“பெரியவர்கள் ஏற்படுத்தி கொடுத்த கலாச்சாரத்தில் கை வைக்க கூடாது”: ரஜினி அறிவுரை!

“பெரியவர்கள் ஏற்படுத்திக் கொடுத்த கலாச்சாரத்தில் மட்டும் எப்பொழுதுமே கை வைக்கக் கூடாது. அதை காப்பாற்ற வேண்டும். ஜல்லிக்கட்டு நடத்தப்பட வேண்டும்” என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

சில சூதுமதியாளர்களின் தந்திரம் காரணமாக தடை செய்யப்பட்டுள்ள ஜல்லிக்கட்டு என்னும் ஏறு தழுவுதலை நடத்த அனுமதி அளிக்கக் கோரி தமிழகம் முழுவதும் தீவிர போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், ஆனந்த விகடன் பத்திரிகை சார்பில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட நடிகர் ரஜினிகாந்த், ஜல்லிக்கட்டு தடையை எதிர்த்து முதல் முறையாக கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

”விகடன் போன்ற ஒரு விழாவில் தான் பாரம்பரியம், கலாச்சாரம் பற்றி பேச முடியும். கலாச்சாரம் என்பது மிகவும் முக்கியம். அதிலும், ஜல்லிக்கட்டு என்பது தமிழர்களின் கலாச்சாரம். அதை நாம் காப்பாற்ற வேண்டும். அதை நாம் விட்டுக் கொடுக்கக் கூடாது.

ஜல்லிக்கட்டுக்கு என ஸ்டிரிக்ட் ரூல்ஸ் கொண்டு வாங்க. யாருக்கும் ரொம்ப காயம் ஏற்படாத மாதிரி ரூல்ஸ் கொண்டு வாங்க. அதுக்கு பதிலா ஒரு கலாச்சாரத்தை வேண்டாம் என சொல்வது சரியா?

பெரியவர்கள் ஏற்படுத்திக் கொடுத்த கலாச்சாரத்தில் மட்டும் எப்பொழுதுமே கை வைக்கக் கூடாது. அதை காப்பாற்ற வேண்டும். ஜல்லிக்கட்டு நடத்தப்பட வேண்டும்.

இவ்வாறு ரஜினி பேசினார்.

அவர் பேசப் பேச, அதை ஆமோதிக்கிற விதமாக கூட்டத்தினர் கைதட்டி, அரங்கம் அதிரச் செய்தனர்..

அப்போது அதே மேடையில் இருந்த கவிஞர் வைரமுத்து, ”ஜல்லிக்கட்டு பற்றி முரட்டுக்காளை பேசுவது தான் பொருத்தமானது” என்றதும், கூட்டத்தினர் பலத்த ஆரவாரம் செய்தனர்.