“தமிழகத்தில் மத மோதலை ஏற்படுத்த முயலும் தீய சக்திகள் மீது கடும் நடவடிக்கை தேவை!”

அமைதிப் பூங்காவாக திகழும் தமிழகத்தில் மத மோதலை ஏற்படுத்த முயலும் தீய சக்திகள் மீது கடும் நடவடிக்கை தேவை என தமிழக அரசுக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோரிக்கை விடுத்துள்ளது..

இது தொடர்பாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பொதுச் செயலாளர் எம்.முஹம்மது யூசுஃப் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

திருப்பூர் வடக்கு மாவட்ட பாஜக துணைத் தலைவர் மாரிமுத்து, இவர் கடந்த வாரம் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார்.

காவல்துறையினர், சடலத்தை மீட்டபோது கைகள் கட்டப்பட்டும், வாயில் துணி வைத்து அடைக்கப்பட்டும் இருந்துள்ளது. மேலும், சம்பவ இடத்தில் மோடி படத்திற்கு   செருப்பு மாலை அணிவித்தும், தேசியக் கொடியை தலைகீழாக பறக்கவிட்டும், சில எண்களை எழுதி வைத்து, ‘இது தற்கொலை அல்ல, கொலை தான், இன்னும் தொடரும்’ என்பது போல் பாஜகவினரே செட்அப் நாடகத்தை அரங்கேற்றியுள்ளனர்.

இது கொலை அல்ல, தற்கொலை தான் என்பதை சில மணி நேரங்களிலேயே காவல்துறையினர் கண்டுபிடித்து, ஊடகங்கள் வழியாக உண்மையை போட்டு உடைத்துவிட்டனர். இதில் ஏதேனும் தாமதம் ஏற்பட்டிருந்தால் ‘முஸ்லிம் ஜிஹாதிகளால் இந்துத் தலைவர்களுக்கு ஆபத்து’ என்ற வழமையான கோஷத்தை எழுப்பி, இறுதி ஊர்வலமே கலவரமாக மாறி இருந்திருக்கும். அதற்கு இடம் கொடுக்காமல் இவ்விவகாரத்தில் துரிதமாக செயல்பட்டு சட்டம் ஒழுங்கை பாதுகாத்த காவல்துறைக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பாராட்டினை தெரிவித்துக்கொள்கிறது.

ஒவ்வொரு நிகழ்வுகளிலும் மத மோதலை ஏற்படுத்த சதி செய்யும் பாஜகவின் நடவடிக்கையை  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வன்மையாகக் கண்டிக்கிறது. மேலும், தற்கொலையை கொலையாக மாற்ற நடைபெற்ற சதியில் தொடர்புடையவர்களை விரைவாக கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தமிழக அரசையும், காவல் துறையையும் கேட்டுக் கொள்கிறது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.