நடிகர் – எம்.எல்.ஏ. கருணாஸ் கைது: அவதூறாக பேசியதாக வழக்கு

தமிழ் திரையுலகில் சிரிப்பு நடிகராக அறிமுகமாகி, பின்னர் நாயக நடிகராகவும், தயாரிப்பாளராகவும் உயர்ந்தவர் கருணாஸ். 2009ஆம் ஆண்டு முக்குலத்தோர் புலிப்படை என்ற சாதிக்கட்சியைத் தொடங்கிய இவர், 2016ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டுச் சேர்ந்து, இரட்டை இலைச் சின்னத்தில் திருவாடானை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வாக இருக்கிறார். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க. இரண்டாக உடைந்ததை அடுத்து, இவர் இ.பி.எஸ் – ஓ.பி.எஸ் அணிக்கு எதிராக, டிடிவி.தினகரன் அணிக்கு ஆதரவாக இயங்கி வருகிறார்.

கடந்த 16ஆம் தேதி முக்குலத்தோர் புலிப்படை கட்சி சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட கருணாஸ், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பற்றியும், போலீஸ் அதிகாரி ஒருவர் பற்றியும் அவதூறாகப் பேசியதாக புகார் எழுந்தது.

கருணாஸ் பேச்சுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்ததோடு, கருணாஸை கைது செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்கள். இதையடுத்து கூட்டுச் சதி, வன்முறையைத் தூண்டிவிடுதல், கொலை மிரட்டல் விடுத்தல், பொதுஅமைதிக்கு குந்தகம் விளைவித்தல், அவதூறாக பேசியது உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் போலீசார் கருணாஸ் மீது வழக்குப்பதிவு செய்தனர். அவரை கைது செய்ய 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது.

இதனால் கருணாஸ் தலைமறைவாகிவிட்டதாக தகவல்கள் பரவியதை அடுத்து, தனது வீட்டில் செய்தியாளர்களைச் சந்தித்த கருணாஸ், “நான் எங்கும் தலைமறைவாகவில்லை. என் வீட்டில் தான் இருக்கிறேன். என் தவறான பேச்சுக்கு வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார்.

கருணாஸ் கைது செய்யப்படுவாரா என்ற கேள்விக்கு நேற்றிரவு சென்னை விமான நிலையத்தில் பதில் அளித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, “சட்டம் தன் கடமையை செய்யும்” என்றார்.

இந்நிலையில், இன்று (ஞாயிறு) அதிகாலை சென்னை சாலிகிராமத்தில் உள்ள கருணாஸ் வீட்டிற்கு வந்த போலீசார், அவரை கைது செய்து நுங்கம்பாக்கம் போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றார்கள்.

 

Read previous post:
0a1f
சாமி ஸ்கொயர் – விமர்சனம்

திருநெல்வேலியில் போலீஸ் அதிகாரி ஆறுச்சாமியும், தாதா பெருமாள் பிச்சையும் மோதிக்கொண்டால் அது ‘சாமி’. ஆறுச்சாமியின் மகனான போலீஸ் அதிகாரி ராம்சாமியும், பெருமாள் பிச்சையின் மகனான தாதா ராவண

Close