புதிய ரூ.500, 2000 நோட்டு விவகாரம்: மோடி அரசின் மோசடி அம்பலம்!

புதிய 500, 2000 ரூபாய் நோட்டுகள் அச்சிடும் பணி பற்றி, தந்தி டிவி, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் ரிசர்வ் வங்கியிடம் சில கேள்விகள் கேட்டிருந்தது.

இதற்கு பதிலளித்துள்ள ரிசர்வ் வங்கி, “புதிய 2000, 500 ரூபாய் நோட்டுக்களின் வடிமைப்பை 2016 மே 19ஆம் தேதி மோடி அரசுக்கு ரிசர்வ் வங்கி அனுப்பி வைத்தது. 2016 ஜூன் 7ஆம் தேதி புதிய ரூபாய் நோட்டுக்களுக்கான வடிவமைப்பிற்கு மோடி அரசு ஒப்புதல் வழங்கியது. 2016 ஆகஸ்ட் 22ஆம் தேதி 2000 ரூபாய் நோட்டுக்களை அச்சிடும் பணி துவங்கியது. புதிய 500 ரூபாய் அச்சிடும் பணி நவம்பர் 23ஆம் தேதி துவங்கியது” என அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது.

ஆகஸ்ட் 22ஆம் தேதியே 2000 ரூபாய் நோட்டுக்கள் அச்சாகத் தொடங்கி விட்டன எனும்போது, அந்த நோட்டுகளில் அப்போதைய ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் கையெழுத்து தான் இடம் பெற்றிருக்க வேண்டும். ஆனால், அதற்கு மாறாக,  சுமார் 2 வாரங்களுக்குப் பிறகு – செப்டம்பர் 4ஆம் தேதி – ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக பொறுப்பேற்ற உர்ஜித் பட்டேலின் கையெழுத்து, ஆகஸ்டு 22ஆம் தேதி அச்சான 2000 ரூபாய் நோட்டுகளில் இடம் பெற்றுள்ளதே… அது எப்படி என்ற கேள்வி எழுந்துள்ளது.

மேலும், அடுத்த நான்கு மணி நேரத்துக்குப்பின் (நள்ளிரவு முதல்) 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என நவம்பர் 8ஆம் தேதி இரவு 8 மணிக்கு தடாலடியாக அறிவித்த நரேந்திர மோடி, அந்த நோட்டுகளை நவம்பர் 10ஆம் தேதி முதல் வங்கிகளில் கொடுத்து புதிய 500, 2000 ரூபாய் நோட்டுகளை பெற்றுக்கொள்ளலாம் என்றும் தெரிவித்தார். மோடியின் அறிவிப்பு வெளியானவுடனே செய்தியாளர்களை கூட்டாக சந்தித்த ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் பட்டேலும், மோடி அரசின் பொருளாதார ஆலோசகர் சக்திகாந்த தாஸூம், “இது தான் புதிய 2000, 500 ரூபாய் நோட்டு” என்று தொலைக்காட்சி காமிராக்கள் முன் படமாக தூக்கிக் காட்டினார்கள்.

ஆனால், தற்போது ரிசர்வ வங்கி தந்தி டிவிக்கு அளித்துள்ள விளக்கத்தின்படி பார்த்தால், “செல்லாது” என்று அறிவித்துவிட்டு சுமார் 2 வார காலம் (நவம்பர் 22ஆம் தேதி வரை) புதிய 500 ரூபாய் நோட்டுக்களை அச்சடிக்காமலே காலம் கடத்திக்கொண்டிருந்திருக்கிறது மோடி அரசு. அதனால் தான் போதுமான பணம் இல்லாமல் ஏ.டி.எம்.கள் மூடப்பட்டன, செலவுக்கு பணம் பெற முடியாமல் மக்கள் வங்கிகளில் திண்டாடித் தவித்தார்கள், மன உளைச்சலுக்கு ஆளானார்கள் என்பது இப்போது வெட்ட வெளிச்சமாகி இருக்கிறது.

இத்தகைய மோசமான மோசடி நிர்வாகத்தை மோடியைத் தவிர வேறு எந்த தற்குறியாலும் தர முடியாது என்பது இதன்மூலம் மீண்டும் ஒருமுறை நிரூபணம் ஆகியிருக்கிறது.