“தேவை வந்தால் கண்டிப்பாக அரசியலுக்கு வருவேன்”: ராகவா லாரன்ஸ் அறிவிப்பு!

“தேவை வந்தால், கண்டிப்பாக அரசியலுக்கு வருவேன். ஆக்கப் பணிகளில் ஈடுபடுகிற இளைஞர்கள், மாணவர்கள் அப்போது வேட்பாளர்களாக நிறுத்தப்படுவார்கள்” என்று நடிகர் ராகவா லாரன்ஸ் கூறியுள்ளார்.

சல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்துகொண்ட சில மாணவர்கள் சகிதம் ராகவா லாரன்ஸ் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

இளைஞர்கள், மாணவர்கள் ஒன்றாக சேர்ந்து மெரினாவில் போராட்டம் நடத்தியதன் மூலம் பல நல்ல விஷயங்கள் நடந்தன. இந்த வெற்றியை கொண்டாட வேண்டும் என்று இளைஞர்கள் விரும்புகிறார்கள். இது தொடர்பாக முதல்வரைச் சந்தித்துப் பேசியுள்ளோம். பரிசீலிப்பதாக கூறியுள்ளார்.

அலங்காநல்லூர் சல்லிக்கட்டுக்காக எஸ்.எஸ்.தமன் இசையில் இளைஞர்கள் குமரன், பிரகாஷ் எழுதிப் பாடிய பாடல் உருவாகியுள்ளது.

சென்னையில் நடந்த வன்முறைச் சம்பவங்களின்போது பாதிக்கப்பட்ட குப்பத்துக்காக ரூ.10 லட்சம் கொடுக்கப் போவதாக அறிவித்திருந்தேன். அரசே அந்தப் பகுதிக்கு நலத்திட்ட உதவிகளைச் செய்து தருவதாக அறிவித்துள்ளதால், போராட்டத்தில் இறந்த அம்பத்தூர் இளைஞர் மணிகண்டனின் (17) குடும்பத்துக்கு அதை அளிக்க உள்ளேன்.

சல்லிக்கட்டுக்கு அனுமதி பெற்றது போல மேலும் பல சாதனைகளை இளைஞர், மாணவர் சக்தி படைக்க வேண்டும் என்பது பலரது விருப்பமாக உள்ளது. இந்த சக்தியானது ஒரு நல்ல அமைப்பாக உருவாக வேண்டும் என்று விரும்புகின்றனர். இதில் இடம்பெறும் மாணவர்கள், இளைஞர்கள் எந்த அரசியல் கட்சியையும் சாராதவர்களாக இருக்க வேண்டும். தீவிரவாதம், பிரிவினைவாதம், மதவாதம் போன்ற கொள்கைகளில் ஈடுபாடு கொண்டவராக இருக்கக் கூடாது என்று வலியுறுத்தி வருகிறேன்.

அரசியலுக்காகத் தான் நான் உதவிகள் செய்வதாக சிலர் விமர்சிக்கின்றனர். அது தவறு. பல ஆண்டுகளாக இது போன்ற உதவிகளைச் செய்து வருகிறேன்.

அரசியலுக்கு வரவேண்டும் என்பது என் விருப்பம் அல்ல. ஒருவேளை, அதற்கான தேவை வந்தால், கண்டிப்பாக அரசியலுக்கு வருவேன். ஆக்கப் பணிகளில் ஈடுபடுகிற இளைஞர்கள், மாணவர்கள் அப்போது வேட்பாளர்களாக நிறுத்தப்படுவார்கள்.

இவ்வாறு ராகவா லாரன்ஸ் கூறினார்.