செய்தியாளர் சந்திப்பில் விபரீதம்: பெண் நிருபரிடம் வரம்பு மீறி நடந்து கொண்ட தமிழக ஆளுநர்!

மேலிடங்களுக்கு சப்ளை செய்வதற்காக மாணவிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயன்ற அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக் கல்லூரி கணித பேராசிரியை நிர்மலா தேவி கைது செய்யப்பட்டுள்ளார். இந்த பாலியல் விவகாரத்தில் தமிழக ஆளுநர் மாளிகையை நிர்மலா தேவி தொடர்புபடுத்தியிருப்பதால், இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுவரை எந்த பிரச்சனைக்கும் செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தாத ஆளுநர் பன்வாரிலால் புரோகித், நிர்மலா தேவி விவகாரத்தை அடுத்து இன்று ஆளுநர் மாளிகையில் அவசர அவசரமாக செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தினார். அப்போது பெண் நிருபர் ஒருவரின் கன்னத்தை பன்வாரிலால் புரோகித் தட்டிய விபரீத செயல் கடும் கண்டனத்துக்கு உள்ளாகியுள்ளது.

இது குறித்து செய்தியாளர் முரளிதரன் எழுதியிருப்பது:-

ஆளுனரின் செய்தியாளர் சந்திப்பில் எனக்கு அடுத்ததாக நியூஸ் 7ன் லாவண்யாவும், அதற்கு அடுத்ததாக தி வீக் இதழின் லக்ஷ்மியும் அமர்ந்திருந்தார்கள்.

நிர்மலா தேவி விவகாரத்தையடுத்து கிட்டத்தட்ட ஒரு கட்டாயத்தின் பேரில் செய்தியாளர்களைச் சந்திக்கவந்த ஆளுனர், இந்த விவகாரத்தை எடுத்தபோதெல்லாம் கோபமடைந்தார். “நான் கொள்ளுப் பேரன் பேத்திகளையெல்லாம் எடுத்துவிட்டேன்” என்பதுதான் இந்தக் குற்றச்சாட்டுக்கு அவரது பதிலாக இருந்தது.

கிட்டத்தட்ட செய்தியாளர் சந்திப்பு முடிவுக்கு வந்துவிட்ட நிலையில், லக்ஷ்மி கேட்ட கேள்விக்கு எதையும் சொல்லாமல் போயிருக்கலாம். அல்லது பதில் சொல்லியிருக்கலாம். பதிலாக கன்னத்தைத் தட்டிவிட்டுச் சிரித்தார். அது மிக அருவெருப்பாக இருந்தது. லக்ஷ்மி நியாயமாகவே கோபமடைந்தார்.

இந்தச் செய்தியாளர் சந்திப்பு முழுக்கவே அவர் தன் பேரன் – பேத்திகளை டீல் செய்வதைப் போலவே செய்தியாளர்களை டீல் செய்ய விரும்பினார். ஆனால், தொடர்ந்து செய்தியாளர்கள் அதே விவகாரம் குறித்துக் கேட்டபோது கடுப்படைந்தார்.

ஒரு செய்தியாளர் சந்திப்பில், கேள்வி கேட்பவரும் பதில் சொல்பவரும் சமமான நிலையிலேயே இருக்கிறார்கள். புரோகித் எங்களை பேரன், பேத்திகளாக நினைத்திருக்கலாம். ஆனால், நாங்கள் பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான ஒரு ஆளுனரை கேள்வி கேட்கவே வந்திருந்தோம்.

இந்தப் பின்னணியில் லக்ஷ்மியிடம் ஆளுனர் நடந்து கொண்டவிதம் மிகமிக அருவெருப்பானது.

 MURALIDHARAN KASI VISWANATHAN

# # #

இச்சம்பவம் பற்றி தி வீக் இதழின் நிருபர் லட்சுமியின் ட்விட்டர் பதிவு:-

I asked TN Governor Banwarilal Purohit a question as his press conference was ending. He decided to patronisingly – and without consent – pat me on the cheek as a reply.

Washed my face several times. Still not able to get rid of it. So agitated and angered Mr Governor Banwarilal Purohit. It might be an act of appreciation by you and grandfatherly attitude. But to me you are wrong.