‘ப.பாண்டி’ படத்தின் கசாப்பு கடை காட்சியும், தணிக்கை குழுவின் மிருகாபிமானமும்!

பவர் பாண்டி படம் பார்த்துக் கொண்டிருந்தபோது ஒரு முக்கியமான காட்சியில் என்னை அறியாமல் அழுது விட்டேன். கசாப்பு கடையில் தொங்கவிடப்பட்டிருந்த கறிகள் blur செய்யப்பட்டிருந்தன.

என்னே ஒரு மிருகாபிமானம்? இப்படியான சென்சார் கிடைக்க என்ன பேறு செய்தது தமிழ் சினிமா என தெரியவில்லை!

ஒவ்வொரு ஆட்டுக்கும், கோழிக்கும் வாழ்க்கை இருக்கிறது. லட்சியங்கள் இருக்கின்றன. குடும்பம், குட்டி எல்லாம் இருக்கிறது. சுற்றுசூழல் கேடு பெருகி வரும் காலத்தில் வாழ்வாதாரத்துக்கே அதிக பிரச்சினைகள். அநாமத்தாக கொல்லப்பட அவை என்ன தலித்களா, இஸ்லாமியர்களா, பெண்களா, பழங்குடியினரா, இல்லை ஏழைகளா?

என்ன மாதிரியான ஈனப்பிறவி இந்த மனிதன்? அவனுடைய மனைவியையும், குழந்தையையும் தன் பசிக்காக ஓர் ஆடோ, கோழியோ தின்று பார்த்திருக்கிறீர்களா? அத்தனை ஜீவகாருண்யம் காட்டும் அவற்றுக்கு நாம் என்ன பதிலுக்கு செய்தோம், சொல்லுங்கள்?

ஆம். கோழி, ஆடு கொல்லப்படுவதோ, தோலுரிக்கப்படுவதோ, உயிரற்ற உடல்களாக தொங்குவது போன்றோ சினிமாவில் காண்பிக்கப்பட கூடாது என்ற சென்சாரின் முடிவு வரவேற்கத்தக்கதே.

பாரதம் பல்லுயிர்களுக்கான தேசம். இது போன்ற காட்சிகளால் பலரும் அசைவம் உட்கொள்ள உந்தப்படுகிறார்கள். இனியும் இந்த விஷமம் தொடரக் கூடாது. இந்து ஞான மரபில் அசைவ உணவுக்கான இடமே இல்லை. ஜீவகாருண்யம் போற்றித்தான் பத்து அவதாரங்களில் மிருக அவதாரங்களையும் லோகபாந்தவன் விஷ்ணு பகவான் எடுத்தார்.

அசைவ உணவு blurring போலவே இன்னும் சில விஷயங்களையும் சென்சார் போர்டு செய்யலாம்.
1. படங்களுக்கு முன் தேசிய கீதம் ஒலிபரப்புகையில் எழுந்து நிற்காதவர்களின் ஆதார் எண்ணை சேகரித்து உளவுத்துறைக்கு அனுப்பலாம்.
2. தணிக்கையின்போது வெட்டப்படும் ரசமான காட்சிகளையும் வார்த்தைகளையும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுப்பி வைக்கலாம்.
3. ‘சாதி மாறி காதலிப்பது உயிருக்கு கேடு. அசைவம் சாப்பிடுவது உடலுக்கு கேடு’ என ஒரு disclaimer-ஐ பட துவக்கங்களில் போட அறிவுறுத்தலாம்.
4. ‘இவர்தான் முகேஷ்’ பாணியில் இந்து ஞான மரபை வலியுறுத்தியும், அசைவம் சாப்பிடுவதால் வரும் சிக்கல்கள் குறித்தும் ஒரு காணொளியை எல்லா படங்களிலும் துவக்கத்தில் ஒளிபரப்பலாம்.
5. KFC, McD போன்ற நிறுவனங்களில் காட்சிகளையும், ஒரு ‘பாரத் மாதா கீ ஜே’ கோஷத்தையும், குறைந்தது ஒரு இஸ்லாமிய வில்லனையும் ஆண்டசாதி பெருமை வசனங்களையும் கொண்டிருக்கும் படங்களுக்கு வரிவிலக்கு அளிக்க அரசை வலியுறுத்தலாம்.
6. இஸ்லாமியர்கள், தலித்துகள், பெண்கள், பழங்குடியினர் ஆகியோருக்கு ஆதரவாக எடுக்கப்படும் படங்களை தடை செய்யும் தனி அதிகாரத்தை உருவாக்கிக் கொள்ளலாம்.
7. மது குடிக்கும் அற்புதமான காட்சிகளையும், ஐட்டம் நம்பர் பாடல்களையும் கொண்ட படங்களை நாட்டு நலன் கருதி தேசிய விருதுக்கு பரிந்துரைக்கலாம்.

எல்லா நல்ல விஷயங்களும் ஏதோவொரு நல்ல விஷயத்தில் இருந்துதான் தொடங்கும். அப்படி ஒரு நல்ல விஷயத்தை தற்போது சென்சார் தொடங்கி இருப்பதால், அடுத்த கட்டங்களாக, மேற்கூறியவற்றையும் குடிமக்களுக்கு நேரடி பலனை கொடுக்கும் இன்னும் பல யோசனைகளையும் முன்னெடுத்து நடைமுறைப்படுத்துமாறு சென்சாரின் காலில் விழுந்து நாம் கதறுவோமாக!

மிக முக்கியமாக, Censor Board என்ற பெயரை மாற்றி Senseless board என வைத்துக் கொண்டால் தேசவிரோதிகள் எழுப்பும் கேள்விகளில் இருந்தும் தொடுக்கும் வழக்குகளில் இருந்தும் தப்பி, தொடர்ந்து நம் கடமையை நாம் செய்து கொண்டிருக்கலாம் எனவும் சென்சார் போர்டுக்கு இந்த எழுத்தின் மூலம் வேண்டுகோள் விடுக்கிறோம்.
பாரத் மாதா கீ, ஜே!
ஜெய்ஹிந்த்!

RAJASANGEETHAN JOHN