பன்னாட்டு முதலாளிகளுடன் மோடி போட்டிருப்பது “பேக்கரி டீலிங்” தான்!

“அரசிதழில் வெளியான சேதி நிறைவேற்றப்படாது” என அமைச்சர் சொல்வதெல்லாம் பச்சை பொய். அப்படி நிறைவேற்றப்படாமல் இருக்க வேண்டுமெனின் அந்த சேதி காவிரி பகிர்வு சேதியாக இருந்தால் மட்டும்தான் சாத்தியம். மற்றவை எல்லாமே அமலுக்கு வரும். அதிலும் தமிழக அரசு கேரள அரசோ, கர்நாடக அரசோ கூட இல்லை.

உலக வர்த்தக நிறுவனத்தில் இந்தியா வாங்கி இருக்கும் கடனும், வாங்கிக் கொண்டிருக்கும் கடனும் இந்தியாவின் இப்போதைய பொருளாதார லட்சணத்தில், பூமி அழியும் வரை தீராது. இன்னும் கடன் வாங்க வாங்க, கடன் கொடுப்பவன் வீட்டு நடுவில் வந்தமர்ந்த கதையாக, உலக வங்கி போடும் விதிகளை அரசு கேட்க வேண்டிய கட்டாயத்தில்தான் இருக்கிறது. அதனாலேயே ரேஷன், கேஸ் மானியம் என எல்லாம் நிறுத்தப்படுகிறது. பணமதிப்பிழப்பு, GST, நெடுவாசல், நீட், கதிராமங்கலம் என மேலும் பிரச்சினைகள் கிளை பரப்புகிறது. இன்னும் அதிகமாக பன்னாட்டு மூலதனத்தின் கொடுக்குகள் நீளும். மக்களை பற்றி அரசுக்கு மயிரளவுக்கு கூட பொருட்டு கிடையாது.

ரேஷன் எவரும் வாங்குவதில்லை என்பதெல்லாம் கதைக்கு உதவாத கதை. ஒரு பேச்சுக்கே, ரேஷன் பொருட்களை எவரும் வாங்காமல், அவை கள்ள சந்தைக்கே பயன்படுகிறதென வைத்து கொள்வோம். அதை சரிசெய்ய மட்டுமே அரசு ரேஷனை நிறுத்துகிறது என மொண்ணையாகத்தான் நாம் நம்புகிறோமா? அந்த அளவுக்கு மக்கள் நலன் பேணும் அரசுதான் பீடத்தில் உள்ளதா? ஆம் எனில் எனக்கு சிரிப்பதை தவிர வேறு வழி தெரியவில்லை.

“உலகமயமாக்கல் என்ற பெயரில் உங்களின் நாட்டினை நாங்கள் கொள்ளையிட்டுக் கொண்டு இருக்கின்றோம். உங்கள் நாட்டின் இயற்கை வளங்கள், நீர் ஆதாரங்கள், மனித வளங்கள் ஆகியவற்றை உலகில் உள்ள பெருநிறுவனங்கள் அவற்றினுள் பங்கிட்டுக் கொண்டு கொள்ளை அடிக்கும் நிலையே இன்று உலகமயமாக்கல் என்ற ஒரு கோட்பாட்டுப்படி நிகழ்ந்து கொண்டிருக்கிறது. நம்புவதற்கு கடினமாக இருக்கிறது அல்லவா? ஆயிரம் பேருக்கு மேல் வேலைவாய்ப்பையும், கட்டுமான வசதிகளையும் தந்திருக்கும் நிறுவனங்களா எங்களை கொள்ளை அடித்துக் கொண்டிருக்கின்றன என்ற எண்ணம் எழுகின்றது அல்லவா? அங்கே தான் அந்த நிறுவனங்களின் உலகமயமாக்கல் என்ற கோட்பாட்டின் வெற்றி அடங்கி இருக்கிறது. முன்னேற்றம், வளர்ச்சி என்ற முகமூடிகளை அணிந்து கொண்டு உலாவும் அவற்றின் உண்மையான முகங்களைக் காண்பது என்பது சாதாரண மக்களுக்கு எளிதான விடயம் அல்ல தான். ஆனால் உலகம் இன்று மிக வேகமாக அழிவுப் பாதையை நோக்கி சென்றுக் கொண்டிருக்கும்போது அதற்கு காரணியாக இருக்கும் ‘உலகமயமாக்கல்’ என்னும் கோட்பாட்டின் முகமூடியை கிழித்து அதன் உண்மையான முகத்தினை உலகிற்கு காட்ட வேண்டிய சூழலும் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு இப்பொழுது அதிகமாக இருக்கின்றது.”

இப்படி சொல்வது நான் அல்ல. ஏதோ ஒரு கம்யூனிஸ்ட்டும் அல்ல. ஜான் பெர்கின்ஸ் என்ற அமெரிக்கர். உலக வங்கியின் பிரதிநிதியாக மூன்றாம் உலக நாடுகளில் அந்நாட்டு அரசுகள் மற்றும் முதலாளிகளின் துணையுடன் சுரண்டும் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கும் வேலை பார்த்தவர். பின்னாளில் ‘ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்’ புத்தகத்தில் தன் அனுபவத்தை அவர் எழுதி, அதில் இடம்பெற்ற ஒரு பத்திதான் மேலே கூறப்பட்டிருப்பது.

இப்போது இந்தியாவில் நடப்பவற்றை யோசித்து பாருங்கள். இங்கு அறிமுகப்படுத்தும் மக்கள் விரோத திட்டங்கள் எல்லாமே வளர்ச்சி என்ற பெயரிலேயே அறிமுகப்படுத்தப்படுகிறது. அதை எதிர்ப்பவர்கள் தேசதுரோகிகள். போராடுகிறவர்களுக்கு சிறை. லாபம் பன்னாட்டு முதலாளிகளுக்கு. எல்லாவற்றையும் மோடிக்கு கட்டளையிடுபவர்கள் ஜான் பெர்கின்ஸ் போன்றவர்களே.

பாஜகவுக்கு லாபம் என்ன?

பணம் முக்கிய லாபம் என்பது அமித்ஷாவின் சொத்து 300% அதிகரித்ததிலேயே தெரியும். அதைவிட மிக முக்கியமான லாபம், இந்தியாவை ஆர்எஸ்எஸ் நினைத்தபடி மாற்றிவிடலாம் என்பதுதான். இஸ்லாமியர்களை கொல்லலாம். தலித்துகளை கொல்லலாம். பகுத்தறிவாளர்களை கொல்லலாம். மதவாதத்தை திணிக்கலாம். வரலாற்றை மாற்றலாம். அரசியல் அமைப்பை திருத்தலாம். அதற்கு பன்னாடுகள், அதிகபட்சம் போனால் சின்னதாக கண்டனம் கொடுக்கும். அதற்கு மேல் ஒன்றும் செய்யாது.

இதையே கடாபியும் சதாமும் செய்தால் சர்வாதிகாரம் என்றோ, மனித உரிமை மீறல் என்றோ சொல்லி நாட்டில் கலகத்தை ஏற்படுத்தி, ஆட்சியில் பொம்மை அரசை அமர்த்தி, அதன் வழி அந்த நாட்டின் எண்ணெயை, வளத்தை பன்னாடுகள் அபகரிக்கும். அவற்றையே சதாமும் கடாபியும் நேரடியாக கொடுத்திருந்தால், அவர் வளர்ச்சியின் நாயகனாகத்தானே சித்தரிக்கப்பட்டிருப்பார்? அதைத்தான் இங்கே மோடி செய்கிறார். ‘வளத்தை நீ சுரண்டிக்கோ, நான் எதுவும் சொல்ல மாட்டேன். அதே போல், நான் மக்களை கொல்வேன், நீ எதும் சொல்ல கூடாது’ என்ற பேக்கரி டீலிங்தான்.

மிஞ்சி இருப்பதெல்லாம் இவைதான். உள்நாட்டு கலவரங்கள், அவற்றை ஒடுக்க பன்னாடுகளின் உதவி, சர்வாதிகார ஆட்சி, ஆரியமய இந்தியா, பெருமளவு மக்களின் அழிவு, கடைசியில் ஒரு போர். அந்த போர், மக்களுக்கும் இந்திய அரசுக்கும் இடையிலானதாக இருக்கும். போருக்கு காரணங்களாக சுரண்டலும் அரச பயங்கரவாதமும் இருக்கும். அந்த போருக்கு பிறகு இந்தியா இருக்காது. நாம் சுதந்திரம் கொண்டாடிக் கொண்டிருப்போம்.
Rajasangeethan John