கால் முறிந்தது பற்றி கமல்ஹாசன்: “20அடி உயரத்திலிருந்து விழுந்தேன்!”

நடிகர் கமல்ஹாசன் சமீபத்தில் தனது ஆழ்வார்பேட்டை அலுவலக மாடியிலிருந்து விழுந்ததால் கால் முறிந்து, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, பல நாள் தீவிர சிகிச்சைக்குப்பின் குணமடைந்து வீடு திரும்பினார். மாடியிலிருந்து விழுந்தது குறித்து கமல்ஹாசன் தனது பிளாக்கில் எழுதியிருப்பதாவது:

ஜுலை 14ஆம் தேதி. திடீரென்று எனது எல்டாம்ஸ் சாலை அலுவலகத்துக்கு போக விரும்பினேன். தினம் தினம் அப்படி போவதில்லை. எப்போதாவது இரவு சமயத்தில் அங்கு போவது உண்டு. கௌதமி எனது காதலர் அல்லது பார்ட்னர் என்பதைத் தாண்டி தாயாக மாறிய இரவு அது.

இந்த வீட்டில் 5வயதில் இருந்து வாழ்ந்திருக்கிறேன். 112 ஆண்டு காலம் பழமையான வீடு. எனது சகோதரர்களுக்கும், சகோதரிக்கும் சொந்தமானது. ‘சபாஷ் நாயுடு’ படத்தின் தமிழ், தெலுங்கு, ஹிந்தி படப்பிடிப்புகளை 70 நாட்களுக்குள் முடிக்க வேண்டும் என்ற திட்டம் இருந்தது. இன்னும் 45 நாட்களே எஞ்சியிருக்கிறது. அவ்வளவு வேகமாக அதனை தயாரிக்க திட்டமிட்டிருந்தேன். அவ்வளவு வேகமாக படம் எடுக்கப்பட்டால், எனது ராஜ்கமல் நிறுவனத்தின் வரலாற்றில் அது ஒரு புதிய சாதனையாக இருக்கும். அந்த சிந்தனையிலேயே நான் விரைவாக மொட்டைமாடிக்குப் போய்விட்டேன். கௌதமி முதல் மாடியில் செல்போனில் யாருடனோ பேசிக்கொண்டிருந்தார். அல்லது சாட் செய்து கொண்டிருந்திருக்கலாம். என்னைப் பார்த்து, “நானும் மேலே வரட்டுமா?” என்று கேட்டார்.

நான் மேலேயிருந்து சிறுவயதில் விளையாடிய மைதானத்தை ரசித்தேன். அதில் உள்ள சிமெண்டு பெஞ்சினை பார்த்தேன். 16 வயதில் அந்த பெஞ்சின் மறைவில் இருந்து அம்மாவுக்கு தெரியாமல் சிகரெட் புகைத்ததுகூட நினைவுக்கு வந்துபோனது. அணைத்த சிகரெட் துண்டுகளை பக்கத்து வீட்டின் பின்புறம் வீசியது நினைவுக்கு வந்தது. பக்கத்து வீட்டில்தான் எனது நண்பரும், திரைப்பட ஆசிரியருமான பி.ஏ.கிருஷ்ணனின் வீடு. அவருக்கு எந்த கெட்ட பழக்கமும் கிடையாது. என்னால் அவரது பெற்றோர்கூட அவரை சந்தேகித்தனர். தற்போது இதனை பிளாக்கில் எழுதுவதன் மூலம் அவனுக்கு அந்த உண்மை தெரியவரும்.

டெர்ரசில் இருந்து 5 அடி உயரத்தில் உள்ள விதானத்தைப் பிடித்து பரலேல் பார் அபால எடுக்க முயற்சித்தேன். என்து கைகள் விதானத்தில் இருந்து நழுவின. நான் கீழே விழுந்து கொண்டிருக்கிறேன்.

அப்போதும் என் மனது ‘எல்லாம் நீ போட்ட திட்டப்படி போய்க்கொண்டிருக்கும்போது இப்படி ஒரு காரியத்தை செய்கிறாயே’ என்று யோசித்தது. அந்த சிந்தனையுடனே தரையில் வந்து விழுகிறேன். எனது வலது முழங்கால் முறியும் சத்தம் எனக்கு கேட்கிறது. அடுத்து எனது முதுகு தரையில் விழுகிறது. எனது உடல் தரையில் இழுத்து செல்லப்படுவது போல உணர்வு. முதுகெலும்பு முறியாததால், கொஞசம் தப்பித்துக்கொண்டேன். கொஞ்சநேரம் அமைதி நிலவுகிறது. ஏன் கீழே விழுந்தேன்? எனக்கே தெரியாது. இப்போது அது குறித்து யோசித்தும் பலன் இல்லை. மூட்டில் இருந்து அத்தனை வலி. நான் “கௌதமி…” என்று கத்துகிறேன். அவருக்கு கேட்கவில்லை. ‘இஞ்சி இடுப்பழகா’ பாடல் மாதிரி, வெறும் காத்துதான் வந்தது. இரண்டாவதாக பலம் கொண்ட மட்டும் கத்தினேன். அப்போதுதான் அவருக்கு கேட்டது.

நான் எங்கேயிருக்கிறேன் என்று அவருக்கு தெரியவில்லை.

‘நான் இங்கேயிருக்கிறேன்’ என்று அவரிடம் கூற முயல்கிறேன். ஆனால், வாயில் இருந்து வார்த்தை வெளிவரவில்லை. “நான் இங்கே இருக்கிறேன். ஆனால், என்னால் கத்த முடியவில்லை” என்கிறேன்.

கௌதமி கத்துவதிலும் ஒரு பயம் தெரிந்தது. தலை குப்புற கிடக்கிறேன். வாயெல்லாம் மண். அதையெல்லாம் துப்ப முயல்கிறேன். கொஞ்சம்தான் துப்ப முடிந்தது. அதற்கும் நுரையீரலின் உதவி தேவைப்படும் அல்லவா? ம்ஹும். அப்போதுதான் எத்தனை உயரத்திலிருந்து விழுந்தேன் என எண்ணிப் பார்க்கிறேன். 20 அடி இருக்கும். ஓஓஓஓஓஓ! நான் இறந்துகொண்டிருக்கிறேனோ என்று நினைத்தேன்.

கௌதமி “நான் வந்துட்டே இருக்கேன்” என்று தெலுங்கில் கத்தியது கேட்டது. ஒவ்வொருவருக்கும் அவரது கஷ்டநேரத்தில் தாய்மொழிதான் முதலில் வரும் போல. நான் இறக்க நேரிட்டால், கௌதமியிடம் என்ன பாஷை பேசுவேன் என்று யோசித்தேன்.

கௌதமி, என்னை நோக்கி ஓடிவந்தார். அவர் விழுந்துவிடக் கூடாது என்று பதற்றமானேன். ’இது உனக்குத் தேவையா?’ என்று இந்த நிலையை ஏற்படுத்திக்கொண்டதற்காக என்னை நானே திட்டிக்கொண்டேன். கௌதமியின் குரல் உடைந்தது “எந்தண்டி இதி?” என்றார். “ஆம்புலன்ஸை கூப்டுங்க” என்று கத்தினார். அவர் குரலின் பரிதவிப்பு எனக்குத் தெரிந்தது. எனக்கு வலி பொறுக்க முடியவில்லை. “என் வலது காலைப் பார்” என்றேன்.

“ஐயையோ.. மோசமா உடைஞ்சிருக்கு..” என்றார். அப்போதுதான் கொஞ்சம் தைரியமான கௌதமியைப் பார்த்தேன். இரு மருத்துவர்களுக்குப் பிறந்த மகளாக அவர் மாறிவிட்டார் அப்போது. வலியும் தன்னம்பிக்கையும் திரும்பியது. உயிரோடுதான் இருக்கிறேன் என்ற இறுமாப்பு என் நகைச்சுவையைத் தூண்டிவிட்டது. “காலைப் பத்தி என்ன நினைக்கற…? எடிட் பண்ணிடலாமா?” என்று சைகையில் கத்திரியைக் காட்டிக் கேட்டேன். கௌதமி கோபமாய் நடந்து ஆம்புலன்ஸ் என்ன ஆச்சு என்று பார்த்து, “அப்பல்லோவுக்கு ஃபோன் போடுங்க” என்று சொல்லிக்கொண்டிருந்தார்.

ஓகே. நான் உயிரோடுதான் இருக்கிறேன்.. ஆனால் என் நகைச்சுவையை கௌதமி ரசிக்கவில்லை என்று புரிந்தது. என் வாயில் இருந்த மண் வேறு ருசியாக இல்லை. ரத்தம் ஏதும் இல்லாவிட்டாலும் உமிழ்நீர் வழிந்துகொண்டிருந்தது. நான் சரிபார்த்துக் கொண்டேன். ஓகே. மீண்டும் வாழப்போகிறேன். ஆனால் நிபந்தனைகள் ஏதும் இருக்குமோ? ‘”Conditions apply’ என்று இன்ஸ்யூரன்ஸ் விளம்பரம் போல நினைத்துக் கொண்டேன்.

ஆம்புலன்ஸ் வந்தது. அவர்கள் என்னை நகர்த்தி, வண்டியில் ஏற்றி வலியை கொடுத்துக்கொண்டிருந்தார்கள். எனக்கு கத்தவோ, முனகவோ கொஞ்சமும் சுரத்திருக்கவில்லை. வலியைத் தாங்கும் உறுதியுடன், ‘நான் ஒரு சிங்கம்..’, ‘நான் இரும்பு மனிதன்’ என்று நினைத்துக்கொண்டே இருந்தேன். ஆனால் என் உள்ளம் கத்திக்கொண்டுதான் இருந்தது. மருத்துவமனைக்குச் செல்லும் பயணத்தில், ஒவ்வொரு ஸ்பீட் ப்ரேக்கரையும் என் முதுகுத்தண்டும், காலும் உணர்ந்துகொண்டே இருந்தன

இவ்வாறு கமல்ஹாசன் எழுதியுள்ளார்..

Read previous post:
0a1m
மிரட்டும் இருட்டு – விமர்சனம்

ஒரே வீட்டுக்குள் நடக்கும் கதை. நாலே நாலு முக்கிய கதாபாத்திரங்கள். 88 நிமிடங்களே ஓடக்கூடிய படம். ஆனால் திகிலில், ரசிகர்களின் முதுகுத்தண்டெல்லாம் சில்லிட்டுப்போகச் செய்யும் பயங்கர மிரட்டல்.

Close