சென்னையில் போராட்டம்: “எனது வானவில்லில் காவி நிறத்துக்கு இடம் இல்லை!”

பசு பாதுகாவலர்கள் என்ற பெயரில் நாடு முழுவதும் பல்வேறு இடங்களிலும் வன்முறைத் தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், பசு பாதுகாப்பு போர்வையில் நிகழ்த்தப்படும் வன்முறைகளைக் கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் சமூக ஆர்வலர்கள் இன்று (சனிக்கிழமை) திரண்டனர்.

#NotInMyName என்ற பெயரில் இந்த பிரச்சாரத்தை அவர்கள் முன்னெடுத்துள்ளனர். சமூக ஆர்வலர்கள் மட்டுமல்லாமல் பொதுமக்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் என பல்வேறு தரப்பினரும் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

இந்தப் போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக திருவண்ணாமலையில் இருந்து வந்திருந்த ஆசிரியர் ஒருவர் கூறும்போது, “நான் என்ன சாப்பிட வேண்டும், யாரை நேசிக்க வேண்டும், எத்தகைய ஆடையை உடுத்த வேண்டும் என்பதை எல்லாம் நீங்கள் (மத்திய அரசு) சொல்லத் தேவையில்லை” என்றார்.

அவர் கைகளில் ஏந்தியிருந்த பதாகையில் “எனது வானவில்லில் காவி நிறத்துக்கு இடமில்லை” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த நிகழ்ச்சியில் சென்னை லயோலா கல்லூரி மாணவர்கள் பறை இசை நிகழ்ச்சி நடத்தினர். “இது குஜராத்தோ, உ.பி.யோ இல்லை மோடி.. இது தமிழகம். உங்கள் வேலை இங்கே எடுபடாது” எனப் பாடினர்.

பசு பாதுகாப்பு என்ற பெயரில் நடைபெறும் வன்முறையைக் கண்டித்தே இப்போராட்டம் நடைபெற்றாலும் இந்தி திணிப்பு, தலித் விரோத போக்கு ஆகியனவற்றுக்கும் இக்கூட்டத்தில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் வசந்தி தேவி, கவிஞர் சல்மா, சமூக செயற்பாட்டாளர் நித்யானந்த் ஜெயராமன் உள்ளிட்ட பலரும் இதில் கலந்து கொண்டனர்.