சாமிக்கண்ணு வின்சென்ட் பிறந்த நாளான ஏப்ரல் 18ஆம் தேதி திரையரங்கு தின விழா!

தென்னிந்திய திரையரங்கின் தலைமகன் என்று சினிமா ஜாம்பவான்களால் போற்றப்படும் சாமிக்கண்ணு வின்சென்ட் பிறந்த நாளான ஏப்ரல் 18ஆம் தேதியை .திரையரங்கு தினமாக FN ENTERTAINMENT நிறுவனம் 4-வது ஆண்டாக கொண்டாடுகிறது.

1895 ஆம் ஆண்டு லூமியர் சகோதரர்களால் கண்டுபிடிக்கப்பட்ட சினிமாவை தமிழகத்திற்கு அறிமுகப்படுத்தி வைத்த முதல் மனிதர் சாமிக்கண்ணு வின்சென்ட்.

திரையிடும் கருவியை தனது தோள்களில் சுமந்துகொண்டு தமிழகத்தின் மூலை முடுக்குகளுக்கெல்லாம் கொண்டுசென்று சலனப்படத்தைக் காட்டி நம்மிடையே சலசலப்பை உண்டுபண்ணியவர். இன்று க்யூப், யுஎஃப்எக்ஸ் எனத் தொழில்நுட்பங்கள் வளர்ந்துவிட்டாலும் ஆரம்பத்தில் திரையரங்குகளில் பயன்படுத்தப்பட்ட புரொஜெக்டர்களுக்கான தென்னிந்தியாவின் முதல் டீலர் இவர்தான்.

வெரைட்டி ஹால் என்ற பெயரில் முதல் திரையரங்கை கோவை மண்ணில் 1914ஆம் ஆண்டு துவங்கி, சினிமாவை வெற்றிகரமான தொழிலாக மாற்றிக்காட்டியவர் இவர். 22 வயதில் சினிமாவை நேசிக்கத் தொடங்கிய சாமிக்கண்ணு, தனது இறுதிக்காலம் வரை சினிமாவிற்காகவே வாழ்ந்தவர்.

ஆண்டுகள் பல கடந்தாலும் இவர் தொடங்கிய வெரைட்டி ஹால் திரையரங்கம் டிலைட் என்ற பெயரில் இப்போதும் கம்பீரமாக சாமிக்கண்ணுவின் நினைவுகளைச் சுமந்துகொண்டு நிற்கிறது.

இவரின் பிறந்தநாளான ஏப்ரல் 18ஆம் தேதி ஆண்டுதோறும் திரையரங்கு தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு FN ENTERTAINMENT சார்பாக செந்தில்நாயகம் மற்றும் ஆனந்தவரதராஜன் ஆகியோர் Village Theater உரிமையாளர் முருகானந்தத்தின் முழு ஆதரவுடன் சென்னை கமலா திரையரங்கில் வருகிற 18ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.

அன்று காலை 8 மணிக்கு, தேசிய விருது பெற்ற  ‘வாகை சூடவா’ திரைப்படம் திரையிடப்படுகிறது. காலை 10 மணிக்கு ‘வாகை சூடவா’ படக்குழுவினரோடு  திரையரங்கு விழா கொண்டாடப்படுகிறது.

இவ்விழாவை First Step PR Service சார்பாக எம்.பி.ஆனந்த் ஒருங்கிணைக்கிறார்.