பிக்பாஸ் 3: கவின் – லாஸ்லியா காதலுக்கு இயக்குநர் வசந்தபாலன் ஆதரவு; நெட்டிசன்கள் எதிர்ப்பு

விஜய் தொலைக்காட்சியில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் ‘பிக்பாஸ் சீசன் 3’ நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள சின்னத்திரை நடிகர் கவின், சக போட்டியாளர்களான நடிகைகள் ஷெரின், அபிராமி, சாக்‌ஷி அகர்வால், இலங்கை தமிழ் தொலைக்காட்சி ஒன்றின் செய்தி வாசிப்பாளரான லாஸ்லியா ஆகிய நால்வரையும் ஒரே நேரத்தில் காதலிப்பதாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தி, பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தார். அந்த பார்வையாளர்களில் சிலர் கவினை ‘காதல் மன்னன்’ என கொண்டாடினார்கள். வேறு சிலர் ‘பொம்பளை பொறுக்கி’ என வசை பாடினார்கள்.

அந்த நான்கு பெண்களில் ஷெரின், “இது எனக்கு சரிப்பட்டு வராது” என ஆரம்பத்திலேயே கவினின் காதலை நிராகரித்துவிட்டார். அபிராமி நான்கைந்து நாட்கள் பழகிவிட்டு அவரும் கவினை கழற்றிவிட்டு விட்டார். இதன்பின் கவினும், சாக்‌ஷி அகர்வாலும் பரஸ்பரம் ஆதிக்கம் செலுத்தும் அளவுக்கு தீவிரமாக காதலிக்கத் தொடங்கினர். அப்போது கவினும், லாஸ்லியாவும் ரகசியமாக காதலிப்பது தெரிந்து போர்க்கோலம் பூண்டார் சாக்‌ஷி அகர்வால். பிக்பாஸ் வீடு சண்டைக்காடாக மாறியது. இதை சகிக்க முடியாத பார்வையாளர்கள் வாக்களித்து சாக்‌ஷியை வெளியேற்றினார்கள். இதனால் ஒரு தொல்லை நீங்கியது என்ற களிப்பில் கவினும் லாஸ்லியாவும் பகிரங்கமாக தெய்விக காதலர்கள் போல் வலம் வந்தார்கள்.

இதற்கிடையில், பிக்பாஸ் இல்லத்திலிருக்கும் இயக்குநர் சேரனுக்கும், லாஸ்லியாவுக்கும் அப்பா – மகள் உறவு மலர்ந்தது. வளர்ந்தது. ஒழுக்கமற்ற கவினை லாஸ்லியா காதலிப்பது சேரனுக்கு பிடிக்கவில்லை. அதனால் அந்த காதலை முறிக்க சேரன் சில முயற்சிகள் செய்ய, சேரன் – லாஸ்லியா உறவில் விரிசல் ஏற்பட்ட்து.

இந்நிலையில், பிக்பாஸ் இல்லத்துக்கு வந்த லாஸ்லியாவின் நிஜ அப்பா, அம்மா, தங்கைகள் ஆகியோர் எந்த ஒளிவுமறைவும் இல்லாமல் கவினின் காதலை நிராகரித்து லாஸ்லியாவை கதறடித்தார்கள்.

இது குறித்து திரைப்பட இயக்குநர் வசந்தபாலன் தனது முகநூல் பக்கத்தில் எழுதியிருப்பதாவது:

0a1a

கேரளா பிக்பாஸ் சீசன் 1 தொடரில் சின்னத்திரை தொகுப்பாளினி Pearle Maaney மற்றும் சின்னத்திரை நடிகர் Srinish Aravind கலந்துகொண்டு அங்கேயே ஒருவருக்கொருவர் ஈர்க்கப்பட்டு, தங்கள் காதலை வெளிப்படுத்தி, அதை கொண்டாடினார்கள். நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்து திருமணம் செய்து கொண்டார்கள். அவர்கள் இருவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் காதலை வெளிப்படுத்திய, கொண்டாடிய தருணங்களை பார்க்கையில், எந்த திரைப்பட இயக்குநரும் காட்சிப்படுத்த முடியாத கண்கொள்ளா காதல். பார்க்கப் பார்க்க தித்திக்கும் காதல். பார்க்காதவர்கள் கீழே உள்ள சுட்டியை கிளிக்கவும். https://www.youtube.com/watch?v=SCkqs1p6Who

ஆனால், தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேர்மாறாக லாஸ்லியா, கவின் காதல் பேச்சுவார்த்தை வளரும்போதே, “லாஸ்லியா, நீங்க எதுக்கு வந்து இருக்கீங்க?…கேமை கவனித்து விளையாடுங்க” என்ற அறிவுரைகள் நாலாபக்கமிருந்தும் வந்தவண்ணம் இருந்தது. முக்கியமாக சேரப்பா இந்த காதலை சேரவிடக் கூடாதென்ற குறிக்கோளுடன் கேம் கேம் என்றபடி இருந்தார்.

இன்று லாஸ்லியாவின் குடும்பம் பிக்பாஸ் நிகழ்ச்சிக்குள் வந்தபோது மிக நெகிழ்ச்சியாக இருந்தது. ”வழக்கமா என் பொண்ணு இப்படியில்லை! ஏன் இப்படி மாறுனே?” என்று லாஸ்லியாவின் அம்மா மற்றும் தங்கைகள் கேட்டவண்ணம் இருந்தார்கள்,

லாஸ்லியா செய்வதறியாது தவித்தார். ”எப்படி போனே? அப்படியே திரும்பி எங்கிட்ட என் மகளா வரணும்” என்று அந்த அம்மா கூறினார்கள்.

லாஸ்லியாவின் அப்பா பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைகிறார். “ஆனந்த யாழை” மீட்டியவண்ணம் நா.முத்துக்குமார் எங்கிருந்தாலும் கவிதை வரிகளில் வாழ்ந்தவண்ணம் இருக்கிறான். சியர்ஸ்….

அவரும் மகளின் காதலை விரும்பவில்லை. ”உன்னோட மகளுடைய கல்யாணத்துக்கா போற?” என்று சுற்றத்தார் தன்னை கேலி பேசினார்கள் என்று வலி மிகுந்த வார்த்தைகளை கூறினார்.

“என்ன மகளே! கையில வேர்க்கிது? என்று கேட்க, ’சின்ன வயசுல இருந்து அப்படி தான்பா உள்ளங்கைல வேர்க்கும்’ என்றார் லாஸ். அம்மாவும் ஆமோதித்தார்கள்.

ஆக, தமிழகத்தில் இன்னும் அனைவர் மத்தியிலும் காதலுக்கு எதிர்ப்பு என்பது  இன்னும் வலுவாகத் தான் உள்ளது. பிக்பாஸ் என்ன செய்ய?

”அனைவரும் கேம் விளையாடுங்க! இது கேம்! இது கேம்!” என்று அறிவுறுத்தியவண்ணம் இருக்கிறார்கள். ஆனால் என்னைப் பொருத்தவரை,  உலகின் சின்ன மினியேச்சர் தானே பிக்பாஸ் இல்லம். இங்கே கேம் விளையாடக் கூடாது. வாழத்தானே வேண்டும்.

வாழும்போது காதலும், கண்ணீரும் வருவது சகஜம் தானே? “காதலே காதலே” என்ற ’96’ திரைப்படத்தின் பாடல் தான் மனதில் ஒலிக்கிறது.

இவ்வாறு வசந்தபாலன் எழுதியுள்ளார்.

அவருக்கு சில நெட்டிசன்கள் கடும் எதிர்ப்பையும், விமர்சனங்களையும் வீசி வருகிறார்கள். அவற்றில் சில:

Arunkumar S

மாறுபடுகிறேன் சார்.. இங்கே பிரச்சினை காதல் இல்லை.. கவின்..

Vel Raj

தலைவரே, மலையாள பிக்பாஸ் ஃபுல்லா பாத்திருக்களா? ஸ்ரீனிஷும், கவினும் ஒண்ணா..? பாத்துட்டு வந்து பேசனும்…! ஸ்ரீனிஷ் பியர்லி கிட்ட பேசன விதம், கொடுத்த ஊக்கம், அவங்கள உள்ள இருக்குற ஹவுஸ்மேட்ஸ் பாக்குற விதம், எல்லாத்தயும் பாத்துருக்கீங்களா? சும்மா லவ்க்கு எல்லாரும் எதிரின்ற மாதிரி அடிச்சுவிடக் கூடாது சார். அவரவர் நடத்தை தான் முடிவு பண்ணும். அதவிட முக்கியமா அவங்க அத மோகன்லால் கிட்ட கன்வே பண்ண விதம். அவங்க ரெண்டு பேரும் Finalist.. இங்க கவின் இருந்த இடத்துல முகின் இருந்திருந்தா இது இப்படி நடந்திருக்காது….

Thamizhmani Manickam

பார்க்கும் பெண்களின் மீதெல்லாம் காதல் வயப்படும் ஒருவனிடம் இருந்து அந்த அப்பாவி பொண்ணை காக்க நினைக்கின்றனர்.

Appu Kutti

திரு. மரியநேசன் அப்படி ரியாக்ட் பண்ணதுக்கான முக்கிய காரணம், பெரும்பாலான ஆடியன்ஸுக்கு கவின்-லாஸ்லியாவோட காதல் உருவாகி, வளர்ந்த விதம் பிடிக்காமல் போனது. இந்தக் காதலை ஆடியன்ஸ் கொண்டாடி இருந்தா, அவரோட ரியாக்ஷன் நிச்சயம் வேற மாதிரி இருந்திருக்கும்…

Karthik Yuvraj

கவின் at a time ரெண்டு leg ஐயும் தூக்கிட்டு நிக்கனும்ன்னு நெனைப்பான் சார். மிகப் பெரிய நடிகன் . அவன் Losliyaவ வெச்சு time pass பண்றான். Big bossஅ வெச்சு நம்ம time pass பண்ணிக்கலாம்.

Sivakumar Venkatachalam

ஓவர் ஆல்.. இது கேம் கூட இல்ல.. இட்டுக்கட்டிய ட்ராமா.. இந்த எமோஷனல் சீன் கூட அதுல ஒரு அங்கம்.. விஜய் டிவிகாரன் பின்றான்யா!