அதிமுக பக்தி இயக்கமாம்! செப்புகிறார் மதுரை ஆதீனம்!!

“அதிமுக ஒரு பக்தி இயக்கம்” என்று மதுரை ஆதீனம் கூறியுள்ளார்.

போடி சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளரும் அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரித்து போடியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் கூறியதாவது:

தமிழகத்தை காப்பாற்றி எல்லா வகையிலும் நன்மை செய்தவர் தமிழக முதல்வர். அவர் சட்டத்தை மதித்து, அனைத்து ஜாதி,மத மக்களையும் மதித்து மத நல்லிணக்கத்தை கடைபிடித்து வருகிறார். அ.தி.மு.க.வை மதுரை ஆதீனம் சபை 1990 ஆம் ஆண்டு முதல் ஆதரித்து வருவதற்கு காரணமே, அதிமுகவில் ஜாதி,மத வேறுபாடு இல்லாதது தான்.

இந்துக்கள் கேதார்நாத் செல்லவும், கிறிஸ்துவர்கள் ஜெருசலேம் செல்லவும், இஸ்லாமியர்கள் ஹஜ் செல்லவும் அதிமுக ஆட்சியில் மானியம் வழங்கப்பட்டு வருகிறது. முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான கட்சி பக்தி இயக்கமாக திகழ்ந்து வருகிறது.

சென்னையில் மழை வெள்ளம் வந்தபோது தொற்றுநோயோ, மிகப்பெரிய உயிர்ச்சேதமோ ஏற்படவில்லை. இதற்கு முதல்வரின் இறை பிரார்த்தனை தான் காரணம்.

இவ்வாறு அவர் பேசினார்.

பொதுக்கூட்டத்தில், அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் டி.டி.சிவக்குமார், இளைஞர் பாசறை செயலாளர் ஓ.பி.ரவீந்திரநாத்குமார், தேனி எம்.பி. பார்த்திபன், அ.தி.மு.க. தொகுதி செயலாளர் போதுமணி, நகர செயலாளர் பாலமுருகன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.