“சசிகலா என்ற பெரிய தீமையோடு ஒப்பிடும்போது ஓ.பி.எஸ். சிறிய தீமை!” – தமிழருவி மணியன்

காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன் கோவையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

சசிகலா, பன்னீர்செல்வம் இருவருமே புனிதர்கள் அல்ல. சசிகலா தப்பித்தவறி தமிழகத்தில் ஆட்சியை கைப்பற்றினால் அவரும், அவரது குடும்பத்தினரும் தமிழகத்தையே கபளீகரம் செய்து விடுவார்கள். சசிகலா குடும்பத்தினரிடம் தமிழகம் சிக்காமல் தடுக்கும் இடத்தில் தற்போது பன்னீர்செல்வம் இருப்பதாக நினைக்கிறேன். பன்னீர்செல்வம் புனிதரல்ல என்றாலும், சசிகலா கூட்டம் என்ற பெரிய தீமையோடு ஒப்பிடும்போது பன்னீர்செல்வம் சிறிய தீமை என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

ஆளுநரின் நடவடிக்கைகள் சரியான பாதையில் செல்கின்றன. அவருக்கு பின்னால் அரசியல் சூழ்ச்சி இருப்பதாக சொல்வது சரியல்ல. எனவே ஆளுநர் அவசரப்படாமல் காத்திருந்து அடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு தீர்ப்பு வரும் வரை, தமிழகத்தில் ஆட்சியமைக்க ஒப்புதல் வழங்குவதில், ஆளுநர் பொறுமை காக்க வேண்டும். அதுவே அவருடைய ஜனநாயக பொறுப்பு.

சொத்துக் குவிப்பு வழக்கு தீர்ப்புக்கு பிறகு சட்டப் பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க பன்னீர்செல்வத்துக்கு ஆளுநர் முதல் வாய்ப்பைக் கொடுக்க வேண்டும். அதன் பிறகே சசிகலாவுக்கு வாய்ப்பளிக்க வேண்டும். பன்னீர்செல்வம் மிரட்டி பணிய வைக்கப்பட்டார் என்பதைக் கருத்தில் கொண்டு சட்டப்பேரவையில் பலத்தை நிரூபிக்க அவருக்கு வாய்ப்பு தர வேண்டும்.

கடந்த இரண்டு நாட்களாக பன்னீர்செல்வத்துக்கு ஆதரவளித்து வருபவர்கள் அனைவருமே சந்தர்ப்பவாதிகள்தான். சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு எதிராக தீர்ப்பு வந்தால் அனைவருமே கொஞ்சம்கூட வெட்கப்படாமல் பன்னீர்செல்வம் பக்கம் சென்று விடுவார்கள். சசிகலாவின் மீதான வெறுப்புணர்ச்சியின் காரணமாகவே பல அதிமுக நிர்வாகிகள் தீபாவுக்கு ஆதரவளித்தனர். எனவே இந்த பிரச்சினையில் ஸ்டாலினையோ, திமுகவையோ விமர்சிப்பது தேவையற்றது.

சுதாகரன் திருமணத்தில் நகைகளுடன் ஜெயலலிதாவும், சசிகலாவும் இருப்பது போன்ற புகைப்படங்கள் எவ்வளவு அருவருப்பை ஏற்படுத்தினவோ, அதுபோல சேகர்ரெட்டியுடன் பன்னீர்செல்வம் இருக்கும் புகைப்படங்கள் அருவருப்பை ஏற்படுத்துகின்றன.

ஜெயலலிதா இல்லாத அதிமுக என்பது உயிரற்ற சடலம்போல உள்ளது. நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு அக்கட்சி நிலைக்காது. ஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும்.

இவ்வாறு தமிழருவி மணியன் கூறினார்.