யானை மேல் குதிரை சவாரி – விமர்சனம்

கிராமத்தில் மொட்டை ராஜேந்திரனும், சுவாமிநாதனும் நண்பர்கள். இவர்களும் இருவரும் சேர்ந்து சின்ன அளவில் நெசவுத்தொழில் செய்து வருகிறார்கள். செல்வந்தரான முத்துராமனோ, இவர்களைவிட கொஞ்சம் பெரிய அளவில் நெசவு தொழில் செய்து வருகிறார். இவர்கள் மூவருமே பெண் பித்தர்கள் – உமனைசர்கள் – சோக்காலிகள்! எந்த பெண்ணை பார்த்தாலும், அவளை அனுபவிக்கத் துடிப்பவர்கள்.

முத்துராமனுடைய கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார் நாயகி அர்ச்சனா சிங். அவரை அனுபவிக்க வேண்டும் என்ற ஆசையில் இருக்கிறார் முத்துராமன். அதேபோல், மொட்டை  ராஜேந்திரனும், சுவாமிநாதனும் நாயகியை அடையத் துடிக்கிறார்கள்.

அம்மா இறந்த பிறகு தனது தம்பியுடன் வசித்துவரும் அர்ச்சனா சிங்கை தேடி, அவரது அத்தை வருகிறார். தனது மகன் அர்ச்சனா சிங்கை திருமணம் செய்துகொள்ள விரும்புவதாக கூறுகிறார். தனக்கு ரூ.4 லட்சம் கடன் இருப்பதாகவும், ஆளுக்கு பாதிப் பாதி கடனை அடைத்துவிட்டால் இந்த திருமணத்தை நடத்திவிடலாம் என்றும் யோசனை கூறுகிறார்.

யாருமில்லாமல் அனாதையாக வாழ்வதைவிட, அந்த கடனை அடைத்துவிட்டு மாமனை மணந்து வாழலாம் என்று முடிவெடுக்கிறார் அர்ச்சனா சிங். தனது முதலாளி முத்துராமனிடம் சென்று பணம் கேட்கிறார். அவரோ, பணம் வேண்டுமென்றால் தனது ஆசைக்கு இணங்க வேண்டும் என்று கூறுகிறார். இதனால், கோபமடைந்த அர்ச்சனா சிங், அவரிடம் பணம் வாங்காமல் திரும்பி செல்கிறார். பள்ளியில் படிக்கும் அவரது தம்பியின் தோழர்கள் இவருக்கு உதவ முன் வருகிறார்கள்.

தேவையான பணத்தை திரட்டி, தனது மாமாவோடு அர்ச்சனா சிங் ஜோடி சேர்ந்தாரா, இல்லையா? என்பது மீதிக்கதை.

படத்தில் நாயகன் என்று யாரும் கிடையாது. நாயகி அர்ச்சனா சிங் பார்க்க அழகாக இருக்கிறார். படத்தின் கதை இவரைச் சுற்றியே இருப்பதால், இன்னும் கொஞ்சம் முயற்சி செய்து நடித்திருக்கலாம்.

வில்லன்களான மொட்டை ராஜேந்திரன், சுவாமிநாதன், முத்துராமன் ஆகியோர் தங்கள் கதாபாத்திரத்திற்கு தேவையான நடிப்பை சிறப்பாக செய்திருக்கிறார்கள். முத்துராமன் வழக்கம்போல் வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார். மொட்டை ராஜேந்திரனும், சுவாமிநாதனும் படத்தை கலகலப்பாக கொண்டு செல்ல உதவியிருக்கிறார்கள்.

ஐஸ் வண்டிக்காரராக வரும் கிருஷ்ணமூர்த்தியின் கதாபாத்திரம் சிறப்பாக இருக்கிறது. ஆரம்பத்தில் நாயகிக்கு உதவுவதுபோல் வந்து, பிற்பாதியில் அவரே வில்லனாக மாறுவது சிறப்பு.

இயக்குனர் கருப்பையா முருகன், நாயகன் இல்லாத ஒரு வித்தியாசமான கதையை உருவாக்கியிருக்கிறார். அருமையான கான்செப்ட். எவரும் எதிர்பார்க்க முடியாத பகீர் க்ளைமாக்ஸ். ஆங்காங்கே வசனங்கள் சிறப்பாக இருக்கின்றன.

ஆனால், பாத்திரப் படைப்பில் நேர்த்தி இல்லாததாலும், காட்சியமைப்பில் புதுமை இல்லாததாலும், திரைக்கதையில் விறுவிறுப்பு இல்லாததாலும், மொக்கையான மேக்கிங் என்பதாலும், படம் ரொம்பவே பொறுமையை சோதிக்கிறது.

’யானை மேல் குதிரை சவாரி’ – கான்செப்ட்டுக்காகவும், க்ளைமாக்சுக்காகவும் பார்க்கலாம்!