விழித்திரு – விமர்சனம்

நல்ல பழக்கமோ, கெட்ட பழக்கமோ அறியேன் – ஆனால் எனக்கொரு பழக்கம் இருக்கிறது. நான் பார்க்கிற ஒரு சினிமா பிடித்திருக்கிறது என்றால், எல்லோரும் அதைப் பார்க்க வேண்டும் என்று நான் நினைத்தால் அந்தப் படத்தின் கதையைச் சொல்ல மாட்டேன். படம் பார்க்கப்போகிறவர்களின் ரசனையைக் குலைத்துவிடக்கூடாது என்ற எண்ணத்தில் ஏற்பட்ட பழக்கம் இது.

இயக்குநர் மீரா கதிரவன் திரையரங்குகளுக்கு அனுப்பி வைத்துள்ள ‘விழித்திரு’ படத்தின் கதையைச் சொல்லப்போவதில்லை. படம் எனக்குள் ஏற்படுத்திய சில உணர்வுகளை மட்டும் பகிர்ந்துகொள்கிறேன்.

• நம்மைச் சுற்றி என்னென்னவோ நடக்கின்றன. விழித்திருக்காவிட்டால் அந்த நிகழ்வுகளின் விளைவுகளில் நாமும் சிக்கிக்கொள்வோம். இதைச் சில நிகழ்வுகளின் தற்செயல் இணைப்புகளைக் காட்டி உணர்த்துகிறது படம்.

• செய்திகளாக வந்து நம் மனதை வருத்துகிற சில நிகழ்வுகள் நேரடியாக நம்மிடம் வருகிறபோது, அல்லது ஏதோவொரு வகையில் அது நிகழ்கிறபோதே நாமும் இணைகிறபோது நம் மனதில் ஒரு பதற்றம் தொற்றிக்கொள்ளும். அப்படியொரு பதற்றத்தை இந்தப் படம் தொடக்கத்திலிருந்து இறுதிவரையில் தொய்வில்லாமல் தக்கவைக்கிறது.

• தங்கள் அதிகாரப் பசிக்காக மக்களை மதம், சாதி என்று கூறுபோடத் தயங்காத சில அரசியல் பேர்வழிகளுக்கும், அவர்களுக்கு உடந்தையாக இருக்கக் கூசாத அதிகார ஆணவர்களுக்கும்,
ஏதோவொரு இருட்டு மூலையில் பெண் குழந்தைகளைக் கடத்தி விற்பனை செய்யக் கூசாத அயோக்கியவர்களுக்கும் என்ன தொடர்பு? அரசியல்-சமூக நிலைமை ஏற்படுத்துகிற அந்தத் தொடர்பு வெளிப்படுத்தப்படுகிறது.

• சந்திக்கிற மனிதர்கள் எல்லோரும் நல்லவர்கள் அல்ல, எல்லோரும் கெட்டவர்களும் அல்ல. கிடைக்கும் படிப்பினைகளிலிருந்து தங்களை மாற்றிக்கொள்கிறவர்களும் உண்டு, மாறுவது பற்றி அலட்டிக்கொள்ளாதவர்களும் உண்டு.

• இப்படியான கதையில் நகைச்சுவை இருக்க முடியுமா? கொஞ்சம் மிகையாக இருந்தாலும் சிரிக்கவைக்கிற காட்சிகள் பதற்றங்களுக்கான ஒத்தடங்கள்.

• வசூலை உறுதிப்படுத்துவதற்காக எனச் சேர்க்கப்பட்டுள்ள, பெண்களை துணி மூடிய சதைகளாகப் பார்க்க வைக்கிற ஒரு குத்துப்பாட்டுக் காட்சி நிச்சயமாக உறுத்துகிறது. அப்படியான செருகல் இல்லாமல் வெற்றிபெற முடியும் என்ற துணிவு இல்லையா?

• படத்தில் பல துணிவான முயற்சிகளைக் காண முடிகிறது. சில காட்சிகளின் சித்தரிப்புக் குறைபாடுகள் விமரிசிக்கப்பட வேண்டியவைதான் என்றாலும், அந்தத் துணிவான முயற்சிகள் பாராட்டுக்குரியவை. மிகவும் முன்னணி நட்சத்திரங்களை நாடாதது ஒரு துணிவு என்றால், அப்படி நாடியிருந்தால் துணிவான முடிவுக்காட்சிக்கு வழியில்லாமல் போயிருக்கும்.

• தமிழகத்தின் மனசாட்சியை உலுக்கிய, சாதிய ஆணவமும் வன்மமும் மேலோங்கிய ஒரு நிகழ்வு படத்தின் முன்னுரைக் காட்சியாகிறது. அதன் பின் கதை வேறு தடங்களுக்கு மாறிவிடுகிறது. அந்த அரசியலை ஏன் விரிவாகச் சொல்லவில்லை என்ற விமர்சனக் கேள்வி முன்னுக்கு வருகிறது. ஆனால் இன்றைய தமிழ் சினிமாச் சூழல் இந்த அளவுக்குத்தான் இதைப் பேச அனுமதிக்கிறது என்ற கொடூர எதார்த்தம் புரிகிறது. இத்தகைய பட ஆக்கங்களுக்குக் கிடைக்கிற ஆதரவும் வெற்றியும், இனி வரும் படங்களில் மேலும் ஆழமாக சமூக உண்மைகளைப் பேசுவதற்கு ஊக்கமளிக்க வேண்டும்.

• ஒரு சினிமாவுக்கான மனமகிழ்வு மதிப்புகளோடும், மனதில் அசைபோடுவதற்கான சிந்தனைத் துளிகளோடும் வந்துள்ள இந்தப் படத்தை, வர்த்தக சினிமாவின் கால்கள் எத்தித் தள்ளக்கூடும். அதை அனுமதிக்காமல் உடனே பார்த்துவிடுங்கள்.

KUMARESAN ASAK