நம்பியார் – விமர்சனம்

“ஒவ்வொரு மனிதருக்குள்ளும் ஒரு எம்.ஜி.ஆரும் இருக்கிறார். நம்பியாரும் இருக்கிறார். அதாவது, ஒவ்வொருவருக்குள்ளும் நல்ல குணமும் இருக்கிறது. கெட்ட குணமும் இருக்கிறது. சதவிகிதத்தில் தான் நபருக்கு நபர் வித்தியாசம்” என்று கான்செப்டை நடிகர் பார்த்திபனின் குரல் விவரிப்பதிலிருந்து படம் தொடங்குகிறது.

நாயகனாக வரும் ஸ்ரீகாந்துக்கு இப்படத்தில் பெயர் ராமச்சந்திரன். ஸ்ரீகாந்த் நல்லவர் தான். என்றாலும், அவருக்குள்ளும் ஒரு கெட்டவர் இருக்கிறார். அரூபமாய் அவருக்குள் இருக்கும் அந்த கெட்டவருக்கு ஒரு உருவம் கொடுத்தால்….? அவர்தான் சந்தானம். சந்தானத்துக்கு வைக்கப்படும் பெயர் தான் நம்பியார்.

ஒருநேரம் ராமச்சந்திரனாக நல்லவராக இருக்கும் ஸ்ரீகாந்த், அடுத்து நம்பியாரின் சொல் கேட்டு கெட்டவராக மாறிவிடுவார். இதனால் ஏற்படும் பிரச்சனைகளும், தீர்வும் தான் படம்.

ஸ்ரீகாந்தை கலெக்டராக்க வேண்டும் என்று அவரது அப்பா விருப்பப்படுகிறார். ஆனால், இதில் துளியும் விருப்பம் இல்லாத ஸ்ரீகாந்த், அப்பாவின் வற்புறுத்தலின் பேரில், ஐ.ஏ.எஸ். தேர்வு எழுதுவதும், பெயிலாவதுமாக இருக்கிறார்.

இந்நிலையில், ஒருநாள் தற்செயலாக நாயகி சுனைனாவை சந்திக்கிறார் ஸ்ரீகாந்த். முதலில் மோதல், பிறகு நட்பு, அதன்பிறகு காதல் என அது உருமாறுகிறது.

இப்படியாக ஸ்ரீகாந்த் வாழ்க்கையில் நல்ல விஷயங்கள் நடந்துகொண்டிருக்கும் நிலையில், அவருக்குள் இருக்கும் கெட்டவரான சந்தானம் வெளியே வருகிறார். குடிப்பழக்கமே இல்லாத ஸ்ரீகாந்தை அவர் குடிக்க வைக்கிறார். முதன்முதலாக குடிப்பதால், போதை தலைக்கேறிய ஸ்ரீகாந்த், தான் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் பல கெட்ட விஷயங்களை செய்கிறார். அதாவது, ஏரியா போலீசிடம் சண்டை போடுகிறார். கண்ணில் கண்டவர்களை எல்லாம் அடிக்கிறார். சுனைனாவிடம் தவறாக நடக்க முயற்சி செய்கிறார். இதனால் அவர் பல பிரச்சினைகளில் மாட்டிக்கொள்கிறார்.

இந்த பிரச்சினைகளில் இருந்து ஸ்ரீகாந்த் எப்படி மீண்டார்? தனது அப்பாவின் கனவை அவர் நிறைவேற்றினாரா? காதலியுடன் இணைந்தாரா? என்பது மீதிக்கதை.

நாயகன் ஸ்ரீகாந்த் இப்படத்தில் ஒரு வித்தியாசமான கதாபாத்திரம் ஏற்று நடித்திருக்கிறார். காதல், சென்டிமெண்ட, காமெடி என எல்லாவற்றிலும் தனது சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார்.

இன்னொரு ஹீரோ என்று சொல்லும்படி இருக்கிறது சந்தானத்தின் கதாபாத்திரம். அதனால், தன்னுடைய கதாபாத்திரத்தின் தன்மை அறிந்து சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். வில்லத்தனமான கதாபாத்திரம் என்றாலும், அதை காமெடியாக, கலகலப்பாக கொண்டுபோயிருப்பது சிறப்பு.

நாயகி சுனைனா, அழகிலும் கவர்ச்சியிலும் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். அதுமட்டுமில்லாமல் தன்னுடைய அழகான நடிப்பாலும் ரசிகர்களை கட்டிப்போடுகிறார். படத்தில் வரும் இதர நடிகர் – நடிகைகளும் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

இயக்குனர் கணேஷாவுக்கு இது முதல் படம். முதல் படத்திலேயே வித்தியாசமான கதைக்களத்தை கையாண்டிருக்கிறார். நமக்குள்ளும், நம்மை சுற்றியும் எதிர்மறையான சிந்தனைகள் இல்லாமல், நேர்மையான சிந்தனைகள் இருந்தாலே எல்லாம் நல்லபடியாக நடக்கும் என்பதை இந்த படத்தில் அவர் சொல்லியிருக்கிறார். என்றாலும், திரைக்கதையும், ஸ்டேஜிங்கும் அவரை செமத்தையாக காலை வாரிவிட்டிருக்கிறது.

விஜய் ஆண்டனி இசையில் பாடல்கள் எல்லாம் கேட்கும் ரகம். பின்னணி இசையும் ஓ.கே. எம்.எஸ்.பிரபுவின் ஒளிப்பதிவு பக்கபலம்.

‘நம்பியார்’ – கொஞ்சம் சிரமத்துடன் ரசிக்கலாம்.