டி.டி.வி. தினகரனை கைது செய்து திகார் சிறையில் அடைக்க டெல்லி போலீஸார் தீவிரம்!

அதிமுகவின் அதிகாரபூர்வ இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுத்ததாக டிடிவி.தினகரன் மீது டெல்லி குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அவரிடம் லஞ்சம் பெற்றதாக டெல்லியில் சுகேஷ் சந்திரசேகரா என்ற இடைத்தரகர் கைது செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து டி.டி.வி.தினகரனையும் கைது செய்து திகார் சிறையில் அடைக்க டெல்லி போலீஸார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு முதலமைச்சராக ஓ.பன்னீர்செல்வம் பதவி ஏற்றார். அதிமுகவின் பொதுச் செயலாளராக வி.கே.சசிகலா பொறுப்பேற்றார். பின்னர் சசிகலா முதல்வராக பதவியேற்க முயன்றபோது, கட்சியில் பிளவு ஏற்பட்டது. முதல்வர் பதவியிலிருந்து விலகிய ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஓர் அணியினர் தனியாக செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில், சொத்துக்குவிப்பு வழக்கின் உச்சநீதிம்ன்ற தீர்ப்பு அடிப்படையில் சசிகலா பெங்களூரு சிறையில் அடைக்கப்ப்ட, அவரது அக்கா மகன் டி.டி.வி.தினகரன் அ.தி.மு.க.வின் துணை பொதுச் செயலாளர் ஆனார்.

இதற்கிடையில் ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதால், அ.தி.மு.க.வின் அதிகாரபூர்வ தேர்தல் சின்னமான இரட்டை இலை சின்னம் தங்களுக்கே சொந்தம் என்று பன்னீர்செல்வம் தரப்பினர் தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்தனர். அதேபோல, சசிகலா தரப்பிலும் இரட்டை இலை சின்னம் கோரி மனு தரப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட தேர்தல் ஆணையம், சின்னம் யாருக்கும் இல்லை எனத் தெரிவித்து தற்காலிகமாக முடக்கிவிட்டது. இரட்டை இலை சின்னம் இல்லாமலேயே இருதரப்பும் தேர்தலுக்கு ஆயத்தமான நிலையில் பணப்பட்டுவாடா புகாரால் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலும் ரத்தானது.

இந்த நிலையில், டெல்லியின் மத்திய பகுதியில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் இன்று (திங்கள்கிழமை) அதிகாலை போலீஸார் திடீர் சோதனை நடத்தினர். இதில், சுகேஷ் சந்திரசேகரா என்பவரிடம் இருந்து ரூ.1.5 கோடி ரொக்கமும், பிஎம்டபியூ, மெர்சிடீஸ் கார்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. சுகேஷுடன் சேர்த்து மேலும் சிலரை போலீஸார் தம் விசாரணை வளையத்தில் பிடித்துள்ளனர்.

இவர்களிடம் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சிகரமாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கு முன்பாக முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னத்தை பெற, சசிகலா அணி சார்பில் அதன் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் ரூ.60 கோடி தர முன்வந்ததாக கூறப்பட்டுள்ளது. இதற்காக அவரிடம் இருந்து பெறப்பட்ட தொகையில் ரூ.1.5 கோடியை சுகேஷிடம் இருந்து போலீஸார் கைப்பற்றி உள்ளதாக கூறி உள்ளனர்.

இவர்களிடம் இருந்து மெர்சிடிஸ் மற்றும் பிஎம்டபிபிள்யூ ஆகிய சொகுசு கார்கள் இரண்டும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவற்றில் ஒரு காரின் பதிவு எண் மீது ராஜஸ்தானின் நாடாளுமன்ற உறுப்பினர் என குறிப்பிடபட்டுள்ளது.

இது தொடர்பாக போலீஸில் பதிவான முதல் தகவல் அறிக்கையில் (எப்.ஐ.ஆர்), சுகேஷ் சந்திரசேகரா மீது லஞ்சம் மற்றும் சதி குற்றச்சாட்டுகளும், டிடிவி.தினகரன் மீது லஞ்சப் புகாரும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்த விவகாரம் குறித்து தினகரனிடம் விசாரணை நடத்த முடிவு செய்துள்ள டெல்லியின் குற்றப்பிரிவு போலீஸார் அவருக்கு தகவல் அனுப்பி உள்ளனர். இந்த விசாரணைக்குப் பிறகு டி.டி.வி.தினகரனை கைது செய்து திகார் சிறையில் அடைக்க டெல்லி போலீஸார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

இதற்கிடையில், சென்னையில் இன்று (திங்கள்கிழமை) காலை செய்தியாளர்களை சந்தித்த தினகரன், “டெல்லியில் கைதான நபர் யாரென்றே எனக்குத் தெரியாது. சின்னம் பெற வேண்டும் என்பதற்காக நான் யாருக்கும் பணம் கொடுக்கவில்லை. இது தொடர்பாக டெல்லியைச் சேர்ந்த யாரையும் நான் தொடர்பு கொள்ளவில்லை. இந்தப் பிரச்சனையை நான் சட்டரீதியாக அணுகுவேன். இயக்கத்தை அழிப்பதற்காக யாரோ சிலர் செய்யும் சதி இது” என்றார்.