‘சி3’ வெளியீடு தள்ளிவைப்பு: “எல்லாம் நன்மைக்கே!” – சூர்யா

ஹரி இயக்கத்தில் சூர்யா, அனுஷ்கா, ஸ்ருதிஹாசன், சூரி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘சி3’. ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கும் இப்படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்திருக்கிறது. தணிக்கைப் பணிகள் முடிந்து, டிசம்பர் 23ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது.

இந்நிலையில், தணிக்கையில் ‘யு/ஏ’ சான்றிதழ் கிடைத்ததால் படக்குழு அதிர்ச்சியடைந்தது. பெரும் பொருட்செலவில் உருவான படம் என்பதால், ‘யு’ சான்றிதழ் கிடைத்தால் மட்டுமே வரிச்சலுகை பெற முடியும். இதனால், மறுதணிக்கைக்கு விண்ணப்பித்திருக்கிறது படக்குழு.

மறுதணிக்கை அதிகாரிகள் பார்த்து, சான்றிதழ் பெற்று டிசம்பர் 23ஆம் தேதி வெளியிட முடியாது என்பதால், பட வெளியீட்டை தள்ளி வைத்திருக்கின்றனர். திருப்பதியில் நடைபெறவிருந்த ‘சி 3’ விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சியும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

மேலும், ஜெயலலிதா மறைவு, வார்தா புயல் தாக்குதல், பண மதிப்பு நீக்கம் ஆகியவற்றால் சென்னை மற்றும் செங்கல்பட்டு விநியோக ஏரியாக்களில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதும் ‘சி 3’ வெளியீடு தள்ளிவைப்புக்கு காரணம் என்கிறார்கள்.

‘சி 3’ வெளியீடு தள்ளிவைக்கப்பட்டுள்ளது குறித்து கருத்து தெரிவித்துள்ள சூர்யா, ” ‘சி3’ வெளியீடு பல்வேறு காரணங்களால் தள்ளிவைக்கப்பட்டு இருக்கிறது. எல்லாம் நன்மைக்கே என நம்புவோம். உங்கள் அனைவரது ஆதரவும் தேவை” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

‘சி 3’ படத்தின் புதிய வெளியீட்டு தேதியை, மறுதணிக்கைப் பணிகள் முடிந்தவுடன் ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் அறிவிக்க திட்டமிட்டுள்ளது.

 

Read previous post:
0a1e
ஆஸ்கர் விருதுக்கான பரிந்துரை பட்டியலில் மீண்டும் ஏ.ஆர்.ரஹ்மான்!

2009ஆம் ஆண்டு வெளியான 'ஸ்லம் டாக் மில்லினர்' படத்தின் பின்னணி இசை மற்றும் 'ஜெய் ஹோ' பாடலுக்காக 2 ஆஸ்கர் விருதுகளை வென்று தமிழினத்துக்கு பெருமை சேர்த்தார்

Close