகொண்டனர்.

திருமணத்திற்கு பிறகு மணமக்கள் ஒன்றாக நடந்து வருவது போன்ற வீடியோ மற்றும் திருமணத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வெளியாகி இருக்கிறது.

ஹன்சிகா தனது சோஷியல் மீடியா பக்கத்தில் திருமணச் சடங்குகள் தொடர்பாக புகைப்படங்களை வெளியிட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.