‘தரமணி’: ராம் உண்மையில் அழகான ஒரு மேஜிக்கல் படத்தை கொடுத்திருக்கிறார்!

நான் ஒரு கத்தோலிக்க கிறிஸ்துவன். வாரம் தோறும் பாவமன்னிப்பு கேட்க வேண்டுமென்று என் பெற்றோரால் சொல்லி வளர்க்கப்பட்டவன். பாவமன்னிப்பு என்பது வெறும் சடங்கல்ல. மற்றவர்கள் மீது நாம் காட்டுகிற வன்மத்தை நினைத்து வருந்துவது, குற்றவுணர்ச்சி கொள்வது, அந்த வன்மத்தை ஒழித்து அன்பு காட்டுவது. ஆகவே பாவமன்னிப்பு எனக்கு பிடித்துப்போனது.

இத்தகைய தனிமனித வன்மத்தை நினைத்து ஒவ்வொரு ஆணையும் குற்றவுணர்ச்சிக்கு உள்ளாக்குகிற செயல் சாதாரணமானது அல்ல. அதை கலையாக மாற்றுவது பெரும் திறமை வேண்டும். அந்த திறமை ராமிற்கு இருக்கிறது. தரமணியில் இருக்கிறது.

படம் ஓடிக் கொண்டிருக்கும்போதே என் இறுக்கம் உடைபட ஆரம்பித்தது. அந்த படத்தில் வருகிற பிரபுவின் மனநிலை ஒவ்வொரு ஆணுக்கும் உண்டு. அதில் சதவீதங்கள் வேண்டுமானால் மாறலாம். சிலர் அப்படியே இருப்பார்கள், சிலர் அவற்றில் பெரும்பகுதியில் இருப்பார்கள், சிலர் அவற்றில் சில பகுதியில் இருப்பார்கள்.

ஆணுடைய வன்மத்தை போட்டு உடைத்திருக்கிறார் ராம். காதலிக்காக திருடுகிறார் நாயகன். ஆனால் அந்த காதலி ஏமாற்றி விடுகிறார். இதனால் காதல் தோல்வியுண்டு வெறுப்பின் உச்சிக்கு செல்கிற கதாநாயகன் பரதேசியாக திரிகிறார். அதே நேரத்தில் திருடிய பணத்தை அந்த குடும்பத்திடம் ஒப்படைக்க வேண்டுமென்கிற நியாய உணர்ச்சியும் அவரிடம் ஒட்டிக் கொண்டிருக்கிறது. ஓரினச்சேர்க்கையால் பிரிந்து போன கணவன் இல்லாமல் குழந்தையுடன் வாழ்கிற நாயகியின் அறிமுகம் நட்பாக துளிர்கிறது. அது காதலாக வளர்கிறது. நாயகி, அவளது குழந்தை, நாயகன் மூன்று பேரும் ஒன்றாக வசிக்கின்றனர். நாயகியை சந்தேகம் கொள்கிற நாயகன் கடும் வன்மத்தைக் கொண்டு தாக்குகிறான். இருவரும் பிரிகிறார்கள். இதனால் பெண்கள் மீது வெறுப்படைந்த நாயகன் தொலைபேசி மூலமாக சில பெண்களை பழிவாங்க பார்க்கிறான். அந்த பெண்கள் கற்றுக் கொடுக்கிற பாடங்கள் நாயகனை குற்றவுணர்ச்சிக்கு உள்ளாக்குகிறது. நாயகியிடம் மன்னிப்பு கேட்கிறான்.

இப்படி கதை நகர்கிறது. ஏமாற்றிய காதலியை பழிவாங்க துடிக்கும்போது அவன் மீது அவள் வைத்திருக்கும் நம்பிக்கையை கண்டு குற்றவுணர்ச்சிக்கு உள்ளாகிறான். காவல் உயர் அதிகாரியின் மனைவியை பழிவாங்கும்போது அந்த பெண்ணிற்குள் இருக்கும் தாய்மை நட்பு உணர்வு அத்தை அத்தை என்று உருக வைக்கிறது. நாயகியாக வருகிற ஆண்ட்ரியா அசத்துகிறார். நான் உண்மையானவள், ஆனால் என் உண்மையை எவனுக்கும் நிருபிக்க வேண்டிய அவசியமில்லை என்கிற அந்த வலுவான கோட்பாடுடன் நாயகி வலம் வருவது பிரமிப்பை ஏற்படுத்துகிறது.

அதுமட்டுமல்ல சின்ன சின்ன காட்சிகள் மனதை நெகிழ்ச்சிக்கு உள்ளாக்குகிறது. ஆண்ட்ரியா குடித்த பாட்டில்களை அவருடைய குழந்தை சேகரித்துக்கொண்டு லிப்ட் விட்டு இறங்கி பெரிய சாலைகளை கடந்து போட்டுவிட்டு வருவான். லிப்டுக்குள் ஒரு தொழிலாளி இது என்னடா பாட்டில் என்று கேட்கும்போது அப்பா குடித்த பாட்டில் என்று நாகரீகமாக அம்மாவின் கண்ணியத்தை அந்த குழந்தை பாதுகாக்கும். அந்த காட்சி மனதை விட்டு நீங்க மறுக்கிறது.

ஆண்ட்ரியா தற்கொலைக்கு முயற்சி செய்கிறபோது அந்த உயர்ந்த அபார்ட்மெண்டில் உள்ளே வந்த பறவை அவள் மீது அமர்ந்து நடக்கும். அந்த தற்கொலை எண்ணம் விடப்படும். மற்றொரு நாள் அந்த அபார்ட்மெண்ட் கண்ணாடியில் மோதி அந்த பறவை இறந்து போக தற்கொலைக்கு முயற்சி செய்த அந்த பிளாஸ்டிக் கவர் அவளது காலை சுற்றுகிற காட்சி – கவிதை.

படம் முழுக்க இடையில் ராம் பேசிக்கொண்டே இருக்கிறார். அந்த பேச்சு நகைச்சுவையாகவும் அரசியல் அடியாகவும் இருக்கிறது. கேட்பதற்கும் நன்றாக இருக்கிறது.

தன்னுடைய கணவன் ஓரினச்சேர்க்கையாளன் என்று தெரிந்ததும் அவனது கரத்தை பிடித்து உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும். ஆனால் உன் உணர்வினை மதிக்கிறேன் என்று நாயகி சொல்கிறபோது நெகிழ்வின் கம்பீரம் தெரிகிறது.

கணவன் பிரிந்து போனதை தன்னுடைய குழந்தையிடம் அப்பாவை டால்பின் மீன் முழுங்கிவிட்டது என்று நாயகி சொல்லியிருப்பாள். வெவ்வேறு நபர்களிடம் தன் கணவர் ஆஸ்திரேலியா போயிருக்கிறார், தொழில் செய்கிறார் என்றெல்லாம் சொல்லியிருப்பார். இவை எல்லாம் தன் குழந்தைக்கு தெரியாது என்று நினைத்திருந்த தருணத்தில் அந்த குழந்தையின் கடிதத்தில் அம்மாவின் பொய்களை பொய்யாக சொல்லாமல் ஏக்கமாக சொல்லியிருப்பது அருமை. குழந்தைகள் தான் நமது ஆசிரியர்கள் என்பதை அந்த ஒரு காட்சியில் அழகாக விவரிக்கப்பட்டிருக்கும்.

பறவைகளும் பயணமும் மதுவும் கடல் பரப்பும் படத்தில் பல செய்திகளை உணர்வுக்குள் கடத்திச் செல்கின்றன. ஆனாலும் என்ன குற்றம் செய்தாலும் ஆண்களின் நியாயத்தை கலையாக மாற்றுவது ஏற்புடையதல்ல. சமூக கட்டமைப்புகளை உடைக்கும் பெண்கள், கட்டமைப்புகளை உடைக்கிறோம் என்கிற பெயரில் நேர்மையில்லாத பெண்கள், சமூகத்தின் அடக்குமுறைகளுக்கு உட்பட்டு இருக்கக்கூடிய இயல்பான பெண்கள் என்கிற ரீதியில் பெண்களை வகைப்படுத்தியிருக்கிறார் ராம். சில நேரங்களில் இந்த வகைப்படுத்தல் ஓவர் டோஸôக மாறிவிடுகிறது.

பெண்ணியம் என்பது ஆண்களின் குற்றங்களை வன்மங்களை நிர்வாணமாக்குவது. குற்றவுணர்ச்சிக்கு ஆளாக்குவது. அதனடிப்படையில் சமத்துவதை கட்டமைப்பது. இந்த சமூக மாற்றத்தை ஒரு கதையில் சொல்லியிருக்கும் ராம் உண்மையில் அழகான ஒரு மேஜிக்கல் படத்தை கொடுத்திருப்பதற்காக நிறைய அன்பு.

EVIDENCE KATHIR