ஓ.பி.எஸ் வீட்டுக்கு மனோபாலாவுடன் சென்ற அனுபவம்: ஒரு சுவாரசிய பதிவு!

முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து அவருக்கு ஆதரவு தெரிவிக்கச் சென்ற நடிகரும் தயாரிப்பாளருமான மனோபாலாவுடன் உடன் சென்ற எழுத்தாளர் வா. மணிகண்டன் அது குறித்து எழுதியுள்ள பதிவு:

நேற்று நடிகரும் தயாரிப்பாளருமான மனோபாலாவின் அலுவலகத்தில் இருந்தேன். கதை குறித்தான விவாதம் ஒன்று நடந்து கொண்டிருந்தது. நாங்கள் அலுவலகத்திற்குள் நுழையும்போது சமையல் செய்து கொண்டிருந்தார். அவர் சமையலில் நிபுணர். நேற்று வரைக்கும் எனக்குத் தெரியாது. அட்டகாசமாகச் செய்திருந்தார். பரபரப்பாகத்தான் இருந்தார். ‘காலையில இருந்து கூப்பிட்டுட்டே இருக்காங்கடா’ என்றார். அவர் சொன்னது போயஸ் கார்டன் தரப்பிலிருந்து. தம்பிதுரை, அவரது பி.ஏ, குண்டுகல்யாணம் என்று ஆள் மாற்றி ஆள் அழைத்துக்கொண்டே இருந்தார்களாம். இவர் முடிந்தவரைக்கும் தவிர்த்துக் கொண்டேயிருந்தார். ஆனால் ஓ.பி.எஸ்ஸை சந்தித்து ஆதரவு தெரிவித்துவிடுவது என்று ஏற்கனவே முடிவு செய்து வைத்திருந்தார். அவருக்கு முன்பாகவே சினிமாவிலிருந்து ராமராஜன் உள்ளிட்ட ஒரு குழு ஓபிஎஸ்ஸை பார்க்கச் சென்றிருப்பதாக செய்தி வந்திருந்தது.

‘அவங்க போனா போகட்டும்.. நாம தனியா போவோம்’ என்றவர் ‘நீங்களும் வர்றீங்களா?’ என்று கேட்டார். அரசியல் இரண்டாம்பட்சம். இதெல்லாம் சேகரித்து வைக்க வேண்டிய அனுபவம். சென்று வருவதற்கு என்ன? ‘வர்றோம்’ என்று சொல்லியிருந்தோம். அவரையும் சேர்த்து ஐந்து பேர்கள். அப்பொழுதே ஓபிஎஸ் அவர்களின் உதவியாளரை அழைத்துப் பேசினார். மாலை நான்கு மணிக்கு வரச் சொல்லியிருந்தார்கள். ‘இனி ஃபோன் மேல ஃபோன் வருமேடா’ என்று அவரது பாணியிலேயே சொன்னவர் ‘சாப்பிட்டுவிட்டு எல்லோரும் ஒரு மணி நேரம் தூங்குங்க. ஃப்ரெஷ்ஷா போய்ட்டு வந்துடலாம்’ என்றார். உணவு உண்ணும்போது முழுமையும் இதுதான் பேச்சாக இருந்தது. சிலவற்றை பிறிதொரு சமயம் எழுத வேண்டும். 2016 தேர்தலுக்குப் பிறகு கட்சிக்காரர்கள் யாரையுமே சி.எம் அருகில் விடவில்லை என்பது அவரது ஆதங்கமாக இருந்தது. ‘என்னை அம்மாவுக்கு பிடிக்கும்…ஒரு தடவை கூட பார்க்க விடாம செஞ்சுட்டாங்க’ என்றார். எழுபத்தைந்து நாட்கள் பற்றிய மனக்குறையும் அவருக்கு இருந்தது. இப்படி எதிரணிக்கு மாறிக் கொண்டிருக்கும் ஒவ்வொருவருக்கும் ஒரு ஆதங்கம் இருக்கக் கூடும். மதிய உணவுக்குப் பிறகு அவர் தூங்கச் சென்றுவிட்டார்.

மூன்றரை மணிக்குத் தயாரானோம். அவரது காரிலேயே ஏறிக் கொண்டோம். ‘இறங்கின உடனே என்னை அப்படியே தூக்கிட்டு போய்டுவாங்க…விட்டுடாதீங்க’ என்றார். அவர் ஒரு பயில்வான். நான் அவரை விட பயில்வான். என்ன ஆனாலும் சரி; அவரது சட்டையை இறுகப் பற்றிக் கொள்ள வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன். அவரைத் தூக்குகிறவர்களுக்கு பெரிய எடையாகத் தெரியமாட்டார். அவரோடு நான் ஒட்டிக் கொண்டாலும் தூக்குகிறவர்களுக்கு ஒன்றும் பெரிய வித்தியாசம் இருக்கப் போவதில்லை. நல்லவேளையாக வேஷ்டி கட்டிக் கொண்டு செல்லவில்லை என்பதை நினைத்து பாபாவுக்கு நன்றி சொல்லிக் கொண்டேன்.

க்ரீன்வேஸ் சாலை முழுவதும் வண்டிகள் நிரம்பிக் கிடந்தன. கட்சிக்காரர்கள் பெருங்கூட்டமாகத் திரண்டிருந்தார்கள். மனோபாலாவின் வண்டியை யாருமே தடுக்கவில்லை. காவல்துறையினர் வணக்கம் சொல்லி வழி ஏற்படுத்திக் கொடுத்தார்கள். சாலையிலிருந்து உள்ளே ஒரு ஐநூறு மீட்டர் சென்றால்தான் வீடு. அது வரைக்கும் அனுமதித்தார்கள். அங்கே வண்டியை நிறுத்திவிட்டு இறங்கியவுடன் அவர் சொன்னது போலவே மொய்க்க ஆரம்பித்துவிட்டார்கள். இப்பொழுதெல்லாம் யாரும் ஆட்டோகிராஃப் கேட்பதில்லை. செல்ஃபிதான். இந்தப் பக்கமும் அந்தப் பக்கமுமாகத் திருப்பி வளைத்து ஒரு வழியாக்கிவிடுகிறார்கள். இயக்குநர் நிர்மல்குமாரும், அவரது உதவியாளர்களும் உடன் வந்திருந்தார்கள்.

ஓபிஎஸ்ஸின் வீட்டிற்கு முன்புறத்தில் போயஸ் கார்டன் வேதா நிலையத்தை நினைவு இல்லமாக்குவதற்கு ஆதரவு கோரும் மூன்று பதாகைகளை வைத்திருக்கிறார்கள். கையொப்பங்களால் நிரம்பிக் கிடக்கிறது. மாணவ மாணவிகள் நிறையப் பேர் கையெழுத்திட்டுக் கொண்டிருந்தார்கள். ஒருவேளை ஓபிஎஸ்ஸூக்கு அதிகாரம் வந்தால் முதல் வேலையாக அதைத்தான் செய்வார் எனத் தோன்றியது. போலீஸார் குவிக்கப்பட்டிருந்தார்கள். பத்திரிக்கையாளர்களும் நிறைந்து கிடக்கிறார்கள். வீட்டிற்குள்ளேயும் நிறையக் கூட்டம் நிரம்பியிருந்தது. வெகுவாக வடிகட்டுகிறார்கள்.

மனோபாலாவுக்கு தனித்த மரியாதை. ‘அண்ணே’ என்று அழைத்துத்தான் ஓபிஎஸ் பேசுகிறார். இன்றைய முதல்வர் புன்னகை மாறாமலேயே இருக்கிறார். ஆனால் முகம் களைத்துப் போய்க் கிடந்தது. வந்திருக்கிற அனைவருக்கும் குடிநீர் வழங்குகிறார்கள். உணவு வழங்குவதாகவும் சொன்னார்கள். நான் பார்க்கவில்லை. வீட்டிற்கு வெளியில் மக்கள் உற்சாகத்தோடு இருக்கிறார்கள். பல ஊர்களிலிருந்தும் வந்து போய்க் கொண்டிருக்கிறார்கள். வருகிறவர்களின் பெயர் முகவரி உள்ளிட்ட விவரங்களைப் பதிவு செய்து கொண்டிருந்தார்கள். அனுமதி வாங்கியவர்களை வீட்டிற்குள்ளாக அழைக்கிறார்கள். அரை மணி நேரத்துக்கு ஒரு முறை வெளியில் வருகிறார் ஓ.பி.எஸ். மக்கள் வரிசையாக வந்து வாழ்த்துச் சொல்லிவிட்டுச் செல்கிறார்கள். ஆனால் அவர்களை அருகாமையில் அனுமதிப்பதில்லை. இந்த அரசியல் சூழலில் எல்லோரையும் அருகில் அனுமதிப்பது பாதுகாப்பானது இல்லை என்று காவலர்கள் சொன்னார்கள். அதுவும் சரிதான்.

அமைச்சர் மாஃபா பாண்டியராஜனைச் சந்திக்க முடிந்தது. ‘சார் மணிகண்டன்… நீட் எக்ஸாம் பத்தி ஒரு கட்டுரை எழுதி அதுக்கு நீங்க பதில் சொல்லியிருந்தீங்க’ என்றேன். அவருக்கு உண்மையிலேயே நினைவில் இருக்கிறதா என்று தெரியவில்லை. ‘ஞாபகம் இருக்கு…இந்தப் பிரச்சினையெல்லாம் முடியட்டும்.. நாம பேசுவோம்’ என்றார். அவர் அப்பொழுதுதான் சசிகலா நடராஜனைச் சந்தித்துவிட்டு வந்ததாகச் சொல்லி வதந்தி கிளம்பியிருந்தது. ஆனால் அவர் மைலாப்பூர் எம்.எல்.ஏ மீசைக்காரர் நடராஜை தான் சந்தித்துவிட்டு வந்திருந்தார். அவருக்கும் அந்த வதந்தி குறித்துத் தெரிந்திருந்தது. அவர் மீண்டும் கிளம்பிச் சென்றார்.

மனோபாலாவை ஓபிஎஸ் கைபிடித்து அழைத்து வந்து மக்களிடம் அறிமுகப்படுத்தினார். இரண்டு நிமிடங்கள் மனோபாலா பேசினார். எதைப் பேசினால் கைதட்டுவார்கள் என்று தெரிந்து வைத்திருப்பார் போலிருக்கிறது. அதை மட்டுமே பேசினார். ஓபிஎஸ் சிரித்துக்கொண்டே நின்றார். மனோபாலாவுக்கு கை காட்டினேன். பக்கத்தில் வரச் சொல்லி அவர் பாணியிலேயே தலையை ஆட்டினார். ஆனால் அது அவ்வளவு சாத்தியமில்லை. போலீஸ்காரர்கள் முரட்டுத்தனமாக இருந்தார்கள். நமக்கு எதுக்கு வம்பு என்று ஓரங்கட்டி நின்று கொண்டேன்.

பேசி முடித்துவிட்டு வெளியில் வந்தவுடன் மீண்டும் அவரை செல்ஃபிக்கு பிழிந்து எடுத்துவிட்டார்கள். கிட்டத்தட்ட ஓட்டமாக ஓடி வந்து காரில் ஏறிக் கொண்டார்.

மனோபாலாவுக்கு வெகு சந்தோஷம். தனியாக கவனித்தார்கள். மீடியாவிற்கு முதல்வரே அறிமுகப்படுத்தி வைக்கிறார். அண்ணே அண்ணே என்று அழைக்கிறார். வெளியில் வந்தவுடனே அவருக்கு ஏகப்பட்ட எஸ்.எம்.எஸ்களும் வாட்ஸப் செய்திகளும் வந்திருந்தன. ட்விட்டர், ஃபேஸ்புக் செய்திகளும் நிறைய அப்டேட் ஆகியிருந்தன. கிட்டத்தட்ட எல்லாமே பாராட்டுகிற செய்திகள்தான். ‘மக்கள் இந்தப்பக்கம்தான் இருக்காங்க’ என்று அவரே சொல்லிக் கொண்டார்.

ஓபிஎஸ் இல்லத்தில் மக்களிடமே பேச்சுக் கொடுத்தபோது ஓபிஎஸ் சி.எம் ஆகிவிடுவார் என்று நம்புகிறார்கள். அதிமுக அவர் வசம் வந்துவிடும் என்றும் நினைக்கிறார்கள். ஆனால் எம்.எல்.ஏக்கள் அசையாமல் இருப்பது ஒருவிதமான சலசலப்பை உண்டாக்கியிருக்கிறது. ‘இவர்தான சி.எம் ஒரு போலீஸ் டீமைக் கூட்டிட்டு நேரா கூவாத்தூர் போய்ட வேண்டியதுதானே’ என்று பேசினார்கள். அது எவ்வளவு தூரம் சாத்தியம் என்று தெரியவில்லை. ஆனால் அப்படிச் செய்தால் யார் தடுக்க முடியும்? ஓபிஎஸ்ஸின் மகன் ரவீந்திரனுக்கு இதைக் குறுஞ்செய்தியாக அனுப்பியிருந்தேன். இதை அவருக்கு நிறையப் பேர் சொல்லியிருக்கக் கூடும்.

திருப்பூர் தொகுதி எம்.பி. சத்யபாமாவும் அங்கேயேதான் இருந்தார். ஆனால் அதிகம் பேச முடியவில்லை. அந்த இடத்தில் பேசுவதற்கு சாத்தியமும் இல்லை. சிரித்து ‘வாழ்த்துக்கள் மேடம்’ என்றேன். ‘கோபியில் இருந்து வந்திருக்கீங்களா?’ என்றார். ‘பெங்களூரில் இருந்து வந்தேன்’ என்றேன்.

சொல்லி வைத்தாற்போல மனோபாலாவும் சரி; நிர்மல்குமாரும் சரி- செருப்பைத் தொலைத்துவிட்டார்கள். உள்ளே போகும்போது செருப்பை வெளியே விடச் சொல்கிறார்கள். வெளியே வரும்போது பின்பக்க வாயில் வழியாக அனுப்புகிறார்கள். பிறகு எப்படி செருப்பை எடுக்க முடியும்? தமிழக அரசியலே மாறிக் கொண்டிருக்கிறது… செருப்பா முக்கியம் என்று நினைத்துக் கொள்ள வேண்டியதுதான்!

Courtesy: dinamani.com