யாருக்கு ஓட்டு போட வேண்டும்? – ஞாநி சங்கரன்

ஒவ்வொரு கட்சியாக நாம் ஏன் அதற்கு ஓட்டு போடக் கூடாது என்று பார்ப்போமா?

தி.மு.க:

1.எவ்வளவு பூசி மெழுகினாலும், கருணாநிதி – மாறன் குடும்பத்தின் நலன்களுக்கு முக்கியத்துவம் தந்து இயக்கப்படும் கட்சி.

2.பதவி பேரங்களுக்காக மட்டுமே டெல்லி அரசியலைப் பயன்படுத்தும் கட்சி. அங்கே இங்கே என இரண்டு இடங்களிலும் இதே கட்சி அதிகாரத்தில் இருந்தால், கட்சித்தலைவர் குடும்பத்தின் வியாபாரத்தொழில் துறை ஏகாதிபத்தியத்தின் விஸ்தரிப்பு கட்டுக்கடங்காமல் போய்விடும்.

3.பகுத்தறிவு, தமிழ்ப்பற்று போன்றவற்றையெல்லாம் வெற்று கோஷங்களாக மட்டுமே பயன்படுத்திக்கொண்டு நடைமுறையில் அவற்றுக்கு எதிராக எல்லாவற்றையும் செய்யக் கூடிய கட்சி.

4.தமிழ்நாட்டில் ஊழல், போலீஸ் அராஜகம், தொழிலாளர் மீதான ஒடுக்குமுறை என்று எந்த சீர்கேட்டை எடுத்துக்கொண்டாலும், அதைத் திட்டமிட்டு கச்சிதமாகவும் அறிவியல்பூர்வமாகவும் செய்வதை ஆரம்பித்து விரிவுபடுத்தியது கருணாநிதியின் முதல் ஆட்சிக்காலம்தான் !

அ.இ.அ.தி.மு.க

1.ஜனநாயக அணுகுமுறையே இல்லாமல் செயல்படும் தன் பிடிவாத குணத்தை தன் சாதனையாகக் கருதும் ஜெயலலிதாவின் தலைமை.

2.உட்கட்சி ஜனநாயகம், அடுத்த வரிசைத் தலைவர்கள் என எந்த ஜனநாயக அமைப்பிலும் நம்பிக்கை இல்லாத கட்சியாக எம்.ஜி.ஆர். காலத்திலிருந்து இன்று வரை இருந்து வருவதால்.

3.சட்டமன்றத்தில் தனி நபர் துதி பாடுவதற்கு மட்டுமே அனுமதித்து மாற்றுக் கருத்துகளுக்கு இடம் இல்லாமல் செய்து வருவதால்.

4.எல்லா பிரிவு மக்களுக்கு எதிராகவும் எடுத்த கொடூர நடவடிக்கைகளை திரும்பப் பெற்றாலும் மறுபடியும் அதேபோல நடக்காது என்ற எந்த உத்தரவாதமும் இல்லாத ஆட்சி என்பதால்.

மேலே இருக்கும் வரிகள் அனைத்தும் நான் பத்தாண்டுகள் முன்னால் (14.3.2006) ஒரு கட்டுரையில் எழுதியவை. இன்றும் அவற்றுக்கான நியாயங்கள் அப்படியேதான் இருக்கின்றன. பத்தாண்டுகளில் இரு கட்சிகளின் மக்கள் விரோதப் போக்கு இன்னும் பல மடங்கு அதிகரித்திருப்பதைப் பற்றி வேண்டுமானால் இன்னும் பத்து வரிகள் எழுதலாம். இருவருக்குள்ளும் பெரிய வேறுபாடுகள் கிடையாது. கழுத்தை அறுத்து கொலை செய்வதற்கும், பாலில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்து கொலை செய்வதற்கும் உள்ள வித்யாசம்தான் அ.தி.மு.கவுக்கும் திமு.கவுக்கும் இடையே உள்ள வித்யாசம். பின்னதில் வலி தெரியாது. மயக்கத்திலேயே செத்துப் போவோம். முன்னதில் துடிதுடித்து சாவோம்.

இந்த இரு கட்சிகளில் யாருக்கு ஓட்டு போடுவதும் தமிழ்ச் சமூகம் தற்கொலை செய்துகொள்வது போன்றதுதான். ஆனால் இது தெரிந்தேதான் கடந்த பல பத்தாண்டுகளாகத் திரும்பத் திரும்ப நமக்கு நாமே தண்டனை விதித்துவந்து கொண்டிருக்கிறோம்.

இதிலிருந்து நம்மை மீட்கும் சக்திகள் என்று இதுவரை யாரும் வரவில்லையா? அப்படி சொல்லிக்கொண்டு வந்த பா.ம.க போன்றவை பெரும்பாலும் அவர்களின் க்ளோன்களாகவே இருந்தன. அல்லது அவற்றை தம்முடன் கூட்டு சேர்த்துக்கொண்டு அவற்றின் நம்பகத் தன்மையை காலி செய்யும் வேலையை தி.மு.கவும் அ.தி.மு.கவும் சாமர்த்தியமாக செய்து வந்தன.

எண்பதுகளிலேயே குமரி அனந்தனாலும் நெடுமாறனாலும் தொடங்கப்பட்ட மூன்றாவது அணி அல்லது திமுக-அதிமுகவுக்கான மாற்று அணி என்ற முயற்சி, முப்பதாண்டுகளுக்குப் பின்னர் இப்போதுதான் ஓரளவேனும் உறுதியான வடிவம் பெற்றிருக்கிறது.

ம.தி.மு.க, மார்க்சிஸ்ட் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் அடங்கிய மக்கள்நலக் கூட்டணியும் சரி, அத்துடன் கை கோர்த்திருக்கும் தே.மு.தி.க, த.மா.க ஆகிய கட்சிகளும் சரி, இதுவரை தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்திராதவை. அவற்றின் தலைவர்கள் எவர் மீதும் சொத்துக் குவிப்பு வழக்கோ, ஊழல் வழக்கோ எங்கேயும் நிலுவையில் இல்லை.

இந்தக் கூட்டணியை தி.மு.கவின் ஆதரவாளர்கள் கடுமையாக தாக்கி வருவதில் வியப்பேதுமில்லை. அதி.மு.கவுக்கு தானே மாற்று, தனக்கு அ.தி.மு.கவே மாற்று என்று தங்கள் இருவரைத் தாண்டி தமிழக அரசியலும் அதிகாரமும் கைமீறிப் போய்விடக் கூடாது என்ற பதற்றத்தில் தி.மு.கவினர் இருக்கிறார்கள். ஆனால் முதல்முறையாக அப்படிப்பட்ட ஒரு வாய்ப்பை தமிழக மக்களுக்கு மக்கள் நலக் கூட்டணி ஏற்படுத்தியிருக்கிறது.

அதை உடைக்க அ.தி.மு.க, தி.மு.க இரண்டும் வெவ்வேறு தந்திரங்களைக் கையாள்கின்றன. அப்படி ஒரு கூட்டணி இருப்பதையே தான் பொருட்படுத்தாமல் அலட்சியப்படுத்துவது போல அ.தி.மு.க நடிக்கிறது. ஆனால் மக்கள் நலக் கூட்டணி களத்தில் இருப்பதால், தன் வாய்ப்புகள் பாதிக்கப்பட்டு எங்கேயாவது தொங்கு சட்டப்பேரவை அமைந்துவிடப் போகிறதே என்ற பயம் அதிமுகவுக்கு வந்துவிட்டதன் அடையாளம் அது தன் தோழமை சின்னக் கட்சிகளைக்கூட தன் சின்னத்தில் போட்டியிட நிர்ப்பந்திப்பதில் தெரிகிறது.

தி.மு.க பகிரங்கமாகத் தாக்குகிறது. குறிப்பாக திடீரென்று அதற்கு தலித் இயக்கத்தின் மீது பாசம் ஏற்பட்டு மக்கள் நலக் கூட்டணியில் இருக்கும் திருமாவளவனுக்காக உருகுகிறது. ஆனால் உண்மை என்னவென்றால், தன்னுடன் கடந்த காலத்தில் தோழமையாக இருந்த விடுதலை சிறுத்தைகள், இனி கூட்டணி அமைத்தால், ஆட்சியிலும் பங்கு வேண்டும் என்று பகிரங்கமாக வைத்த கோரிக்கையை அது நிராகரித்துவிட்டது. தலித்துகள் மீது மெய்யான அக்கறை இருந்தால், கூட்டணி ஆட்சியில் துணை முதலமைச்சராகவேனும் திருமாவை ஏற்போம் என்று திமுக அறிவித்திருக்க வேண்டும். (முதல் பதவிக்கு குடும்பத்திலேயே குழப்பம் !)

இந்தத் தேர்தலில் முக்கியமான அம்சம் திமுக, அதி.மு.க முதலிய கட்சிகளின் ஊழல் அராஜக ஆட்சிப் போக்குக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டிய தேவை மட்டுமல்ல. இன்னொரு பக்கம், தமக்கான பங்குக்காக திரண்டு போராடி வரும் தலித்துகளை புறக்கணிக்கும் அரசியலுக்கும் முற்றுப்புள்ளி வைக்கவேண்டியிருக்கிறது. சமூகத்தின் பல்வேறு பிரிவினருக்கும் ஆட்சியில் பங்கு என்ற நிலையை நோக்கி அரசியல் நகர்ந்தாகவேண்டிய கால விளிம்பில் நாம் நிற்கிறோம்.

தி.மு.க, அதி.மு.க இரண்டுக்கும் மாற்றாக மக்கள் நலக் கூட்டணியைப் பரிவுடன் பரிசீலிக்கும் எவரும் அதில் இருக்கும் வைகோவும் திருமாவளவனும் இடதுசாரிகளும் எப்போதும் மக்கள் பிரச்சினைகளில் களம் இறங்கி நேர்மையாக போராடிவந்ததை ஒப்புக் கொள்கிறார்கள். ஆனால் அப்படி ஆதரிக்க விரும்பும் பலருக்கும் இன்னமும் இருக்கும் தயக்கம் விஜய்காந்த்தின் தே.மு.தி.க பற்றியதுதான்.

விஜய்காந்த்தின் பலவீனம் அவர் இதுவரை தன் கட்சியை சரியான அரசியல் கட்சியாக வடிவமைத்து நடத்த தவறியதுதான். வேறு கழகங்களில் வாய்ப்பில்லாதவர்கள் எல்லாம் இங்கே புகுந்து வாய்ப்பு பெற்று பின் தத்தம் தேவைக்கேற்ப கட்சியை விட்டு வேறு இடம் தேடி ஓடுவதற்கான களமாக விஜய்காந்த்தின் கட்சி இதுவரை இருந்துவந்திருக்கிறது. பிரேமலதாதான் ஓரளவேனும் கட்சியின் பலமான பேச்சாளராக உருவாகி, கட்சியின் திமுக அதிமுக எதிர்ப்பு நிலையை அரசியல் தர்க்கமாக கொஞ்சம் வடிவமைத்து வந்திருக்கிறார்.

விஜய்காந்த்தை நம்பி மக்கள் நலக் கூட்டணியை ஆதரிக்க முடியுமா என்பதே பலரது சந்தேகம். விஜய்காந்த் கருணாநிதியை விட ஜெயலலிதாவி விட சிறந்த முதலமைச்சராக இருப்பாரா என்று யோசிப்பதை விட, அவர்களை விட மோசமான முதல்வராக இருப்பாரா என்று யோசிப்பதே சரியாக இருக்கும்.

அப்படி இருக்க வாய்ப்பில்லை என்றே நான் நம்புகிறேன். எல்லா ஊழல் அராஜகங்களையும் செய்துவிட்டு அவற்றை நியாயப்படுத்தும் சாமர்த்தியமான கருணாநிதியின் திறமையும் , அவற்றை பற்றி பதிலே சொல்லத் தேவையில்லை என்ற ஜெயலலிதாவின் ஆணவமும் விஜய்காந்த்திடம் நிச்சயம் இல்லை. அவர் முதல்வரானாலும் கூட, ஒரு பக்கம் வைகோ, மறுபக்கம் இடதுசாரிகள், திருமா என்று அவரை நெறிப்படுத்தக் கூடிய பலமான சக்திகள் உடன் இருப்பதுதான் உண்மையில் விஜய்காந்த்தின் பலம். மன்மோகன் சிங்கின் முதல் ஆட்சிக்காலத்தில் அமெரிக்காவே பொருளாதார நெருக்கடியில் சரிந்தபோதும் அதில் இந்தியா பாதிக்கப்படாமல் இருக்க முக்கிய காரணம், அன்றைய மன்மோகன் ஆட்சியைக் கட்டுப்படுத்திய இடதுசாரிகள்தான் என்று பொருளாதார அறிஞர்களே சுட்டிக் காட்டியுள்ளனர். அதே மன்மோகனின் இரண்டாவது ஆட்சியில் இடதுசாரிகளின் கடிவாளம் இல்லாமல் கட்டுத்தெறித்தபோதுதான் 2ஜி உள்ளிட்ட பல ஊழல்கள் நடந்தன.

தவறு செய்தால், கருணாநிதி குடும்பத்தை தூக்கி எறியும் சக்தி தி.மு.கவில் இல்லை. ஜெயலலிதா-சசிகலா குடும்பத்தை தூக்கி எறியும் சக்தி அ.தி.மு,கவிலும் இல்லை. ஆனால் விஜய்காந்த்தோ தே.மு.தி.கவோ ஆட்சியில் தவறு செய்தால் அதை சரி செய்யவோ, சரி செய்யவே முடியாதென்றால் தூக்கி எறியவோ இடதுசாரிகளும் வைகோவும் திருமாவும் தயங்கமாட்டார்கள் என்பதில் எனக்கு சந்தேகமில்லை.

மக்கள் நலக் கூட்டணி நல்ல முயற்சிதான். ஆனால் ஜெயிக்குமா என்று தெரியவில்லை. போட்டு என்ன பயன் என்று சிலர் யோசிப்பார்கள். இந்த மனநிலை திமு.க, அதிமுகவுக்கே சாதகமானது. எப்போதும் ஜெயிக்கிற வாய்ப்புள்ள அணிக்கு ஓட்டு போடவேண்டும் என்ற மனநிலையை அதிமுகவும் திமுகவும் ஊக்குவித்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ள முயற்சிக்கின்றன. யார் ஜெயிப்பார்கள் என்று யோசிப்பதை விட அறிவார்ந்த வாக்காளர், யார் ஜெயிக்கவேண்டும் என்பதையே யோசிப்பார்; யோசிக்கவேண்டும்.

எனவே ஒரு வாக்காளராக நான் என்ன செய்யப் போகிறேன்?

என் தொகுதியில் மதி.மு.க மார்க்சிஸ்ட், கம்யூனிஸ்ட் , விடுதலை சிறுத்தைகள் கட்சி எதிலிருந்தேனும் வேட்பாளர் நிறுத்தப்பட்டால் அவருக்கே வாக்களிப்பேன்.

தொகுதி பங்கீட்டில் தே.மு.தி.க வேட்பாளர் நிறுத்தப்பட்டால், அவர் முன்னர் விஜய்காந்த்தை ஏமாற்றிவிட்டு ஓடிய எம்.எல்.ஏ வகையறா மாதிரி ஆசாமியா என்று ஆராய்வேன். அப்படி சந்தேகம் இருந்தால் நோட்டா போட்டுவிடுவேன்.

இல்லையேல் மக்கள் நலக் கூட்டணிக்கே என் வாக்கு.

காரணம், அது கடந்த ஐம்பதாண்டுகளின் தவறுகளைக் களைந்து அடுத்த ஐமபதாண்டுகளில் வளரவேண்டிய அரசியல் போக்குகளுக்கான விதை.

– ஞாநி சங்கரன்

நன்றி: கல்கி

Read previous post:
0a2g
கோவில்பட்டியில் வைகோ போட்டி: மதிமுக வேட்பாளர்கள் பட்டியல்!

மதிமுக போட்டியிடும் 29 தொகுதிகளின் வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சியின் பொதுச் செயலாளரும், மக்கள் நலக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளருமான வைகோ இன்று சென்னை அண்ணாநகரில் வெளியிட்டார். மதிமுகவின் 29

Close