போராடிய சில மாணவர்களை முன்னிறுத்தி பினாமி கட்சி தொடங்க லாரன்ஸ் திட்டம்?

சல்லிக்கட்டுக்காக போராடிய சில மாணவர்களை நடிகர் ராகவா லாரன்ஸ் தனது பண பலத்தால் கைக்குள் போட்டுக்கொண்டு, மாணவர் சக்தியை காயடிக்க நினைக்கும் மத்திய – மாநில ஆளுங்கட்சிகளின் ரகசிய ஏற்பாட்டின்பேரில், அக்கட்சிகளின் பினாமி கட்சியாக புதிய அரசியல் கட்சி தொடங்க திட்டமிட்டுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்தின் அதிதீவிர பக்தராக தன்னை காட்டிக் கொள்பவர் ராகவா லாரன்ஸ். டான்ஸ் மாஸ்டராக தனது திரைப்பயணத்தை தொடங்கிய லாரன்ஸ், பின்னர் நடிகராக உயர்ந்தார். அதனை தொடர்ந்து, மூட நம்பிக்கைகளை வளர்க்கும் பேய் படங்களின் இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் மாறினார். தற்போது ‘மொட்ட சிவா கெட்ட சிவா’, ‘சிவலிங்கா’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இந்த படங்கள் அடுத்தடுத்து ரிலீஸாக உள்ளன.

லாரன்ஸ் சினிமாவில் நடித்து வந்தாலும் ஏராளமான நலத்திட்ட உதவிகளையும் செய்து வருகிறார். தனது அறக்கட்டளை மூலமாக பல குழந்தைகளை அவர் வளர்த்து வருகிறார். ‘சோழியன் குடும்பி சும்மா ஆடாது’ என்பதை நன்கு உணர்ந்த அரசியல் நோக்கர்கள், லாரன்ஸ் செய்யும் நலத்திட்ட உதவிகளையும், அவற்றிற்கு ஊடகங்கள் கொடுக்கும் மிதமிஞ்சிய விளம்பரங்களையும் எச்சரிக்கையுடனே கவனித்து வந்தார்கள்.

சமீபத்தில், உலகமே திரும்பிப் பார்க்கும் வகையில், சல்லிக்கட்டு என்ற தமிழின அடையாளத்தை உயர்த்திப் பிடித்து, தமிழகம் முழுவதும் மாணவர்களும், இளைஞர்களும் தன்னெழுச்சியாக போராட்டம் நடத்தினார்கள். இந்த போராட்டத்தின் வீச்சை கணக்குப் போட்ட லாரன்ஸ், போராட்டக்காரர்களுக்கு தார்மீக ஆதரவு தெரிவிப்பது என்ற சாக்கில் போராட்டக் களத்துக்கு வந்தார்.

போராட்டம் மீதான கவனம் சினிமாக்காரர்கள் பக்கம் திரும்பி விடக் கூடாது என்பதற்காக சினிமாக்காரர்கள் வர வேண்டாம் என்று மாணவர்கள் திட்டவட்டமாக அறிவித்திருந்தனர். ஆனால், போராட்டக்காரர்களுக்குத் தேவையான சாப்பாடு, மருந்து உள்ளிட்ட உதவிகளை செய்வதாக அறிவித்து, மாணவர்களுக்கு நெருக்கமாகி, தடையை கடந்து உள்ளே புகுந்து அமர்ந்தார் லாரன்ஸ்.

தலைவன் இல்லாத அந்த போராட்டத்துக்கு தான் தான் தலைவன் என்பது போல் காட்டிக்கொண்டார். மீடியாக்களின் வெளிச்சம் தன் மீது மட்டுமே பாயும் வண்ணம், அதற்கான ஏற்பாடுகளை செய்துகொண்டார்.

போராட்டத்தை சீர்குலைக்க “சமூக விரோதிகள்”, “தேச விரோதிகள்”, “தீவிரவாதிகள்” என போலீசார் வசனம் பேசியபோது, அதே வசனத்தை எழுத்து பிசகாமல் லாரன்ஸூம் பேசினார். மட்டுமல்ல, அவசர சட்டம் இயற்றியதற்காக ‘பன்னீர்செல்வம் அய்யா’வுக்கும், ‘மோடி அய்யா’வுக்கும் லாரன்ஸ் நன்றி தெரிவிக்கும் காணொளி, மாணவர்களும், மீனவர்களும் போலீசாரால் தாக்கப்படும் காட்சிகளுக்கு இடையே தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டது.

அதன்பின்னர், முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை லாரன்ஸ் நேரில் சந்தித்து, மீண்டும் நன்றி தெரிவித்ததோடு, கைது செய்யப்பட்ட மாணவர்களை விடுதலை செய்யுமாறும் கோரிக்கை விடுத்தார். இதன் தொடர்ச்சியாக, லாரன்ஸின் கோரிக்கையை ஏற்று, மாணவர்களை விடுவிப்பதாக ஓ.பி.எஸ். அறிவித்துள்ளார்.

சல்லிக்கட்டுக்காக போராடிய சில மாணவர்களை லாரன்ஸ் தனது பண பலத்தால் கைக்குள் போட்டுக்கொண்டு, மாணவர் சக்தியை காயடிக்க நினைக்கும் மத்திய – மாநில ஆளுங்கட்சிகளின் ரகசிய ஏற்பாட்டின்பேரில், அக்கட்சிகளின் பினாமி கட்சியாக புதிய அரசியல் கட்சி ஒன்றை தொடங்க திட்டமிட்டுள்ளதாக, விழிப்புணர்வு உள்ள மாணவர்கள் தரப்பு குற்றம் சாட்டுகிறது.

இக்கட்சி தொடங்குவதற்கான பணிகள், லாரன்ஸ் கோவில் கட்டியுள்ள திருமுல்லைவாயிலை உள்ளடக்கிய ஆவடி – அம்பத்தூர் பகுதிகளில் நடைபெற்று வருவதாகவும், கட்சியின் பெயர் அறிவிக்காமல், சமூக வலைத்தளங்கள் மூலம் உறுப்பினர் சேர்க்கை தொடங்கப்பட்டிருப்பதாகவும் அத்தரப்பு கூறுகிறது.

சல்லிக்கட்டுக்கு போராடிய மாணவர்களும், இளைஞர்களும் லாரன்ஸ் கும்பல் விரிக்கும் சதிவலையில் விழுந்துவிடக் கூடாது என்றும் அத்தரப்பு எச்சரிக்கிறது.