“என்மேல் இனி சாதி முத்திரை விழாமல் பார்த்துக் கொள்வேன்!” – ‘சத்ரியன்’ இயக்குனர்

‘சுந்தரபாண்டியன்’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் எஸ்.ஆர்.பிரபாகரன். அந்த படம் அவருக்கு வெற்றிப்பட இயக்குனர் என்ற பெயரை மட்டும் அல்ல, ஒரு குறிப்பிட்ட சாதியை தூக்கிப் பிடிப்பவர் என்ற அவப்பெயரையும் பெற்றுத் தந்தது. அதன்பின் ‘இது கதிர்வேலன் காதல்’ படத்தை இயக்கிய எஸ்.ஆர்.பிரபாகரன், தற்போது சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில், யுவன் சங்கர் ராஜா இசையமைப்பில், விக்ரம் பிரபு – மஞ்சிமா மோகன் நடிப்பில் உருவாகும் ‘சத்ரியன்’ படத்தை இயக்கியுள்ளார். அவரிடம் சில கேள்விகள், அவற்றுக்கு அவர் அளித்த பதில்கள்:-

சுந்தரபாண்டியன் படம் மூலம் உங்க மேல விழுந்த சாதி அடையாளம் பற்றி…?

‘சுந்தரபாண்டியன்’ விமர்சனங்கள் அப்படித் தான் வந்தது. இதை ஒரு கேள்வியாகவும் என் முன்னாடி வெச்சாங்க. நான் நேர்மையா ஒரு விஷயத்தை பதிவு பண்ண ஆசைப்படுறேன். ‘சுந்தரபாண்டியன்’ல சாதிங்ற அடையாளத்தை நான் வேணும்னு சேர்க்கல. நான் வாழ்ந்த வாழ்க்கை அதுக்குள்ள இருக்கிறதால முதல் கதை பண்ணும்போது இயல்பாகவே அது என் திரைகதையில வந்துடுச்சு. நம்மளோட பழக்க வழக்கங்கள், உறவுமுறைகள் தானே நம்ம கதையில பிரதிபலிக்கும்?. உசிலம்பட்டி, தேனி தான் என் கதைகளம்னு முடிவானதும் நான் அங்கயே தங்கியிருந்தேன். அப்ப நான் கவனிச்ச ஒரு விஷயம் உசிலம்பட்டி பஸ் ஸ்டாண்ட். அந்த பஸ் ஸ்டாண்ட்ல ஒரு இரண்டாயிரத்திற்கும் அதிகமான பெண்கள் தினமும் கல்லூரிக்கும், பள்ளிகளுக்கும் போவதை பார்த்தேன். ஆனா, முன்பு நான் பார்த்த ‘கருத்தம்மா’ மாதிரியான படங்கள்ல பெண் குழந்தைகளை இந்த பகுதியில கள்ளிப்பால் ஊத்தி கொல்ற மாதிரி தான் காமிச்சுருந்தாங்க. அடடா… இது பழைய நிகழ்வின் பதிவாச்சே… இப்ப இருக்கற நிலைமையை காமிக்கணும்னு முடிவு பண்ணித் தான் திரைகதையை அங்கிருந்து எழுத ஆரம்பித்தேன். அந்த ஊர்ல, ஊர் நடுவுல தேவர் சிலையை வெச்சு கும்பிடுறாங்க. அதை மறைத்து எப்படி நான் அந்த ஊரை பதிவு செய்ய முடியும்? படத்தோட தொடக்கத்துலயே அதை நான் காட்டியதால் எனக்கு அப்படி ஒரு முத்திரை குத்திட்டாங்க போல. இனிமேல் அப்படி எதுவும் வந்துவிடக் கூடாதுனு இப்ப கவனமா இருக்கேன்.

இது கதிர்வேலன் காதல் படத்துக்குப் பின் ஏன் இந்த இடைவெளி?

ரெட்ஜெயண்ட் தயாரிச்ச ‘இது கதிர்வேலன் காதல்’ படத்தை முடிச்சதும் எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் நிறுவனத்துக்கு சிவகார்த்திகேயனை ஹீரோவா வச்சு ஒரு படம் பண்ண கமிட் ஆனேன். ரஜினி முருகன் படம் ஆரம்பிக்கவே தாமதமானது. எனவே நாங்களும் காத்திருக்க வேண்டியதாயிடுச்சு. இனிமேலும் தாமதிச்சா நல்லாயிருக்காதுனு சத்யஜோதி பிலிம்ஸ்ல இருந்து ஆல்ரெடி வந்த ஆஃபரை ஏத்துக்கிட்டேன். சத்யஜோதி பிலிம்ஸ்கிட்ட விக்ரம் பிரபு கால்ஷீட் இருந்தது. விக்ரம் பிரபு ‘வாகா’, ‘வீரசிவாஜி’ ஆகிய இரண்டு படங்கள்ல பிஸியா இருந்தார். நான் அவருக்கு சொன்ன கதைக்கு கெட்அப் மாற வேண்டியிருந்ததால அந்த இரண்டு படங்கள் முடிச்சுட்டு தான் வர வேண்டியதாயிருச்சு. லேட்டானாலும் கூட நான் நினைச்ச ஒரு படத்தை எடுத்திட்டேன் என்கிற திருப்தியை ‘சத்ரியன்’ கொடுத்துருக்கு. இந்த தாமதம் சினிமால சகஜம் தானே?

சத்ரியன் எது பற்றிய படம்?

இது மிகவும் யதார்த்தமான கேங்ஸ்டர் படம். ஆல்ரெடி நிறைய கேங்ஸ்டர் படங்கள் வந்திருக்கு. ‘உதயம்’, ‘அமரன்’ போன்ற நிறைய கேங்ஸ்டர் படங்கள் இங்கு பதிவாகியிருக்கு. ஆனா, இந்த படங்களை ஒரு சினிமாவா தான் காட்சிபடுத்தியிருப்பாங்க. ‘அமரன்’ல கொஞ்சம் இயல்பு வாழ்க்கையை பதிவு பண்ண முயற்சி பண்ணினாங்க. நான் ஒரு கேங்ஸ்டரை சினிமாவா இல்லாம, அவங்களுக்கு நெருக்கமா நின்னு ஒரு வாழ்க்கையா அழுத்தமா பதிவு பண்ணிருக்கேன். இநத ‘சத்ரியன்’ படத்துல சினிமாத்தனமான கேங்ஸ்டரை எந்த பிரேம்லயும் பாக்க மாட்டீங்க.  ஒரு கேங்ஸ்டர் வாழ்க்கையில என்னென்ன நடக்கும், அத எப்பிடி எதிர் கொள்வாங்கறது தான் படத்துல இருக்கும். எந்த பிரேம்லயும் ஹீரோ தெரிய மாட்டார். குணா என்கிற இளைஞன் தான் தெரிவார். நம்ம ஊரோட தன்மை, கலாசாரம், பழக்க வழக்கம், வாழ்வியலை தான் பதிவு பண்ணியிருக்கேன்.

கேங்ஸ்டர்  கதாபாத்திரத்துக்கு விக்ரம்பிரபு செட் ஆனாரா ?

நான் நினைத்த குணாவாக விக்ரம் பிரபு வாழ்ந்து காட்டியிருக்கிறார். ‘அரிமா நம்பி’, ‘இவன் வேற மாதிரி’ இரண்டுலயும் வேற வேற ஆக்ஷன் கேரக்டர்ஸ்ல நடிச்சுட்டாரு. அதுலயே நிறைய வித்தியாசம் காட்டினவரு இந்த படத்துல இன்னும் வித்தியாசம் காமிச்சிருக்காரு. இந்த படம் நம்ம வாழ்வியலோட இணைஞ்ச ஆக்ஷன்றதால விகரம் பிரபுவ ஆக்ஷன் ஹீரோவா நம்ம மனசுல பதிய வைக்கிற படமா ‘சத்ரியன்’ இருக்கும்.  படம் முழுக்கவே யதார்த்தம் மீறாத ஆக்ஷன் தான் பண்ணியிருக்கார்.

 மஞ்சிமா மோகனை தேர்வு செய்தது பற்றி ?

நான் இந்த  படத்துக்கு ஏற்கனவே  ஹீரோயினா இருக்குறவங்க  வேண்டாம்னு முடிவு பண்ணி தேடினப்ப தான் மஞ்சிமா மோகன் நடிச்ச ‘ஒரு வடக்கன் செல்ஃபி’  பாத்தேன். அதுல அவங்க என் கதைக்கு தேவைப்படுற திருச்சி பெண் நிரஞ்சனாவாக தெரிஞ்சாங்க. நான் அவங்கள மீட் பண்ற வரைக்கும்  அவங்க வேற ஒரு தமிழ் படத்துல நடிக்கிறாங்கன்னு தெரியாது.

 இதர முக்கிய கேரக்டர்கள் பற்றி…? 

என் படங்கள்ல ஹீரோ, ஹீரோயினை தாண்டி எல்லா கேரக்டர்களும் ஸ்கோர் பண்ணும். இந்த படத்துலயும் அதை பார்க்கலாம். அருள்தாஸ் அண்ணன், ஆர்ட் டைரக்டர் விஜய் முருகன், வேட்டையன் கவின், “வெளுத்துக்கட்டு” கதிர் இந்த நாலு பேரும் படத்துல முக்கியமான கேரக்டர்ஸ். நாலு கேரக்டர்களுக்குள்ளயும் ஒரு நெருக்கமான ரிலேஷன்ஷிப் இருக்கும். சரத் லோகிதஸ்வா, கன்னடத்துல தேசிய விருது வாங்கின தாரா மேடம் – இரண்டு பேருக்கும் முக்கியமான கேரக்டர்ஸ். தாரா மேடம் தமிழ்ல ‘இங்கேயும் ஒரு கங்கை’ படத்துல ஹீரோயினா நடிச்சவங்க. ‘சுந்தரபாண்டியன்’ மாதிரி இதுலயும் எல்லா கேரக்டர்ஸூம் நமக்கு நெருக்கமா பதிவாவாங்க.

யுவன் ஷங்கர் ராஜாவுடன் பணியாற்றியது பற்றி…?

என் இரண்டாவது படத்துலயே ஹாரிஸ் ஜெயராஜ் கூட வொர்க் பண்ணிட்டேன். யுவன் கூட தயக்கமின்றி நெருக்கமாக அது பயன்பட்டிச்சு. ஒரு கதையை, காட்சியை யுவன் சாரோட மியூசிக் வேற இடத்துக்கு கொண்டு போய்டும். இது நான் சொல்லித் தான் தெரியணும்னு இல்லை. அழுத்தமான படம்ன்றதால யுவன் சார் தான் முதல் சாய்ஸ் ஆக இருந்தார். பாடல்களுக்கு பாசிட்டிவான விமர்சனங்கள் வருது. பாடல்களை விட பின்னணி இசை தாக்கத்தை ஏற்படுத்தும்.

அஜித்விஜய் போன்ற  பெரிய ஹீரோக்களை வைத்து படம் பண்ணுவீர்களா?  

‘சுந்தரபாண்டியன்’ ரிலீஸாகி பெரிய வரவேற்பு அடைஞ்சதும், நீங்க சொன்ன ரெண்டு ஹீரோக்கள்ல ஒருத்தரை இயக்குற வாய்ப்பு வந்தது. ஆனா எனக்குனு ஒரு தனி அடையாளத்தை உருவாக்கணும்னு ஆசைப்பட்டேன். என் பேர் கூட எவ்வளவு பேருக்கு ரீச் ஆகியிருக்குனு தெரியலை. ஒரே ஒரு படம் மூலமா நான் ஆசைப்பட்ட அந்த அடையாளம் கிடைக்கிறது கஷ்டம். என்னோட அடையாளமா ‘சுந்தரபாண்டியன்’ படத்தை மட்டுமே சொல்லிக்க விரும்பலை. நமக்குனு ஒரு பத்து படைப்புகளை அழுத்தமா பதிவு பண்ணனும். அப்ப தான் எனக்கென்று தனி அடையாளம் கிடைக்கும் என நம்புகிறேன். பெரிய ஹீரோ பின்னாடி போனா நான் காணாம போய்டுவேனோன்னு ஒரு பயம் வந்துச்சு. சினிமாங்கிறது பணம் மட்டுமே கிடையாது, நம்ம வாழ்க்கையே சினிமா தான்னு முடிவு பண்ணி எத்தனையோ கனவுகளோட உள்ளே வந்திருக்கோம். அதெல்லாம் நிறைவேறும் வரை இப்படியே இருக்கணும்னு தோணுது.