இனப்பகைவர்களுக்கும், இனத்துரோகிகளுக்கும் தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்!

வாக்குரிமை ஒன்றை தவிர, ஏனைய அனைத்து உரிமைகளும் பறிக்கப்பட்டு, அடிமைப்படுத்தப்பட்டு கிடக்கும் தமிழ் தேசிய இனமும், தமிழ் தேசமும், இன்றைக்கு “ஏறு தழுவுதல் விளையாட்டு வேண்டும்” என்ற ஒற்றை தமிழ் தேசிய கோரிக்கைக்காக பெருந்திரளாய் வெகுண்டெழுந்து, தடையை மீறி ஏறு தழுவி, வீரம் செறிந்த போராட்டம் நடத்திவருவதை பாராட்ட வார்த்தைகள் இல்லை.

பின்விளைவு தெரியாமல், ஏறு தழுவுதலை தடை செய்ததன் மூலம் தமிழ் தேசியம் மற்றும் தமிழ் தேசத்தின் ரணத்தை கிளறிவிட்டு, தமிழுணர்வு பீறிட்டுக் கிளம்ப காரணமாக இருக்கும் – ஆப்பசைத்த குரங்குகளான – தமிழினப் பகைவர்களுக்கும், தமிழின துரோகிகளுக்கும் இடதுசாரி தமிழ் தேசியர்கள் சார்பில் தமிழர் திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

“கெடல் எங்கே தமிழின் நலம்

அங்கெல்லாம் தலையிட்டுக்

கிளர்ச்சி செய்க”

என்ற பாரதிதாசனின் போர் முழக்கத்துக்கு உயிரூட்டி, களமிறங்கியிருக்கும் வீரத்தமிழர்களுக்கும், வீரத்தமிழச்சிகளுக்கும் நமது தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்களை உரித்தாக்குகிறோம்.

பகைவர்களும், துரோகிகளும்கூட உண்ண உணவு உற்பத்தி செய்யும் தமிழ் உழவர்கள், இன்று வறட்சி மற்றும் செல்லாத நோட்டு சதி காரணமாக மாரடைத்தும், தற்கொலை செய்தும் உயிரிழந்து வருவதை கண்ணீருடன் நினைவிலேந்தி, தமிழ் தேசிய விடுதலையை உள்ளடக்கிய தமிழ் தேச விடுதலைக்கான போர்ப்பயணம் இன்னும் வெகுதூரம் செல்ல வேண்டும் என்பதை நெஞ்சில் நிறுத்தி, பொங்கல் திருநாளை கொண்டாடுவோம்.

அனைவருக்கும் எமது நல்வாழ்த்துக்கள்!

பி.ஜே.ராஜய்யா

ஆசிரியர்

ஹீரோநியூஸ் ஆன்லைன்