போலீஸ் அராஜகம்: போராட்டக்காரர்கள் மீது தடியடி; இயக்குனர் கௌதமன் தாக்கப்பட்டார்!

மதுரை அவனியாபுரத்தில் ஏறு தழுவுதல் நடத்த அனுமதி கோரி போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினார்கள். திரைப்பட இயக்குனர் வ.கௌதமனும் தாக்கப்பட்டார்.

பொங்கல் திருநாளை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் தை 1ஆம் தேதி மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு எனப்படும் ஏறு தழுவுதல் நடைபெறுவது வழக்கம். ஆனால், சில சூதுமதியாளர்களின் தந்திரம் காரணமாக ஏறு தழுவுதல் தடை செய்யப்பட்டிருப்பதால், கடந்த 2 ஆண்டுகளாக இதை நடத்த இயலவில்லை.

தமிழர்களின் முக்கிய அடையாளங்களில் ஒன்றான இந்த ஏறு தழுவுதலை இந்த ஆண்டு நடத்த அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் தீவிரமாக போராட்டம் நடைபெற்று வருகிறது.

இதே கோரிக்கையை வலியுறுத்தி இன்று (தை 1ஆம் தேதி) மதுரை அவனியாபுரத்தில் போராட்டம் நடைபெற்றது. ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்ட இந்த போராட்டத்தில் இயக்குனர்கள் அமீர், வ.கௌதமன், நடிகர் ஆர்யா, இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா ஆகியோரும் பங்கேற்றனர்.

அமீர், ஆர்யா, யுவன் ஷங்கர் ராஜா ஆகியோர் சிறிது நேரம் இருந்துவிட்டு புறப்பட்டுச் சென்றவுடன், போராட்டக்காரர்கள் மீது போலீசார் திடீரென தடியடி நடத்தினார்கள். இயக்குனர் வ.கௌதமனும் தாக்கப்பட்டார். போலீசாரின் இந்த அராஜக வெறிச்செயல் காரணமாக போராட்டக்காரர்கள் பலர் காயம் அடைந்தனர்.

போராட்டக்காரர்களை போலீசார் கைது செய்து, 3 வாகனங்களில் ஏற்றிச் சென்றனர். இதனால் அவனியாபுரத்தில் பதட்டம் நிலவுகிறது.