கமல்ஹாசன் பிறந்தநாளில் ‘விஸ்வரூபம் 2’ ட்ரெய்லர் வெளியாகிறது!

பிக் பாஸ் நிகழ்ச்சி முடிவுற்றதைத் தொடர்ந்து, ‘விஸ்வரூபம் 2’ படத்தின் இறுதிக்கட்டப் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார் கமல்ஹாசன். இதன் படப்பிடிப்பு முழுமையாக முடிவுற்று, தற்போது கிராபிக்ஸ், பின்னணி இசைக் கோர்ப்பு உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே இருக்கும் ‘விஸ்வரூபம் 2’ படத்தின் ட்ரெய்லர், கமல்ஹாசனின் பிறந்தநாளான நவம்பர் 7ஆம் தேதி வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

‘விஸ்வரூபம் 2’ படத்துக்கு இசையமைப்பாளராக பணிபுரிந்து வரும் ஜிப்ரான், தனது ஃபேஸ்புக் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது, ‘விஸ்வரூபம் 2’ தொடர்பான கேள்விக்கு அவர் அளித்த பதில் வருமாறு:

’விஸ்வரூபம் 2′ ஆல்பம் ஒரு சிறந்த சினிமா அனுபவமாக இருக்கும். நான் உங்களுக்கு ஒரு ரகசியத்தைக் கூறுகிறேன். கமல் சார் இப்படத்தில் கர்நாடக சங்கீதத்தில் பாடல் ஒன்றை பாடியுள்ளார். அப்பாடல் வெளியான பிறகு கர்நாடக மற்றும் ஹிந்துஸ்தானி சங்கீதத்தில் கமல் சார் எவ்வளவு திறமை மிக்கவர் என்பதை நீங்கள் தெரிந்து கொள்வீர்கள்.

நீங்கள் எதிர்பார்த்ததைவிட ‘விஸ்வரூபம் 2’ திரைப்படம் விரைவில் வெளியாகி மிகப் பெரிய வெற்றியடையும். படத்தின் வெளியீட்டு தேதி குறித்து கூற எனக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. ஆனால் படத்தின் ட்ரெய்லர் பணி கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. ட்ரெய்லர் அருமையாக வந்துள்ளது. கண்டிப்பாக உங்கள் அனைவரையும் பிரமிக்க வைக்கும்.

இவ்வாறு ஜிப்ரான் கூறியுள்ளார்.