அம்பானியின் ‘ஜியோ’ விளம்பர நடிகராக புதுமுகம் நரேந்திர மோடி அறிமுகம்!

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ‘ஜியோ’ விளம்பர நடிகராக – பிராண்ட் அம்பாசடராக அறிமுகமாகியிருக்கிறார் புதுமுகம் நரேந்திர மோடி! இதன்மூலம் அவர் விளம்பரத் துறைக்குள் மாடலாக அடியெடுத்து வைத்திருக்கிறார்!!

தனியார் நிறுவனமான முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் சமீபத்தில் அறிமுகப்படுத்தியுள்ள ரிலையன்ஸ் ஜியோ இணைய சேவை திட்டத்துக்கு விளம்பர மாடலாக இந்திய பிரதமர் நரேந்திர மோடியை வைத்து வடிவமைக்கப்பட்ட விளம்பரம் பத்திரிகைகளில் வெளியாகியுள்ளது. ஹிந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழின் டெல்லி, குர்ஹான் உள்ளிட்ட நான்கு பதிப்புகளின் முதல் பக்கத்தில் இந்த விளம்பரம் வெளியாகியுள்ளது. இதுபோல் டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழிலும் வெளியாகியுள்ளது.

0a1m

இந்திய பிரதமரின் படங்களை அரசு சார்ந்த திட்டங்களின் விளம்பரங்களில் மட்டுமே பயன்படுத்துவது வழக்கம். ஆனால் ரிலையன்ஸ், தன்னுடைய வியாபார விஸ்தரிப்புகளுக்காக (தன் சக போட்டியாளர்களான ஏர்டெல் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் வீழ்ச்சியை சந்தித்துள்ளது குறிப்பிடத் தகுந்தது) பிரதமரின் படத்தைப் பயன்படுத்தியுள்ளது.

நரேந்திர மோடிக்கும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானிக்குமான நட்பு உலகறிந்த நிலையில், இப்படி வெளிப்படையாக ஒரு நாட்டின் பிரதமராக உள்ளவர் தனியார் நிறுவனத்துக்கு விளம்பர தூதுவர் ஆகியுள்ளது சமூக ஊடகங்களில் கண்டனங்களை கிளப்பியுள்ளது.

ஆம் ஆம்தி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்களும், பல்லாயிரக்கணக்கான பதிவர்களும் சமூக வலைத்தளங்களில் நரேந்திர மோடியை நார் நாராய் கிழித்து தொங்கவிட்டுக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் மோடி இது குறித்து வழக்கம் போல் வாய் மூடி மௌனம் சாதித்து வருகிறார்.

வாஜ்பாயி தலைமையிலான பாஜக ஆட்சிக்காலத்தில், அதன் ஆட்சி அதிகாரத்தில் ரிலையன்ஸ் செலுத்தி தாக்கம் ‘எஸ்ஸார் டேப்ஸ்’ மூலம் வெளிவந்திருக்கிறது. அது குறித்து ஊடகங்களும் ஆட்சியில் இருப்பவர்களும் மவுனம் சாதித்து வருகின்றனர். தற்போது மோடி தலைமையிலான பாஜக ஆட்சியிலும், ஆரம்பம் முதலே ரிலையன்ஸ் செலுத்தி வரும் அதிகாரம் சர்ச்சைக்குள்ளான நிலையில், அதை மெய்ப்பிப்பதாக உள்ளது இந்த விளம்பரம்.