கூவத்தூர் சொகுசு விடுதியில் இருந்த 34 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மாயம்!

அ.தி.மு.க. சார்பில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.க்களின் தற்போதைய எண்ணிக்கை 135 ஆகும். இவர்களில் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் பாண்டியராஜன் மற்றும் ராஜமாணிக்கம், ஆறுக்குட்டி, மனோரஞ்சிதம், மனோகரன், எஸ்.பி.சண்முகநாதன் ஆகிய 7 எம்.எல்.ஏ.க்கள் ஓ.பி.எஸ். அணியில் உள்ளனர். மீதமுள்ள 128 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூவத்தூர் ‘கோல்டன் பே’ சொகுசு விடுதியில் தங்கியிருப்பதாக சசிகலா தரப்பு கூறிவந்தது.

ஆனால், கூவத்தூர் ‘கோல்டன் பே’ சொகுசு விடுதியில் வருவாய்த் துறையினர் மேற்கொண்ட விசாரணையில், சசிகலா சார்பில் அங்கு 94 அ.தி.மு.க. எம்எல்ஏக்கள் மட்டுமே தங்க வைக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. 34 அ.தி.மு.க. எம்எல்ஏக்கள் அந்த சொகுசு விடுதியிலிருந்து மாயமாகி இருப்பதால்,  அ.தி.மு.க வட்டாரத்தில் அடுத்த கட்ட பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சசிகலாவுக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக சில அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் காஞ்சிபுரம் மாவட்டம் கல்பாக்கத்தை அடுத்த கூவத்தூர் பகுதியில் உள்ள ‘கோல்டன் பே’ என்ற தனியார் சொகுசு விடுதியில் கடந்த நான்கு நாட்களாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், எம்எல்ஏக்களைக் காணவில்லை என நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், எம்எல்ஏக்களிடம் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யும்படி நேற்று முன்தினம் உத்தரவிட்டது. இதையடுத்து, கூவத்தூரில் தங்கியுள்ள எம்எல் ஏக்களிடம் விசாரணை நடத்துவதற்காக செய்யூர் வட்டாட்சியர் ராமச்சந்திரன் தலைமையிலான வருவாய்த்துறை குழுவினர் மற்றும் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தமிழ்ச்செல்வன் தலைமையிலான போலீஸார், நேற்று அதிகாலை 6:30 மணிக்கு கூவத்தூர் சொகுசு விடுதிக்குச் சென்றனர்.

சுமார் 5 மணி நேரமாக நீடித்த விசாரணையில் விடுதியில் தங்கியுள்ள எம்எல்ஏக்களிடம் தனித் தனியாக விசாரணை மேற்கொள்ளப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர். பின்னர், விசாரணை முடித்த வருவாய்த்துறையினர் பிற்பகல் 12 மணியளவில் விடுதியில் இருந்து வெளியேறினர். அப்போது, செய்தியாளர்கள் அவர்களை சந்திக்க முயன்றனர். ஆனால் போலீஸார் அவர்களை சந்திக்கவிடாமல் தடுத்தனர். இதில் போலீஸாருக்கும் செய்தியாளர்களுக்கும் இடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து வருவாய்த் துறையினர் வாகனத்தில் விரைந்து புறப்பட்டு சென்றுவிட்ட்டனர்.

இந்நிலையில், கூவத்தூர் தனியார் விடுதியில் 94 எம்எல்ஏக்கள் மட்டுமே இருப்பது தற்போது தெரியவந்துள்ளது. நேற்று முன்தினம் செய்தியாளர்களை சந்தித்த சசிகலா ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் சிலர், விடுதியில் 128 எம்.எல்.ஏ.க்கள் தங்கியுள்ளதாக தெரிவித்தனர். ஆனால், வருவாய்த்துறையினர் 94 எம்எல்ஏக்கள் மட்டுமே இருப்பதாக தெரிவித்துள்ளதால், மீதமுள்ள 34 ஏம்எல்ஏக்கள், முதல்வர் பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக மாயமாகி விட்டார்களா என்ற கேள்வி எழு ந்துள்ளது.

எம்எல்ஏக்களிடம் விசாரணை நடத்தியது தொடர்பாக, செய்யூர் வட்டாட்சியர் ராமச்சந்திரன் ‘தி இந்து’-விடம் கூறுகையில், “கூவத்தூர் விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ள எம்எல்ஏக்களிடம் நீதிமன்ற உத்தரவின் பேரில் தனித் தனியாக வைத்து விசாரித்தோம். இதில், 94 எம்எல்ஏக்களிடம் அறிக்கை பெற்றுள்ளோம். இந்த அறிக்கை மாவட்ட நிர்வாகத்தின் மூலம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்” என்றார்.