“நிர்மலா தேவி என்னை ‘தாத்தா’ என்று தான் குறிப்பிட்டுள்ளார்”: ஆளுநர் விளக்கம்!

மேலிடங்களுக்கு சப்ளை செய்வதற்காக மாணவிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயன்ற அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக் கல்லூரி கணித பேராசிரியை நிர்மலா தேவி கைது செய்யப்பட்டுள்ளார். இந்த பாலியல் விவகாரத்தில் தமிழக ஆளுநர் மாளிகையை நிர்மலா தேவி தொடர்புபடுத்தியிருப்பதால், இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுவரை எந்த பிரச்சனைக்கும் செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தாத ஆளுநர் பன்வாரிலால் புரோகித், நிர்மலா தேவி விவகாரத்தை அடுத்து இன்று ஆளுநர் மாளிகையில் அவசர அவசரமாக செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தினார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

பேராசிரியை நிர்மலா தேவி விவகாரம் பற்றி நேற்று பேப்பரில் பார்த்தேன். மாணவிகளை பேராசிரியை தவறாக வழிநடத்திய சம்பவம் கண்டனத்திற்குரியது. குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும். இதற்காக விசாரணை நடத்த ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சந்தானம் தலைமையில் ‘ஒரு நபர் விசாரணை கமிட்டி’ அமைக்கப்பட்டுள்ளது.

விசாரணை அதிகாரி சந்தானம் ஒரு வாரத்தில் அறிக்கை சமர்ப்பிப்பார். அவர் சமர்ப்பிக்கும் அறிக்கை அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும். சந்தானம் அனைத்தையும் விசாரிப்பார். அவரது அறிக்கை அடிப்படையில் வேந்தர் என்ற முறையில் நான் நடவடிக்கை எடுப்பேன்.

பேராசிரியை நிர்மலாதேவியை என் வாழ்நாளில் நான் சந்தித்ததே இல்லை. நான் நிர்மலா தேவி முகத்தைக் கூட இதுவரை பார்த்தது இல்லை. எனது பாதுகாவலர்களைத் தாண்டி ஒரு பறவை கூட என்னை அணுக முடியாது. எனக்கு பேரனுக்கு பேரன் இருக்கும்போது, என்னைப் பற்றி தவறான கருத்துகளைப் பேச வேண்டாம். ஆளுநர் என்று என்னைக் குறிப்பிடவில்லை, தாத்தா என்றுதான் என்னை அந்தப்பெண் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு பன்வாரிலால் புரோகித் கூறினார்.

இதன்பின் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளும், அதற்கு பன்வாரிலால் புரோகித் அளித்த பதில்களும் வருமாறு:

நிர்மலா தேவி ஆடியோ விவகாரத்தில் உங்கள் பெயர் இருக்கும்போது, நீங்களே ஒரு விசாரணையை அமைத்தால், அது எந்த அளவுக்கு வெளிப்படைத் தன்மையாக இருக்கும்?

இதை நான் மறுக்கிறேன். விசாரணை சரியாக இருக்கும்.

விசாரணை எந்த அடிப்படையில் நடக்கும்?

விசாரணை கமிட்டி அனைத்தையும் விசாரிக்கும். எந்தக் கட்டுப்பாடும் இல்லை. என்ன தேவையோ அதை விசாரிப்பார். அனைத்து அம்சங்களும் விசாரிக்கப்படும், யாரும் கவலைப்பட வேண்டாம்.

பெண் உறுப்பினர் ஒருவர் கமிட்டியில் நியமிக்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்ற வழிக்காட்டுதல் உள்ளதே?

தேவைப்பட்டால் சந்தானம் பார்த்துக்கொள்வார். அவர் மூத்த அதிகாரி. மிகுந்த அனுபவம் உள்ளவர்.

ஆளுநராக இருக்கும் நீங்கள், நிர்மலா தேவி பிரச்சினை வந்தவுடன் செய்தியாளர்களை சந்திக்கும் அவசியம் என்ன?

நான் அதற்காக கூட்டவில்லை. ஆளுநராக பதவி ஏற்ற பின்னர் ஆறு மாதம் கழிந்ததால் செய்தியாளர்களை சந்திக்கிறேன்.

சந்தானம் உங்களை விசாரிக்க முடிவெடுத்தால் என்ன செய்வீர்கள்?

இந்தக் கேள்வியே தேவையற்றது

இது அவசியமான கேள்விதான், சந்தானம் உங்களை விசாரிக்க விரும்பினால் என்ன செய்வீர்கள்?

நீங்கள் கூட விசாரிக்கலாம், என் வாழ்க்கை திறந்த புத்தகம். நான் உங்கள் பாட்டனார் வயது. நான் 80 வயதை நெருங்குகிறவன். நீங்கள் என்ன கேட்கிறீர்கள், நான் ஏற்கெனவே விளக்கமளித்து விட்டேன். திரும்பத் திரும்ப இதே உபயோகமற்ற கேள்விகளை எழுப்புகிறீர்கள். நான் கேட்கிறேன், நீங்கள் ஆளுநருக்கு உரிய மரியாதை அளிக்க மாட்டீர்களா?

இவ்வாறு ஆளுநர் பதிலளித்தார்.

 

Read previous post:
0a1c
ரஜினி மீது பாரதிராஜா தாக்கு: “நீங்கள் தமிழன் அல்லாத கர்நாடக காவியின் தூதுவன்!”

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், சென்னையில் ஐபிஎல் போட்டிகளை நடத்தக் கூடாது என கடந்த 10 ஆம்

Close