ஜல்லிக்கட்டு விவகாரம்: மன்னிப்பு கேட்கும் பொன்.ராதா பாஜகவில் இருந்து விலகுவாரா?

தமிழ் தேசிய இனத்தின் பாரம்பரிய அடையாளங்களின் ஒன்றான ஏறு தழுவுதல் என்னும் ஜல்லிக்கட்டு, சில சூதுமதியாளர்களின் கேடுகெட்ட தந்திரம் காரணமாக தடை செய்யப்பட்டு, கடந்த 2 ஆண்டுகளாக நடத்தப்படாமல் முடக்கி வைக்கப்பட்டிருக்கிறது. இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடத்தியே ஆக வேண்டும் என்று முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு கடந்த சில தினங்களாக தமிழகம் முழுவதும் மாணவர்கள், இளைஞர்கள், தமிழ் உணர்வாளர்கள், சமூக ஆர்வலர்கள், அரசியல் கட்சிகள், பொதுமக்கள் என பல தரப்பட்டவர்களும் கொந்தளித்து தீவிரமாக போராடி வருகிறார்கள்.

இந்தாண்டு பொங்கல் பண்டிகையின்போது ஜல்லிக்கட்டு கண்டிப்பாக நடைபெறும் என அவ்வப்போது மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உறுதி அளித்து நம்பிக்கையூட்டி வந்தார்.

இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த பொன்.ராதாகிருஷ்ணன், வாக்கு கொடுத்தபடி ஜல்லிக்கட்டுக்கு அனுமதி பெற்று தர இயலாததற்கு பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக தெரிவித்துள்ளார்.

தமிழக மக்களுக்குத் தேவை ஜல்லிக்கட்டு தானே தவிர, பொன்.ராதாகிருஷ்ணனின் மன்னிப்பு அல்ல. மோடி அரசிடமிருந்து அதை பெற்றுத்தர இயலாது என்று தெரிந்துகொண்ட பொன்.ராதாகிருஷ்ணன், உடனே அமைச்சர் பதவியிலிருந்தும் பாரதிய ஜனதா கட்சியிலிருந்தும் ராஜினாமா செய்துவிட்டு, ஜல்லிக்கட்டுக்காக போராடுகிறவர்க்ளோடு இணைய வேண்டும். அப்படிச் செய்யாமல் வெறுமனே மன்னிப்பு கோருவது, வழக்கமான பசப்பல் நாடகமாகத் தான் இருக்குமேயொழிய மெய்யான தமிழ் உணர்வு ஆகாது.