“ஜெயலலிதா நலம்; நான் பார்க்கவில்லை; சொன்னார்கள்!” –திருமாவளவன்

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருக்கும் அப்போலோ மருத்துவமனைக்கு, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் இன்று வந்தார்.

அவர் மருத்துவமனைக்குள் பூங்கொத்துடன் போய்விட்டு, சிறிது நேரத்துக்குப்பின் பூங்கொத்து இல்லாமல் வெளியே வந்தார். அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ”கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக முதல்வர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் உடல் நலத்தை விசாரிக்க வேண்டும் என்ற அடிப்படையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அப்போலோ மருத்துவமனைக்கு வந்தோம்.

அப்போலோ மருத்துவமனையில் எந்த கெடுபிடியும் இல்லை. முதல்வர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள இரண்டாவது தளத்தில் பொதுமக்கள் இயல்பாக நடமாடுகிறார்கள். நான் அந்த இரண்டாவது தளத்துக்கு சென்றேன். அதிமுகவின் மூத்த தலைவர்கள் என்னை வரவேற்றார்கள். அவர்களோடு சில நிமிடங்கள் பேசிக்கொண்டிருந்தேன்.

முதல்வர் ஜெயலலிதா நலமுடன் உள்ளார் என்றும், ஒரு சில நாட்களில் வீடு திரும்புவார் என்றும் அதிமுகவின் மூத்த தலைவர்கள் என்னிடம் உறுதி கூறினார்கள்.

முதல்வர் ஜெயலலிதா விரைவில் நலம் பெறுவார் என்ற செய்தியை நேரில் வந்து அறிந்ததில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

முதல்வர் ஜெயலலிதா விரைவில் குணமடைய வேண்டும். வீடு திரும்பி, வழக்கம்போல் அரசியல் கடமைகளை ஆற்ற வேண்டும் என்று மனமுவந்து வாழ்த்துகிறோம்” என்று திருமாவளவன் கூறினார்.

“ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருக்கும் இரண்டாவது தளத்துக்கு சென்ற நீங்கள், ஜெயலலிதாவை சந்தித்தீர்களா?” என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, “இல்லை. அ.தி.மு.க.வின் மூத்த தலைவர்களைத் தான் சந்தித்தேன்” என்றார்.

“அந்த மூத்த தலைவர்கள் யார்?” என்று கேட்டதற்கு, “மூத்த தலைவர்கள். அவ்வளவு தான். பெயர் வேண்டாம்” என்றார் திருமாவளவன்.

இது குறித்து PALAI KARTHIK பதிவு:

“ஜெ.வை சந்திக்கவில்லை, நலமுடன் இருப்பதாக அதிமுகவினர் தகவல்: அப்போலோவில் தொல்.திருமாவளவன் பேட்டி!”.

நீங்களுமாண்ணே…?!