எழுத்தாளர் எஸ்.ரா.வுக்கு சாகித்ய அகாடமி விருது!

தமிழ் இலக்கியத்துக்கான 2018ஆம் வருடத்திய சாகித்ய அகாடமி விருது எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு வழங்கப்படும் என இன்று (05-12-2018) அறிவிக்கப்பட்டுள்ளது. கரிசல் பூமியின் பின்னணியில் நாதஸ்வர கலைஞர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து அவர் எழுதிய ‘சஞ்சாரம்’ என்ற நாவலுக்காக அவருக்கு மத்திய அரசின் இந்த விருது வழங்கப்படுகிறது.

சாகித்ய அகாடமி விருதுக்கு தேர்வு செய்யப்பட்டிருக்கும் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளார்கள்.

எஸ்.ராமகிருஷ்ணன் விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணறு என்ற ஊரில் பிறந்தவர். இவரது அப்பா சண்முகம் கால்நடை மருத்துவர். அம்மா மங்கையர்க்கரசி. மனைவி சந்திர பிரபா. குழந்தைகள் ஹரி பிரசாத், ஆகாஷ்.

எஸ்.ராமகிருஷ்ணன் கடந்த 25 ஆண்டு காலமாக சிறுகதை, நாவல், கட்டுரை, நாடகம், குழந்தைகள் இலக்கியம், மொழிபெயர்ப்பு, சினிமா, ஊடகம், இணையம் என்று பல்வேறு தளங்களிலும் தீவிரமாக இயங்கி வருகிறார். நூற்றுக்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியிருக்கிறார்.

முழுநேர எழுத்தாளரான இவர் இந்தியா முழுவதும் சுற்றியலைந்து வாழ்வு அனுபவங்கள்க் கொண்ட தேசாந்திரி. உப பாண்டவம், நெடுங்குருதி, யாமம், உறுபசி, துயில், நிமித்தம், சஞ்சாரம், இடக்கை, பதின் ஆகியவை இவரது குறிப்பிடத்தக்க நாவல்கள். எனது இந்தியா, மறைக்கபட்ட இந்தியா போன்றவை இவரது முக்கிய வரலாற்று நூல்களாகும்.

சில திரைப்படங்களுக்கு வசனமும் எழுதியுள்ளார்.