“சேரனின் பேச்சில் பணக்கார அரக்கத்திமிர் தெறிக்கிறது!”

“இலங்கை தமிழர்களுக்காக போராடியதை நினைத்தால் அருவருப்பாக இருக்கிறது” என்று தமிழ்  திரைப்பட இயக்குநரும், நடிகரும், தயாரிப்பாளருமான சேரன் கூறியுள்ளார்.

“திருட்டுத்தனமா படத்தை ஆன்லைனில் வெளியிடுறவங்க இலங்கை தமிழர்கள்ன்னு சொல்றாங்க. இலங்கை தமிழர்களுக்காக நாம திரையுலகமே ஒன்று சேர்ந்து குரல் கொடுத்து போராடி இருக்கோம். எங்களுடைய பல விஷயங்களை இழந்துட்டு போய் அவங்களுக்காக போராடி இருக்கோம். ஆனால் அதை சார்ந்த சிலர் தான் இதை பண்றாங்கன்னு கேள்விப்படுகிறபோது, ‘ஏண்டா இவர்களுக்காக இதை பண்ணினோம்’ என அருவருப்பாக இருக்கிறது” என்று சேரன் பேசியுள்ளார்.

சேரனின் இந்த பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து, முகநூலில் வந்துள்ள சில எதிர்வினைகள்:-

ஜி.விஜயபத்மா எழுத்தாளர் இயக்குனர்: தமிழ்நாட்டுல இருக்கிற 18000 திருட்டு டிவிடி கடைகளும் இலங்கைத் தமிழர்கள்தான் நடத்துகிறார்களா சேரன்?

போர்க்களத்தில் சாவின் விளிம்பில் ஊசலாடிக்கொண்டிருந்த ஈழத்தமிழர்களுக்காக..நீங்கள் ஒருநாள் போராடியதை அவமானமாகக் கருதுகிறீர்கள். ஆனால் நம் தமிழ் திரையுலகின் ஏ.ஆர்.ரஹ்மான், இளையராஜாவில் இருந்து நேற்று வந்த சூப்பர் சிங்கர்கள் வரை அத்தனை நடிகர் – நடிகைகளும் வெளிநாடுகளில் கலை நிகழ்ச்சி நடத்தி பணம் சம்பாதிப்பது இலங்கை தமிழர்கள் இடமிருந்துதான். அப்ப அதுக்கும் அவமானப்படுங்கள் சேரன்.

நம் ஊரில் வியாபாரத்தை சரி செய்யாமல், திரையரங்குகளை சரி செய்யாமல்,தொலைக்காட்சி உரிமைகளை சரி செய்யாமல், நடிகர் நடிகைகளின் சம்பளத்தை சரி செய்யாமல், வெளிநாட்டு உரிமை மொத்தமாக நான்கே பேரிடம் காலகாலமாக சிக்கிக்கொண்டு தவிப்பதை சரி செய்யாமல்… பிரச்சனையின் ஆழத்தை புரிந்து சரி செய்ய முயற்சிக்காமல், பாவப்பட்ட பரிதாபத்துக்குரிய ஈழத்தமிழர்களை குற்றம் சொல்வது..முட்டாள்தனம் சேரன்.

வறுமையின் கோரப்பிடியில் சிக்கி செத்து விடுவோமோ என்ற பயத்தில் ரொட்டியை திருடியவனைக் கட்டி வைத்து, அவனை ஆட்களை ஏவி அடித்துவிட்டு, “என் வீட்டு வைர நகையை திருடிவிட்டான்” என்று அபாண்டமாக பழியைப் போடும் பணக்கார அரக்கத்திமிர் உங்கள் வார்த்தைகளில் தெறிக்கிறது.

உங்கள் வார்த்தைகளை உங்களுடையதாக மட்டுமே வைத்துக் கொள்ளுங்கள். ஒட்டுமொத்த தமிழ் சினிமாவின் கருத்தும் இதுதான் என்று பதிவு செய்ய நினைக்காதீர்கள்.

பா.வெங்கடேசன்: சேரனா இப்படி பேசியது! நம்ப முடியவில்லை. தன்னுடைய சொந்த தொழிலின் நஷ்டத்தை கருத்தில்கொண்டு இலங்கை தமிழர் இன விடுதலை போராட்டத்தை சிறுமைப்படுத்த நினைப்பதை ஏற்க முடியவில்லை.

Deeparaj Raslaingam: சரி இவன் எப்போ போராடினான் ஈழத்துக்காக? எதை இழந்தான்? ஈழம் ஈழமென்று கத்தினதெல்லாம் அவங்கட வாழ்வாதாரத்தை உயர்த்திக்கொள்ளத்தான். மற்றப்படி ஈழத்துக்காக திரையுலகம் இல்ல… வேறு எவன் என்ன பண்ணியிருக்கான்? தமிழக முகாமில் சிறப்பு முகாம் உற்பட எல்லாவற்றிலும் நம்மட சனம் இருக்காங்க. அவகளுக்காக என்ன பண்ணினாங்க? சும்மா ஆ ஊ னா ‘ஈழத்துக்காக அதைப் பன்னினேன், இதை பன்னினேன்னு கூவுறானுங்களே… முன்னாள் போராளிகள் எத்தனை பேர் வாழ வழியின்றி வாழ்க்கையே திண்டாட்டமா இருக்கு… அதை எவனாவது பார்த்தானா?

நல்ல உணர்வாளனுக்கு அழகு, எது நடந்தாலும் செய்ததை சொல்லிக் காட்டாமல் இருப்பது. இவங்களுக்கும் கருணாநிதிக்கும் என்ன வித்தியாசம்? நீங்க இதுவரை நொட்டினது போதும். ஈழத்தை வைத்து வியாபாரம் செய்யாமல் உங்கட வேலையை பாருங்க. காலத்தின் கட்டளை எதுவோ அது நடந்தே தீரும்.

அலெக்ஸ் அலெக்ஸ் தமிழன்: இயக்குனர் சேரன் அவர்களுக்கு,,,,,,!

சமீபத்திய தங்கள் கருத்தால் ஒட்டுமொத்த ஈழத்தமிழர்களின் மனதை புண்படுத்தி விட்டீர். மரியாதைக்குரிய இயக்குனர்கள், நடிகர்கள் வரிசையில் ஈழ மக்களால் மிகவும் விரும்பப்பட்டும் மதிக்கப்பட்டும் இருந்தீர்கள். உங்களது படங்கள் வெற்றிவாகை சூடுவதற்கு ஈழத்தவர் பங்கும் அதிகமாக இருந்துவந்ததை தாங்கள் மறக்கக்கூடாது…!

ஒருவர் செய்யும் உதவி, அதை வெளியே சொல்லிக் காட்டாதவரைக்கும் அதற்கு மதிப்பு அதிகம்! தங்களின் கருத்து ஒட்டுமொத்த ஈழத்தமிழர்களையும் நோகடிக்க வைத்துவிட்டது.

உங்கள் கருத்தில் இருந்து ஒரு விடயம் மட்டும் புரிந்து கொள்ளக் கூடியதாக இருந்தது. அதாவது, ஈழமக்களுக்காக நீங்கள் செய்த போராட்டம் நிச்சயம் உங்கள் சுயநலத்திற்காகவே தவிர உண்மையான உணர்வுக்காக அல்ல என்பதை நீங்களாகவே உணர்த்திவிட்டீர்.

யாரோ எவரோ செய்த தவறுக்காக ஒட்டுமொத்த இனத்தை சாடுவது மகா முட்டாள்தனம். செய்தது ஈழத்தவன்தானா என்பதை உங்களால் நிரூபிக்க முடியவில்லை. ஏற்கனவே நொந்துபோய் இருக்கும் இதயங்களின் வலி உங்களால் உணர முடியாது

தமிழகத்தில் எமது உறவுகள் இன்றும் பல இன்னல்கள் மத்தியில் வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள். எமக்கென இருந்த ஒரு நாட்டை நயவஞ்சகமான இந்திய அரசின் சதியால் இழந்துவிட்டோம். மேலும் எங்களை துன்புறுத்தாதீர். நாங்கள் அகதியாக அலைந்து திரிவதற்கு உங்கள் இந்திய நாடும் ஒரு முக்கிய காரணம் என்பதை மறந்துவிடாதீர்.

உங்களால் முடிந்தால் திருட்டில் ஈடுபட்டவனை பிடித்து பொலீசில் ஒப்படைத்து தண்டியுங்கள். அதைவிட்டுவிட்டு, ஒட்டுமொத்த ஈழத்தமிழனை சாடாதீர்.

திரு.சேரன் அவர்களே… நாங்கள் எமது தலைவனிடத்தில் படித்த பண்புகள் அதிகம். அதை தவறான வழியில் போகவிட நாங்கள் விரும்பவில்லை! நீங்களும் எங்களை சோதித்துப் பார்க்க வேண்டாம் அதிகம்…!