பாஜக.வின் ‘தாதா’ அரசியலும், ‘காட்ஃபாதர்’ திரைப்படமும்!

இந்த நாடு இன்னும் எத்தனை முறைதான் Godfather படத்தை பற்றி என்னை எழுத வைக்கப் போகிறது என தெரியவில்லை. படத்தின் முதல் பாகத்தின் இறுதியில் நிழலுலக டான் மைக்கேல் கார்லியோன் தன் பிரச்சனைகளை எல்லாம் முடிப்பார். தங்கையின் குழந்தைக்கு ஞானஸ்நானம் கொடுக்கும் Godfather ஆக சர்ச்சில் அவர் நின்றுகொண்டிருக்கையில், அழித்தல் வேலைக்கு அவர் இட்டிருந்த கட்டளைகள் நிறைவேற்றப்பட்டுக் கொண்டிருக்கும்.

மைக்கேல் குடும்ப வணிகத்துக்கு தடையாக நிற்பவன் சலூனில் சிரைக்க அமர்ந்திருக்கும்போது சுட்டுக் கொல்லப்படுவான். மைக்கேலின் அப்பாவை கொல்ல முயன்றவன் கோர்ட்டில் இருந்து வெளியில் வரும்போது சுட்டு கொல்லப்படுவான். இன்னும் பலர் கொல்லப்படுவார்கள். அப்பாவை கொல்ல முயன்ற முயற்சிக்கு மைக்கேலின் தங்கை கணவன் காரணம் என தெரிய வரும்.

தங்கை கணவனிடம் சென்று மைக்கேல் பேசுவான். முதலில் ஒப்புக்கொள்ளத் தயங்குபவனிடம், உயிருக்கு ஒன்றும் ஆபத்து ஏற்படாது எனச் சொல்லி, உண்மையை ஒப்புக்கொண்டால் வெளியூருக்கு அனுப்பி வைக்கப்படுவான் எனவும், அதுதான் அவனுக்கான தண்டனை எனவும் மைக்கேல் சொல்லுவான். அப்பாவை கொல்ல எதிரி தன்னைத்தான் தொடர்பு கொண்டான் என ஒப்புக்கொள்வான் தங்கை கணவன்.

‍‍‍‍‍‍ ‍‍வெளியூருக்கான டிக்கெட் வழங்கப்படும். தங்கை கணவன் காரில் அமர்வான். அவனை வழியனுப்ப வேலையாள் இருவர் உடன் செல்வார்கள். காரை கிளப்பி ஓட்டத் தொடங்கியதும் பின்னால் அமர்ந்திருப்பவன், தங்கை கணவனின் கழுத்தில் கயிறைப் போட்டு இறுக்கிக் கொல்வான். மைக்கேலுக்கு தகவல் தெரிவிக்கப்படும்.

அடுத்தநாள் மைக்கேலை தேடி அழுதபடி ஓடி வருவாள் தங்கை. தன் கணவனை அவன் தான் கொன்றான் என கத்துவாள். மைக்கேல் அவளை கட்டி அணைத்து ஆறுதல்படுத்தி அனுப்புவான். அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்த மைக்கேல் மனைவி, மைக்கேலிடம் சென்று நிற்பாள். ‘தங்கை சொல்வது உண்மைதானா?’ என கேட்பாள். மைக்கேல் கத்துவான். தன் தொழிலுக்குள் தலையிடக் கூடாது என திட்டுவான். அவள் அழுவாள். சற்று நேரம் அவளைப் பார்த்துவிட்டு, ‘சரி.. உன் கேள்வியை கேள்’ என்பான் நிதானமாக. ‘தங்கை சொல்வது உண்மைதானா?’ என கேட்பாள் மனைவி. அவளை ஆழமாகப் பார்த்துவிட்டு, ‘இல்லை’ என்பான் மைக்கேல். அவள் நிம்மதி பெருமூச்சுவிட்டு மைக்கேல் அறையிலிருந்து வெளியேறுவாள்.

மைக்கேல் அறைக்கு சிலர் வருவார்கள். அவர்களில் ஒவ்வொருவனாக மைக்கேலின் கைக்கு முத்தம் கொடுப்பார்கள். மனைவி புரியாமல் பார்த்துக் கொண்டிருப்பாள். இன்னொருவன் அவள் பார்ப்பதை தவிர்க்கும் வகையில் வந்து மைக்கேல் அறையின் கதவை அடைப்பான்.

சில நாட்களுக்கு முன்னால் பாஜகவால், பிகார் சுருட்டப்பட்டது. தமிழ்நாடு அநேகமாக இன்றோ நாளையோ. கேரளாவில், தங்கள் ஆளையே கொன்று கலவரம் செய்து கொண்டிருக்கிறார்கள் ஆட்சியை கலைக்க. மேற்கு வங்கம் மற்ற சிலவை என ஒன்றிரண்டு இடங்கள்தான் மிஞ்சி இருக்கின்றன. அவையும் விரைவில் சுருட்டப்படும்.

எல்லா எதிர்கட்சிகளுக்குமான மாபெரும் தோல்வி இது. எல்லா இந்திய கட்சிகளின் சுரணையற்ற தடித்தோலுக்கும் விழுந்த சம்மட்டி அடி. இந்திய அரசமைப்பு, நாடு, ஜனநாயகம், தேர்தல், மக்கள் என கொண்டாடப்பட்ட எல்லாமும் எத்தனை கேலிக்குரியவை, எத்தனை போலியானவை என்பதை பாஜக காட்டிக் கொண்டிருக்கிறது.

BJP is settling down its enemies like a don.

RAJASANGEETHAN JOHN

Read previous post:
0a1f
பன்னாட்டு முதலாளிகளுடன் மோடி போட்டிருப்பது “பேக்கரி டீலிங்” தான்!

"அரசிதழில் வெளியான சேதி நிறைவேற்றப்படாது" என அமைச்சர் சொல்வதெல்லாம் பச்சை பொய். அப்படி நிறைவேற்றப்படாமல் இருக்க வேண்டுமெனின் அந்த சேதி காவிரி பகிர்வு சேதியாக இருந்தால் மட்டும்தான்

Close