“யார் நீங்க?”: – ரஜினியை ஒரு தமிழ் இளைஞன் கேட்டா, அது ஒரு கோடி இளைஞர்கள் கேட்ட மாதிரி!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக் கோரி மக்கள் நடத்திய 100-வது நாள் போராட்டத்தின்போது போலீசார் நடத்திய கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். ஏராளமானோர் படுகாயம் அடைந்து தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஸ்டெர்லைட் ஆலை முதலாளியின் கூலிப்படையாக மாறி போலீசார் நடத்திய வெறியாட்டத்தை மூடி மறைப்பதற்காக, கார்ப்பரேட் முதலாளிகளின் முகவர்களாக செயல்படும் மத்திய – மாநில அரசுகள், “சமூக விரோதிகள் ஊடுருவி கலவரம் செய்தது தான் துப்பாக்கி சூட்டுக்குக் காரணம்” என்ற பொய்யை திரும்பத் திரும்ப கூறிவருகின்றன.

இதே பொய்யை அழுத்தம் திருத்தமாக தூத்துக்குடி மண்ணில் நின்று சொல்ல வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் நடிகர் ரஜினிகாந்த், ‘துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் சொல்லப் போகிறேன்’ என்ற சாக்கில் திடீரென தூத்துக்குடிக்கு கிளம்பிப் போனார். அங்குள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறவர்களைச் சந்தித்தார்.

சிகிச்சை பெற்றுவரும் ஓர் இளைஞரிடம் ‘எப்படி இருக்கீங்க?’ என்று கேட்டார் ரஜினி. உடனே அந்த இளைஞர் ரஜினியைப் பார்த்து ‘யார் நீங்க?’ என்று கேட்க, ‘நான் தான்பா ரஜினிகாந்த்’ என்று ரஜினி சொல்ல, ‘அது தெரியுது. எங்கே இருந்து வர்ரீங்க? என அந்த இளைஞர் மீண்டும் கேட்டார். அதற்கு ரஜினி, ‘நான் சென்னையிலிருந்து வர்றேன்’ என்று சொன்னதும், ‘சென்னையிலிருந்து துத்துக்குடி வருவதற்கு நூறு நாள் ஆகுமா?’ என அந்த இளைஞர் கேட்க, ரஜினி முகம் வெளிறியது. என்ன சொல்வது என்று தெரியாமல் போலியாக சிரித்தபடியே அந்த இடத்தை விட்டு நகர்ந்தார் ரஜினி.

அந்த இளைஞர் பெயர் சந்தோஷ். அனைத்துக் கல்லூரி மாணவர்கள் கூட்டமைப்பின் தூத்துக்குடி ஒருங்கிணைப்பாளர். போலீஸாரின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலில் பலத்த காயமடைந்து தலையில் பத்துத் தையல்கள் போடப்பட்டு அவர் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

“நான் ஒரு தடவை சொன்னா, அது நூறு தடவை சொன்ன மாதிரி” என்ற ரஜினியின் பஞ்ச் வசன பாணியில், “ரஜினியை ‘யார் நீங்க’ன்னு ஒரு தமிழ் இளைஞன் கேட்டா, அது ஒரு கோடி தமிழ் இளைஞர்கள் கேட்ட மாதிரி” என்று பதிவிட்டு, சமூக வலைத்தள பதிவர்கள் சந்தோஷை கொண்டாடி வருகிறார்கள்.

0a1b